திங்கள், 21 ஜனவரி, 2013

தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்

தமிழகத்தில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதால், அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக குறைந்துஇருந்த குழந்தை திருமணங்கள், மீண்டும் தலைதூக்கி வருகிறது. அதுவும், சில மாதங்களாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், சிவகங்கை, விழுப்புரம், திருவள்ளூர் போன்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறட்சி மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே காரணம். குறிப்பிட்ட பகுதியில் திருமணம் நடக்கிறது என, தெரிந்தவுடன், அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தாமல், தாமதப்படுத்துகின்றனர். அதனால், அதிகாரிகள் செல்வதற்கு முன், திருமணம் நடந்து முடிகிறது.சில இடங்களில், அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினாலும், அதன் பின், ஒரு வாரத்திற்குள் திருமணம் நடக்கிறது.கிராம புறங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம், குழந்தை திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை.முற்றிலும் தடுப்பது எப்போது?
பெண் குழந்தைகளை, இன்னும் தங்களின் பாரமாகவே கருதுகின்றனர்.பல கிராமங்களில், பெண்களின் முன்னேற்றத்திற்காக, அரசு தீட்டிய திட்டங்கள், அதற்கான சலுகைகள் பற்றி, விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை. இதனால், தங்களின் நெருங்கிய உறவுக்குள்ளே, திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, சமூகநலத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் நடக்க இருந்த, 1,500 குழந்தை திருமணங்களை தடுத்திருக்கிறோம். இப்பிரச்னையை தடுப்பதற்கு, அதிகாரிகள் தீவிரமாக வேலை பார்த்து வருகிறோம். ஒரு சில இடங்களில், எங்களின் கவனத்தையும் மீறி, திருமணங்கள் நடந்து விடுகிறது.பல இடங்களில், திருமணம் நடக்க இருக்கும், அரை மணி நேரத்திற்கு முன் சென்று, திருமணத்தை தடுத்து இருக்கிறோம். இனிமேல், நடவடிக்கைகள் தீவிரமாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தீர்வு - முத்தரப்பு குழு :

ஒவ்வொரு ஒன்றியத்திலும், சமூகநலத் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அப்பகுதி பொதுமக்கள் அடங்கிய முத்தரப்பு குழுவை அமைக்கலாம். திருமண பத்திரிக்கை அச்சிடும் போது, மணமகன், மணமகள் வயதை குறிப்பிடுவது கட்டாயமாக்க வேண்டும். வயது குறிப்பிடாமல், அழைப்பிதழ் அச்சிடும் அச்சகத்தின் உரிமை ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கலாம். கல்வித் துறை மூலம், பள்ளி படிப்பை இடையில் நிறுத்தும் குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து, அதற்கான காரணங்களை ஆராயலாம்.


திருமணத்தை நிறுத்திய மாணவி :

கடந்த ஆண்டு, பட்டாபிராம் பகுதியில், பிளஸ் 1 மாணவிக்கு, மனநிலை சரியில்லாத தாய்மாமனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதை அச்சிறுமி எதிர்த்த போது, வீட்டுக்குள் அடைத்து பூட்டப்பட்டாள். உடனே, தன்னுடைய நிலையை விளக்கி, நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினாள்.அவளுடைய நண்பர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்து, திருமணத்தை நிறுத்தினர். பெற்றோரை கண்டித்த போலீசார், தடையை மீறி திருமணம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து அனுப்பினர். எஸ்.எம்.எஸ்., அனுப்பி, திருமணத்தை தடுத்த அப்பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.- நமது நிருபர்
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜன-201303:51:58 IST Report Abuse
தமிழவேல் இதுபோல திருமணம் செய்தால் சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் என்றாவது ஒருநாள் (பலவருடங்கள் கழித்தும்) அந்தப்பெண் அவளது கணவன் , தனது பெற்றோர் , மாமனார் மாமியார்மீதும் வழக்கு தொடர முடியும் என்ற தோரணையில் சட்டங்கள் இயற்றப் படவேண்டும்...
dinamalar.com

கருத்துகள் இல்லை: