புதன், 23 ஜனவரி, 2013

கமலின் விஸ்வரூபம்: “இஸ்லாத்துக்கு எதிராக தொடக்கம் முதல் இறுதி வரை காட்சிகள்”

Viruvirup
கமலின் விஸ்வரூபம் படத்துக்கு அடுத்த பிரச்னை. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும், “விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களையும், திருக்குரானையும் இழிவுபடுத்தி சித்திரித்திருப்பதால் இப்படத்தை வெளியிட விட மாட்டோம். தடுத்து நிறுத்துவோம்” என  எச்சரித்துள்ளன.
மேலும் இதுதொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் அவை அழைப்பு விடுத்துள்ளன.
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கலாம் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும் இப்படம் இஸ்லாமியர்களைப் பெருமைப்படுத்துவதாகவே அமையும் என்று கமல்ஹாசன் கூறினார். அதையே இப்போதும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர் விஸ்வரூபம் படம் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், “படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது” என்று தமது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
“திருக்குரான், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் விஸ்வரூபம் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போலவும் படத்தில் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன” என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், “கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்” என்கிறது.
இது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், எமக்கு இஸ்வாமிய அமைப்புகளிடம் இருந்து வந்துள்ள அறிக்கைகள் எதிலும், இந்த அவசர கூட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் ஏதுமில்லை.
இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியாவில் இல்லை. நாளை (வியாழக்கிழமை) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் விஸ்வரூபம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி, ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக திரையிடப்படுகிறது. அதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: