வெள்ளி, 25 ஜனவரி, 2013

ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

vinavu.com கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே  சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது. சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார்,  பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.
அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.
அவள் பெயர், ரிசானா நஃபீக்
ரிசானா-நபீக்
ரிசானா நபீக்
அவள் இலங்கையைச் சேர்ந்தவள். இசுலாமியத் தமிழ்ப் பெண். கிழக்கு இலங்கையில் இருக்கும் மூதூர் கிராமத்தில் ஒரு ஏழை முசுலீம் குடும்பத்தில் பிறந்தவள். 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அவள் தந்தையின் வருமானம் நின்று போகிறது;  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்குகிறது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் சிறுமி எனப் பெயர் வாங்கியிருந்த ரிசானா, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் போக்க வெளிநாட்டுக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதாக வீட்டாரிடம் தெரிவிக்கிறாள். அது 2005-ம் ஆண்டு.
1988 பிப்ரவரி  மாதம் பிறந்தவளான ரிசானாவுக்கு அப்போது 17 வயது தான் ஆகியிருந்தது. பிழைக்க வேறு வாய்ப்புகள் இல்லாத அக்குடும்பத்தை அணுகும் இடைத்தரகன் ஒருவன், ரிசானாவின் பிறந்த தேதியை 02-02-1982 என்பதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனடிப்படையில் கடவுச் சீட்டும், சவுதியில் வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வாங்கித் தருகிறான். 2005 மே 4-ம் தேதி ரிசானா சவுதி செல்கிறாள். சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாதமீசா  எனும் பகுதியைச் சேர்ந்த பணக்கார சவுதி ஷேக் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.
வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது உள்ளிட்ட வேலைகளோடு மூன்று மாதங்களே நிரம்பியிருந்த ஷேக்கின் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் கவனித்து வருகிறாள். அதே மாதம் 22-ம் தேதி 17 வயதே நிரம்பியிருந்த ரிசானாவின் பொறுப்பில் தனது  மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே செல்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. முன்பின் அனுபவமில்லாத ரிசானா, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டுகிறாள். சற்று நேரத்தில் அக்குழந்தைக்குப் புரையேறி மூக்கிலிருந்து பால் வடிகிறது. என்ன நேர்ந்தது என்பதை உணராத ரிசானா, குழந்தைக்கு நீவி விடுகிறாள். குழந்தை தூங்கி விட்டதாகக் கருதிக் கொண்டு வேறு வேலைகளில் மூழ்குகிறாள்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வரும் எஜமானி, குழந்தை இறந்து போயிருப்பதை காண்கிறாள் – ரிசானாவை அடித்துத் துன்புறுத்துகிறாள். தொடர்ந்து காவல் துறையிடம் கையளிக்கப்படும் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ரிசானா மொழி தெரியாத நாட்டில், நண்பர்களோ உறவினர்களோ இல்லாத சூழலில் ஒரு கொலைப்பழியை எதிர் கொண்டு நிற்கிறாள். போலீசாரும் கண்மண் தெரியாமல் அடித்து வாக்குமூலம் கேட்கிறார்கள் – தமிழ் மட்டுமே அறிந்திருந்த ரிசானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கிறார்கள். அடி பொறுக்க முடியாமலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் (சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள்) மொழிபெயர்த்துச் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமலும், அரபி மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலப் பத்திரத்தில் எழுதப்பட்டது என்னவென்று அறியாமலும் அதில் கையொப்பமிடுகிறாள் ரிசானா.
வழக்கு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுகிறார். ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுக்கிறாள். அரபு தேசத்தில் நடந்த அந்த விசாரணையில், அரபிக் குடும்பம் தொடுத்த வழக்கில், தனது தரப்பில் வாதாட யாருமே இல்லாமல் ரிசானா நிர்கதியாக நின்ற நிலையில், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்னவென்பதையே புரிந்து கொள்ள முடியாமல் ரிசானா தவித்துக் கொண்டிருந்த நிலையில், அரபு போலீசார் முன்வைத்த ‘ஆதாரங்கள்’ மற்றும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடந்த அந்த ஒரு தலைப்பட்சமான விசாரணைகளின் முடிவில் அவளுக்கு ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அது 2007-ம் ஆண்டு ஜூன்மாதம்.
2005-ம் ஆண்டு மே மாதத்திலிருந்தே சிறையிலடைக்கப்பட்ட ரிசானாவின் நிலை சுமார் ஓராண்டு காலம் வெளியுலகுக்கே தெரியவில்லை. அவளது வீட்டாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. ஹாங்காங்கைத் தலைமையகமாய்க் கொண்டு செயல்படும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தான் முதலில் இதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் இது சர்ச்சைக்குள்ளாகி விட்டிருந்த நிலையில், இலங்கையிலும் மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், இலங்கை அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரிசானாவை விடுதலை செய்யக் கோருகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கூட மக்கள் போராட்டங்களுக்காக கொஞ்சம் ‘மனமிறங்கி’ சவுதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்புகிறார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு மேற்குலகின் பிரபலங்களும் ரிசானாவை விடுவிக்க வேண்டுமென்று கோருகிறார்கள்.
குழந்தையின் பெற்றோர் இறந்த தமது குழந்தைக்கு பதிலாக ரிசானாவிடமிருந்து ‘குருதிப் பணம்’ பெற்றுக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தால், ஷரியா (ஷரியத்) சட்டப்படி அவள் சிரச்சேதத்திலிருந்து தப்ப முடியும் என்று ஷரியா சட்டம் கூறுகிறதாம். உடனே, சவுதி இளவரசர் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதெல்லாம் மரண தண்டனையை தவிர்ப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று சவுதி அரசு கூறுபவை.
ரிசானாவின் உறவினர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் அந்தப் பெற்றோருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களும் மன்றாடல்களும், அல்லாவிடம் செய்யப்பட்ட துஆக்களும் ரிசானா மீண்டும் ஊர் திரும்புவாள் என்று வைத்த நம்பிக்கைகளும் பயனற்றுப் போயின. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:40க்கு ரிசானாவின் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது. காண்போர் பதைபதைக்க அல்லா அருளிய ஷரியத் சட்டப்படி பச்சையாய்ப் படுகொலை செய்யப்பட்டாள்.

ஷரியத் சட்டத்தை முன்வைத்து நடக்கும் வெட்டி விவாதங்கள்!

ரிசானாவின் படுகொலை உலகெங்கும் கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இசுலாமிய ஷரியத் சட்டங்கள் சரியா தவறா என்பதைச் சுற்றி இவ்விவாதங்கள் நடந்து வருகின்றன. முசுலீம்களில் கடுங்கோட்பாட்டுவாதிகளான வகாபிகள் தவிர மற்றவர்களால் ரிசானாவின் கொலையை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களில் ஜனநாயக பூர்வமாகச் சிந்திக்க கூடிய மிகச் சிலர் மட்டும் இந்த தண்டனையை மாத்திரமின்றி, இதற்கு அடிப்படையாய் இருக்கும் ஷரியத் சட்டங்களையே கூட கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கிறார்கள்.
வகாபிகள் அளவுக்கு கடுங்கோட்பாட்டுவாதிகளாக இல்லாவிட்டாலும், இசுலாமிய சட்டங்களின் மேல் விசுவாசம் கொண்ட பலரும் இந்தக் கொலைக்குப் பல்வேறு வகையான வியாக்கியானங்களைத் தருகிறார்கள். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம் -
  1. குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிசானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுததப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்து விடுவார். அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்திருந்தால் அதனடிப்படையில் அவர் உயர்ந்த சொர்க்கத்தை அடைவார்.
  2. அவள் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாவிடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வாள்.
  3. அறிந்து கொண்டே அவளுக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாவின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
  4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லா வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?
அதாவது அனைவரின் கண் முன்பாகவே இகலோகத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு யாருமே காணாத பரலோகத்தில் தண்டனை வழங்கப்படும் என்று நம்ப வேண்டுமாம். ரிசானாவைப் போன்ற ஏழைகள் – மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் -  ஷேக் குடும்பங்களைச் சாராதவர்கள் அநியாயமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டால் ‘சொர்க்கம்’ கிடைக்குமாம்; யாருக்குத் தேவை அந்தச் சொர்க்கம்? ‘உளச் சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் வாழ்நாள் முழுக்க, மேல் வருணத்தாருக்கு நீ பீ அள்ளிக் கொண்டேயிருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் வருண புரமோசன் கிடைக்க கூடும்’ என்று கூறும் மனுநீதியின் அரபு மொழியாக்கம் தான் இந்த வாதங்கள்.
சுலாமிய மதவாதிகளின் தரப்பிலிருந்து இப்படுகொலையை ஆதரித்து வைக்கப்படும் அயோக்கியத்தனமான வாதங்களை உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் இதழில் எழுதி வரும் ‘எதிர்குரல்’ எனும் தொடரில் கண்டித்திருந்தார். வழக்கின் விவரங்களை நேர்மையாக அலசும் மனுஷ்யபுத்திரன், மனிதாபிமானமற்ற விதத்தில் ரிசானா கொல்லப்பட்டது எவ்வகையிலும் நியாயமில்லை என்கிறார். ‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்கிற பழங்காலத்திய இனக்குழு சமூகங்களின் தண்டனை முறைகளை அப்படியே இன்றும் பின்பற்றுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்.
மனுஷ்யபுத்திரனின் கட்டுரை வெளியானதும் அதை எதிர்த்து காட்டு மிராண்டித்தனமான எதிர்வினை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த வகாபியர்களிடமிருந்து எழுகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன், தனது தளத்தில் கிட்டத்தட்ட  மனுஷ்யபுத்திரனை கொன்று போட வேண்டும் என்ற தோரணையில் இரத்தவெறி பிடித்து எழுதியிருந்தார்.  மேற்கோள் காட்டுவதற்கோ விவாதிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியோ தராதரமோ இல்லாத நாலாந்தர பொறுக்கியின் மொழியில் ஏகவசனத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையின் சுருக்கமான சாரம் இது தான் – “டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படி கொன்றால் மன்னிப்பாயா?”
மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை
மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை

இத்துப்போன மதச் சட்டத்துக்கு விளக்கம் எதற்கு?

ஷரியத் சட்டங்கள் சரியானது தான் என்று நிறுவும் நோக்கம் கொண்ட மேற்படி வாதங்களில் இருக்கும் அபத்தங்களை ஆராய்ச்சி செய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். எனினும் ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியரின் இரத்தவெறி பிடித்த காட்டுக்கூச்சல்களின் முன் சில எளிய கேள்விகளை முன்வைக்கிறோம்.
ஈராக்கில் போர் துவங்குவதற்கு முன்பதாகவே பொருளாதாரத் தடை விதித்து மருந்துப் பொருட்களைத் தடுத்து ஐந்து இலட்சம் இராக்கிய குழந்தைகளை சாகடித்தது அமெரிக்கா. இதையெல்லாம் சவுதி அரசின் இடம், பணம், பொருள், ஆள்பல உதவியுடன்தான் அமெரிக்கா செய்தது.
ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் இறப்புக்காக இந்த அளவுக்குத் துள்ளிக்குதிக்கும் பீ.ஜே, அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டு உலகெங்கும் இசுலாமிய மக்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற சவுதி அரசை தண்டிக்க, இசுலாமிய சட்டத்தில் என்ன ஷரத்துகள் இருக்கின்றன என்று இவர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யாத காரணம் என்ன?  ’காஃபீர்களோடு’ கைகோர்த்து நிற்கும் சவுதி ஷேக்குகளின் பணத்தில் மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்துவதைக் காட்டிலும், மானங்கெட்ட வேலை எதுவுமில்லை என்றும், அப்படி காசு வாங்குபவன் இசுலாமியனே இல்லை என்றும் இவர்கள் ஏன் கூறுவதில்லை.
ஷரியத்தின் படி அந்தக்காசையெல்லாம், இராக் மக்களின் சார்பில், குருதிப் பணமாக வரவு வைத்துக் கொண்டு, சவூதி ஷேக்குகளின் குற்றத்தை மன்னித்துவிட்டார்களா பி.ஜே க்கள்?
ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்
மிகவும் விரிவான வாழ்வியல் வழிகாட்டுதல்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் ஷரியத் சட்டங்களின் படி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாக இசுலாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் அரபு தேசங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது சந்திக்கும் பாலியல் கொடூரங்களுக்காக சவூதி ஷேக்குகள் எத்தனை பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன?
ஆப்கானிய தாலிபான்கள் ஷரியா சட்டப்படி பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள், ஆண் துணையின்றி வெளியிடங்களுக்குச் சென்றாலே பெண்களைக் கொன்று போடுகிறார்கள் – ஆனால், அரபு தேசங்களோ மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து இசுலாமிய சிறுமிகளை வேலைக்கு தருவித்துக் கொள்கிறார்கள். அவர்களைச் சுரண்டுகிறார்கள்: பாலியல் வக்கிரங்களுக்கு கிடைத்த இலவசமான அடிமைகளாக கருதி அந்த பிஞ்சுகளைக் குதறுகிறார்கள்.
வெளி வேலைக்கு ஒரு பெண் விமானமேறுவதை ஷரியா அனுமதிக்கவில்லையென்றால், வளைகுடா ஷேக்குகள், இசுலாமிய ஏழைச் சிறுமிகளை எப்படி இறக்குமதி செய்கிறார்கள்? ஆண்கள் கூப்பிடுவது குற்றமில்லை, பெண்கள் போவதுதான் குற்றம் என்கிறதா இவர்களது சட்டம்? பரவாயில்லையே, நம்மூர் விபச்சார தடை சட்டம் மாதிரியே “நடுநிலையாக” இருக்கிறதே!
“இந்த விசயத்தில்” அல்லாவுக்கு பயந்து, நடந்து கொள்ள விரும்பும், 60, 70 வயதுக்கு மேற்பட்ட உண்மையான முஸ்லிம்கள், (ஷேக்குகள்,) 15 வயது சிறுமியாக இருந்தாலும் நிக்கா செய்து ஐதராபாத்திலிருந்து அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நிக்கா செய்து அழைத்துப் போவதால், இகலோகத்தில் பாஸ்போர்ட் விசா பிரச்சினையும் இல்லை. ஷரியா படி நடந்து கொள்வதால் சுவனத்தில் போதுமான பெண்களும் கிடைப்பதற்கும் உத்திரவாதம் உண்டு. இதெல்லாம் பி.ஜே போன்ற ஷரியா கன்சல்டன்சி சர்வீசஸ் நடத்துவோர் கொடுக்கும் ஐடியாவா, அல்லது டிராவல் ஏஜென்சி நடத்தும் முஸ்லிம்கள் கொடுத்த ஐடியாவா தெரியவில்லை.
குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல. நம்மைப் பொருத்தளவில் பார்ப்பன மனுநீதியை எந்த அளவுக்கு ம(மி)திக்கிறோமோ அதே தகுதியைத்தான் ஷரியத்திற்கும் ஒதுக்கியிருக்கிறோம்.
“இந்து சட்டம் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட அனுமதித்த்து. எங்கள் சட்டம் நான்கோடு உச்ச வரம்பு விதித்து விட்டது. அப்படிப் பார்த்தால் நாங்கள் தானே முற்போக்கு” என்று இசுலாமிய நண்பர்கள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்புறம் எங்கள் மதச்சட்டப்படி உச்ச வரம்பு 3 என்று யாராவது வருவார்கள். இன்னொருவன் எங்கள் மதத்தில் எல்லோரும் பாச்செலர்தான் என்பான். இந்த லூசுத்தனங்களின் பின்னால் மூச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல நமது வேலை.
மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் எனப்படுபவை அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவை. 7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி அவருக்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினார். அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அதன் கதை அன்றோடு முடிந்தது. இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.
ஆனால் ஜெய்னுல்லாபிதின் முதலான வகாபியர்கள் அந்த ஏழாம் நூற்றாண்டு விதிப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று பரிதாபத்திற்குரிய இசுலாமிய மக்களுக்கு கட்டளை போடுகிறார்கள். இல்லையென்றால் பத்வா விதித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் எழுதியுள்ள காட்டுமிராண்டித்தனமான மிரட்டலை பார்த்தால் போதும். இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் மாட்டிக் கொண்டால் தமிழ்நாட்டில் ஏழை முஸ்லிம்கள், தலையில்லாமல் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணக்கார முஸ்லீம்கள், பி.ஜே யிடம் பணம் கட்டி, சொர்க்கத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்கிவிடுவார்கள்.
ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியர்கள் இப்படியெல்லாம் இரத்த வேட்கையுடன் ஊளையிடுவதற்கு காரணம் இல்லாமலில்லை.
பி ஜெயினுலாதீன் பிளாக்
பி ஜெயினுலாபிதீன் இணைய தளம் ஆன்லைன் பிஜெ

யார் இந்த வகாபியர்கள் ?

வகாபிசம் அல்லது சலாஃபியிசம் என்று அழைக்கப்படும் சுன்னி இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் பிறப்பிடம் அரேபியத் தீபகற்பம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முகம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வகாபிசம் எனும் இந்த மதப்பிரிவு. மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும் கஞ்சிக்கே வழியில்லாத பொருளாதாரமும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில் நம்மூர் பாளையக்காரர்கள் போல கும்பல் கும்பலாய்ப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதில் திரிய்யா எமிரேட் எனப்படும் பகுதியின் இளவரசரான முக்கம்மது இப்னு சவூத்தோடு கைகோர்க்கும் வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை  அடிப்படையாக வைத்து இசுலாமிய நாடு ஒன்றை உருவாக்க முனைகிறார்.
1744ல் திரிய்யா எமிரேட் சவுதி அரசானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச் சண்டைகளில் இறங்குகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவிய தர்ஹா வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசுலாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக் கட்டுகிறார்கள். சவுத்தின் அதிகாரம் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் எகிப்திய தளபதியினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி சவுத் வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.
முதலாம் உலகப் போரின் சமயத்தில் நேசநாடுகளுக்கு (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) எதிரணியான அச்சுநாடுகளோடு (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) இருக்கிறது துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு. இந்நிலையில் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அரேபிய பகுதியைச் சேர்ந்த குட்டிக் குட்டி பாளையக்காரர்களில் சிலர் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கிலாந்தை ஆதரிக்கின்றனர். அதில் முதன்மையாக இருக்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவருக்கு துணையாக நின்றது வகாபிய அடிப்படைவாதத்திற்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர்.
வஹாப் மற்றும் சவூத் குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை பரஸ்பர திருமண பந்தங்களின் மூலம் இணைந்துள்ளன – இவர்கள் தாம் சவுதி அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்துகிறார்கள்.
மேலும் விரிவான வாசிப்புக்கு
அமெரிக்க – சவுதி காதல் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவுதி மன்னருடன்
அமெரிக்க - சவுதி காதல் கதை20ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிடயே அதைக் கைப்பற்றும் நாய்ச்சண்டை மூள்கிறது. இதில் சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவின் காலில் சரணாகதியடைகிறது. எண்பதுகளில் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டியடிக்க நேரடியாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாஹித்தீன் குழுக்களுக்கு அமெரிக்க உத்தரவின் படி, ஆள் பலம் முதல் மத அடிப்படையிலான தத்துவ அடிப்படை வரை வழங்கியதும் இசுலாமிய மதவெறியையும் ஊட்டியதும் சவுதியைச் சேர்ந்த வகாபிகளே.
மட்டுமின்றி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய செல்ல ரவுடியாக செயல்பட்ட இசுரேலுக்கும் சவுதி நேரடியான நட்பு நாடாகவும் அடியாளாகவும் விளங்கி வருகிறது. ஈரான், சிரியா, லெபனான் என்று எங்கெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடியாட்களும் கூலிப்படையும் தேவையோ அங்கெல்லாம் முன்னின்று உதவிக்கு வருவது சவுதி அரசும் அதன் வகாபிய தத்துவமும் தான்.
உலகெங்கும் இசுலாம் அல்லாத மக்களிடையே எழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நிறுவனமயமாக்கி நீர்த்துப் போகச் செய்ய என்.ஜி.ஓக்களை அமெரிக்கா நம்பியிருக்கிறதென்றால், இசுலாமியர்களை அரசியல் ரீதியில் காயடிக்க சவுதி வகாபியம் உதவி செய்கிறது. சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நேரடியாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது என்றால், அவற்றில் பங்குகளைக் கொண்டிருக்கும் ஷேக்குகள் தங்கள் வருமானத்தை முதலீடு செய்வதும் அமெரிக்காவில் தான். அமெரிக்கப் பங்குச சந்தையில் மட்டுமின்றி, வால்வீதியின் முக்கியமான நிதிமூலதன வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் பங்குகளிலும் ஷேக்குகள் தங்கள் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இராணுவ ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடையுமானால் அது அரபி ஷேக்குகளையும் தன்னோடே பாதாளத்திற்குள் இழுத்துச் சென்று விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள் இருவரின் நலனும் பிரிக்கவொண்ணாதபடிக்கு பரஸ்பரம் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.
ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் குழுமத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகெங்கும் அமெரிக்கா நடத்தும் இசுலாமிய நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சாதகமாக கருத்துப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆதரவான பொதுக்கருத்தைக் கட்டமைப்பது இந்த ஸ்டார் குழுமம் தான். இதில் பிரதான பங்குதாரர், சவுதி இளவரசர். அந்த வகையில் இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலமாக சித்தரிப்பதற்குத் துணை போகும் சவுதி ஷேக்குகள், மறுபுறம் தூய இசுலாம்  எனும் பெயரில் வகாபியிசத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள்.
உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் இசுலாமியச் சடலங்களிலிருந்து வழிந்தோடும் குருதியில் சவுதி அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. அந்தப் பங்கிலிருந்து கிள்ளிக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான டாலர்களில் தான் வகாபிய மதரஸாக்களும் பள்ளி வாசல்களும் கொழிக்கின்றன. ஜெய்னுல்லாபிதின்கள் மஞ்சக்குளிக்கிறார்கள்.
எண்பதுகளில் பாகிஸ்தானில் முஜாஹித்தீன்களை அறுவடை செய்ய அமெரிக்கா உருவாக்கிய மதரஸாக்கள் இன்று அதற்கு தலைவலியாக உருவெடுத்திருப்பதாக சிலர் கணிக்கிறார்கள். ஆனால், தன்னால் உருவாக்கப்பட்ட இந்தக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் நடவடிக்கைகளையே நாகரீக உலகத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்து அதையே தனது ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான நியாயமாகவும் அமெரிக்கா முன்னிருத்துகிறது. இந்த மேட்ரிக்ஸ் உலகில்  அமெரிக்க ஹீரோ தான் இசுலாமிய பூச்சாண்டியின் கர்த்தா. அந்தப் பூச்சாண்டியின் சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அமெரிக்கா வைத்திருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு.
இந்தப் பின்னணியில் வைத்துத் தான் உலகெங்கும் விஷம் போல பரவிவரும் வஹாப்பியத்தை நாம் ஆராய வேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட வஹாபிய அடிப்படைவாதிகள் இசுலாமியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குப் போராடுவதில்லை. கோகோ கோலா, டிஷ் ஆன்டனா, உலகமயமாக்கம் ஆகியவை குறித்து இசுலாம் என்ன சொல்கிறது என்று கூறுவதில்லை. தூய இசுலாமியர்கள் இப்படி சைத்தான் தனமான கேள்விகளைக் கேட்பதும் இல்லை.
கடுங்கோட்பாட்டுவாத நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப் போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகள் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஜெய்னுல்லாபிதின் போன்றவர்கள் முன்னின்று அதைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்தக் கடுங்கோட்பாட்டுவாத வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல் அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
பீ.ஜே தளத்தில் வெளியாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கான எதிர்வினையில் தொனிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அவதானித்திருப்பீர்கள். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது. இதன் விளைவுகளை பீ.ஜே எதிர்கொள்ளப் போவதில்லை – சாதாரண உழைக்கும் வர்க்கத்து இசுலாமியர்கள் தான் எதிர்கொள்ளப் போகிறார்கள்.  இந்தியாவில் இந்து பயங்கரவாதம் தன்னளவிலேயே ஒரு பாசிச அரசியல் அடிப்படையைக் கொண்டிருந்தாலும், மேலதிகமாக சாதாரண உழைக்கும் மக்களிடம் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித் தரும் வேலையை பீ.ஜே போன்றவர்கள் செய்கிறார்கள்.
ஆதிக்க சாதியில் பிறந்த ஜனநாயகவாதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழும் போது அதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஒரு ஜனநாயகவாதி என்கிற வகையில் அது தான் அவர்களின் முதன்மையான கடமை. அதே போல் இசுலாமியர்களில் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் முன்னின்று பீ.ஜே உள்ளிட்ட கடுங்கோட்பாட்டுவாதிகளையும், ஷரியத் சட்டத்தையும் எதிர்க்க வேண்டும். இசுலாமிய மத அடிப்படைவாதத்தால் வெட்டி வீழ்த்தப்பட்ட ரிசானாக்களின் தலைகளுக்கு அது தான் நாம் கொடுக்கக் கூடிய நேர்மையான பதிலாக இருக்க முடியும்.
ஆனால் ஜைனாலுபிதீன் போன் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் இசுலாமியராக பிறந்து ஷரியத்தையும், கடுங்கோட்பாட்டு வாதத்தையும் எதிர்க்கும் இசுலாமியர்கள் மிகக் குறைவு. இதுதான் தவஹீத் ஜமாஅத்துக்களின் பலம். இந்நிலையில் பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும் மனுஷ்ய புத்திரன் வெளிப்படையாக இவர்களை மட்டுமல்ல இவர்கள் புனித ஜல்லி அடிக்கும் இசுலாமிய மத பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கிறார். அதுதான் அவர் மீது இவர்கள் கொள்ளும் கொலைவெறிக்கு அடிப்படை.
நாம் மனுஷ்யபுத்திரனை ஆதரிப்பதோடு குறிப்பாக இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக தவஹீத்தையும், பிஜேவையும், ஷரியத்தையும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையெனில் இசுலாமிய மக்களை ஒரு இருண்ட காலத்தில் மூழ்க வைத்து ஷரியத்தின் பெயரில் அவர்களை ஆயுள் கைதிகளாக்கி தொடர் விளைவாக இந்து மதவெறியர்களை மனங்குளிர வைக்கும் ஆபத்திற்கு நீங்கள் துணை போனதாக வரலாறு உங்களை கேள்வி கேட்கும்.
இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக பேச வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நட்புடன் முன்வைக்கிறோம்.
பின்குறிப்பு:
1. இந்தப் பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பின், அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது ஜெய்னுலாபிதினுக்கே! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
2. ‘விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று பி.ஜே உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், ரிசானா விவகாரத்தில் ‘நாங்கள் பயங்கரவாதிகள்தான்’ என்று பி.ஜெயினுலாபிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய மதவாதிகள் வெளிப்படையாகக் கூவுகின்றனர். இவர்களைக் கண்டிக்காமல் விஸ்வரூபத்தை மட்டும் எதிர்க்க முடியுமா?

கருத்துகள் இல்லை: