அமெரிக்க பங்குச் சந்தை மோசடி:
வாஷிங்டன்: அமெரிக்க பங்குச் சந்தையில் தனது நண்பரும்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பங்குத் தரகருமான ராஜ் ராஜரத்தனத்துடன்
இணைந்து உள்பேர வர்த்தகத்தில் ஈடுபட்ட அமெரிக்க வாழ் இந்தியரும் கோல்ட்மென்
சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான ரஜத் குப்தா குற்றவாளி என
நியூயார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அவருக்கு 25 வருட சிறை
தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதி விவரங்கள் குறித்து உள் தகவல்களை (Insider trading) அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக ராஜ் ராஜரத்தினம் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
(ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை முறைகேடான வழிகளில் முழுமையாக அறிந்து வைத்து அதன் பங்குகளை வாங்குவதும், விற்பதும் தான் இன்சைடர் டிரேடிங்)
இந்த மோசடியில் ராஜரத்தினத்துக்கு உதவிதாக ரஜத் குப்தா மீதும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ரஜத் குப்தா தான் பணியாற்றிய கோல்ட்மென் சேக்ஸ், புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்சைர் இன்வெஸ்ட்மென்ட், மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை கலியோன் ஹெட்ஜ்ஃபண்ட் நிறுவனரான ராஜரத்தினத்துக்கு அளித்துள்ளார்.
(பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க பல வகையான நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் தான் ஹெட்ஜ் பண்ட்)
இதை அடிப்படையாக வைத்து ராஜரத்னம் இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை சரியாக இருக்கும்போது பங்குகளை வாங்கிக் குவித்தார். இவற்றின் நிலை நிலைமை சரிந்தபோது பங்குகளை விற்றுவிட்டார். இதன்மூலம் ராஜரத்னம் பல பில்லியன் லாபம் அடைந்தார். ஆனால், பங்குச் சந்தையில் மற்ற முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்தினார்.
இதற்காக ரஜத் குப்தா உள்ளிட்டோருக்கு ராஜரத்தினம் ஏராளமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
ரஜத் குப்தா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானவுடன் அவர் தலைமறைவானார். பின்னர் அவர் காவல் துறையினரிடம் சரணடைந்து, விசாரணை ஆரம்பமானது. இதில் அவர் மீதான 6 குற்றச்சாட்டுகளில் 4 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மன்ஹாட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்களுக்கான தண்டனை விவரம் அக்டோபர் மாதம் 18ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றங்களுக்கு அதிபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக