புதன், 20 ஜூன், 2012

திட்டகமிசனின் வெட்டிசெலவு 5 star tolilet 35லட்சம்

தி இந்து பத்திரிகையில்“கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை என்ற கட்டுரையை பி.சாய்நாத் எழுதியிருந்தார். அதைப் படிக்காதவர்கள் இணைப்பிலுள்ள கட்டுரையை (தமிழ்) படித்து விடுங்கள். அந்தக் கட்டுரைக்கு திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மறுப்பு எழுதியிருந்தார். எங்கப்பன் குதிருள்ளுக்குள் இல்லை என்ற இந்த பித்தலாட்டத்தை மறுத்து சாய்நாத் எழுதியிருக்கும் விளக்கமும் இந்து பத்திரிகையில் வெளியாயிருந்தன. அவற்றின் மொழியாக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்.

அலுவாலியாவின் விளக்கம்

திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com
“கோட்டு சூட்டு கனவனான்களின் எளிய வாழ்க்கை” (தி இந்து மே 21, 2012)கட்டுரையில் இரண்டு விஷயங்கள் வாசகர்கள் தவறாக புரிந்து கொள்ளும்படியாக திரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றைக் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நான் உங்கள் செய்தித் தாள் மீது பெரு மதிப்பு கொண்டுள்ளதோடு அரசாங்கத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அந்த உணர்வின் அடிப்படையில் உங்கள் வாசகர்களுக்கு பலனளிக்கும்படியாக என்னுடைய விளக்கங்களை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரையின் முதல் பிழை, நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான தினசரிச் செலவை டெண்டுல்கரின் வறுமைக் கோட்டுடன் ஒப்பிட்டது. பேராசிரியர் டெண்டூல்கரின் வறுமைக் கோடு ஒரு குடும்பத்தின் மாத வரவு செலவின் அடிப்படையிலானது, நாள் அடிப்படையிலானது இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மோசமான ஊதாரித்தனத்தை சித்தரிக்கும் நோக்கத்தில் இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணமும் முக்கிய தலைநகரங்களின் ஹோட்டல்களில் தங்குவதும் மிகவும் செலவு பிடிப்பவை என்பதில் ஐயமில்லை. விமானப் பயணத்திற்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கும் எந்த வகுப்பை பயன்படுத்த வேண்டும் என்பது என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்துவதான அரசு விதிகளின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப்படுகின்றன.
வெளிநாட்டுப் பயணம் செலவு பிடிக்கக் கூடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை, ஆனால், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அடிக்கடி வெளிநாடுகள் போவது தேவையாகிறது. வெளிநாட்டில் செலவிடும் ஒவ்வொரு நாளிலும் 14 மணி நேரத்துக்கு சந்திப்புகள், விவாதங்களில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அவை ஒவ்வொன்றும் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் நாட்கள் என்பதையும், அவை விடுமுறை நாட்கள் இல்லை என்பதையும் நான் சுட்டிக் காட்ட வேண்டும்.
செலவுகளை குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ‘போய்ச் சேர்ந்த உடனேயே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடிவதையும், ஹோட்டல் அறைகளில் அலுவல் பூர்வமான சந்திப்புகளை நடத்த முடிவதையும் அத்தகைய செலவு குறைப்புகள் எப்படி பாதிக்கும்’ என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செலவுகளையும் அவற்றுக்கான பலாபலன்களையும் கவனமாக எடை போட்ட பிறகுதான், தெளிவான முடிவை நாம் எடுக்க வேண்டும். எப்படி இருந்தாலும் பொருத்தமான அதிகார அமைப்புகள்தான் அந்த முடிவை எடுக்க முடியும்.
கட்டுரையின் இரண்டாவது பிழை ‘எனது பயணங்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமானது, திட்டக் குழு துணைத் தலைவரின் பொறுப்புகளுக்கு அத்தகைய வெளிநாட்டு பயணங்கள் தேவையற்றவை’ என்று சொல்வது ஆகும். துணைத் தலைவர் என்ற பதவிக்கு, அதன் அளவில், பெருவாரியான வெளிநாட்டு பயணங்கள் தேவை இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால், நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் பெரும்பாலானவை G-20க்கான நிபுணர் என்ற பொறுப்பிலும் பிரதம மந்திரியின் குழு உறுப்பினராகவும் மேற்கொள்ளப்பட்டவை என்பதை கட்டுரை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் இந்திய-அமெரிக்க எரிசக்தி உரையாடல் குழுவின் துணைத் தலைவராகவும் இந்திய-சீன பொருளாதார உரையாடல் குழுவின் துணைத் தலைவராகவும் இருக்கிறேன். இவை துணைத்தலைவர் என்ற பதவியுடன் தொடர்பில்லாத தனிச் சிறப்பான பொறுப்புகள்.
இந்த பொறுப்புகளை யார் வகிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுப்பதில்லை. ஆனால் இந்த பொறுப்புகளை நிறைவேற்ற நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை ஒரு கௌரவமாக கருதி என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுகிறேன். அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள யாரையும் போலவே எனது ஒவ்வொரு பயணமும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், பிரதம மந்திரியின் அலுவலகத்திடமும் ஒப்புதல் பெற்றே மேற்கொள்ளப்பட்டன.
2008க்கும் 2010க்கும் இடையே உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக G-20 சந்திப்புகள் அடிக்கடி நடந்தன என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு உச்சிமாநாட்டுக்கும் முன்பும் நிபுணர்களின் தயாரிப்புக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று முறை நடந்தன. இந்தக் கூட்டங்களில் இந்தியா கலந்து கொண்டிருக்க தேவையில்லை என்று ஒருவர் வாதிடலாம். அது நிச்சயமாக கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தியிருக்கும், ஆனால் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்குமா என்பதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.
இறுதியாக, என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய முழுமையான வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் முகமாக, நான் அவற்றைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திட்டக் குழுவின் இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் நான் எங்கு போகிறேன், ஏன் போகிறேன் என்று தெரிந்து கொள்ளலாம்.
______________________________________

அலுவாலியாவுக்கு சாய்நாத் பதிலளிக்கிறார்:

உண்மையில் கட்டுரையில் தரப்பட்டுள்ள எந்த ஒரு விபரத்தையும் டாக்டர் அலுவாலியா மறுக்கவில்லை :
(i) 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே (ஜி-20 பணிகளில் அவர் “பிஸியாக” இருந்த 2010 கால கட்டத்திற்கு வெகு காலம் கழித்து)  மேற்கொண்ட பயணங்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 2.02 லட்சம் செலவு ஆகியிருக்கிறது. இது “மோசமான ஊதாரித்தனம்” இல்லையா?
(ii) 274 நாட்கள் வெளிநாட்டில் செலவிட்டிருக்கிறார். அதாவது ஒன்பது நாட்களில் ஒரு நாள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து போய் வரும் நாட்களையும் சேர்த்தால் ஏழு நாட்களில் ஒரு நாள் வெளிநாடுகளில் செலவிட்டதாக ஆகிறது.
(iii) மொத்தம் 42 பயணங்களை மேற்கொண்டுள்ளார், அவற்றில் பாதி அமெரிக்காவுக்கு போன பயணங்கள். (பல பயணங்கள் திட்டக் குழு துணைத் தலைவர் என்ற பொறுப்புடன் தொடர்பற்றவை).
அவர் ஆதரிக்கும் (உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்தும்) வறுமைக் கோட்டிற்கான வரையறைக்கும் அவரது சொந்த செலவுகளுக்கும் இடையேயான ஒப்பீடு மிகவும் தேவையானதும் பொருத்தமானதும் ஆகும். வறுமையில் வாடும் மக்கள் மீது ஒரு அணுகுமுறையை சுமத்தி விட்டு, அவர்களது பணத்தில், பொதுப் பணத்தில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு வரையறையை தான் பின்பற்றுவது இரட்டை வேடம் போடுவதாகும். அதுவும் அவர் பங்கு வகிக்கும் அரசாங்கம் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்கான அழைப்பு விடுத்திருந்த காலத்தில் அப்படி செய்வது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
திட்டக் குழு உருவாக்கப்பட்ட அடிப்படை கோட்பாடுகளின் மையம் கொடிய வறுமையை ஒழிப்பது. ஆனால், டாக்டர் அலுவாலியாவை போலின்றி, அந்த நோக்கம் ‘வளங்களின் நெருக்கடியில்’ மாட்டிக் கொண்டிருக்கிறது.
“முழுக்க முழுக்கத் தேவையானது” என்று கருதப்படும் சமயங்களைத் தவிர “அரசாங்கம் விமானப் பயணங்களுக்கான, குறிப்பாக வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளை கறாராக கட்டுப்படுத்த வேண்டும்” டாக்டர் மன்மோகன் சிங் உத்தரவிட்டிருந்த (தி இந்து, ஜூன் 6,2008 – http://www.hindu.com/2008/06/06/stories/2008060660671000.htm) கால கட்டம்தான் டாக்டர் அலுவாலியா அத்தியாவசியமானது என்று குறிப்பிடும் பயணக் காலம் (2008-10).
அந்த சமயத்தில், பல அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து செய்யப்பட்டன, பயணச் செலவுகளில் வெட்டுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு அமைச்சர்கள் தங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளை இழந்தார்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தும் தனது தனி விமானத்தை விட்டுக் கொடுத்தார், மற்றவர்கள் எகானமி வகுப்பில் பயணம் செய்தார்கள்
அப்போதும் அதற்கு பின்னும் அவர் எந்த வகுப்பில் பயணம் செய்தார் என்பது குறித்தும் அவரது செலவுகள் குறித்தும் டாக்டர் அலுவாலியா தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார்.
திட்டக் குழுவின் துணைத் தலைவர் முன்னுரிமை அளிக்க வேண்டிய இந்தியாவுக்குள்ளான பயணங்கள் எத்தனை அவர் மேற்கொண்டார்? அவற்றைப் பற்றிய விபரங்களையும் திட்டக் குழுவின் இணையதளத்தில் போட முடியுமா?
(தினசரி சராசரி) $ 4,000 செலவு என்பது மிகப் பிரமாண்டமானது. அதற்கு மேல் அந்தந்த ஊர்களின் தூதரகங்களும் தொடர்பு அலுவலகங்களும் அவருக்காக எவ்வளவு செலவழித்தன என்று நமக்கு தெரியாது. ஆனால் செலவுகளின் மீதான கட்டுப்பாடு அலுவாலியாவுக்கு கவலை அளிக்கிறது. “போய்ச் சேர்ந்த உடனேயே பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறனை அது பாதித்து விடுமா, எவ்வளவு பாதிக்கும்” என்று கேள்வி எழுப்புகிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இந்திய மக்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் போய்ச் சேர்ந்ததும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டியது பற்றியும் அவர் சிறிதளவு நினைத்துப் பார்ப்பார் என்று நம்புவோம். ஏனென்றால், அவர் இந்த மக்களுக்கான திட்டமிடும் பொறுப்பில் இருக்கிறார் என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை.
2008-10 ல் G-20 கூட்டங்கள் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றன. ஆனால், அவர் அமெரிக்காவுக்குத்தான் பெரும்பகுதி பயணங்களை மேற்கொண்டார். இதற்கு முன்பாகவும் அவரது அமெரிக்க பயணங்கள் கொழித்துக் கொண்டுதான் இருந்தன என்பதை தகவல் அறியும் உரிமை மூலம் பெற்ற தரவுகள் காட்டுகின்றன.
திட்டக் குழுவின் பணிகளுடன் தொடர்பில்லாத, G-20 மற்றும் பிற மன்றங்களில் புரியும் நிபுணர் பணிக்கு அவர் கூறும் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம்.
அப்படி என்றால் திட்டக் குழுவில் இடம் பெற்று அதன் பொறுப்புகளிலிருந்து அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் செயல்பாட்டை ஏன் முடக்கி போட வேண்டும்?
11வது திட்டத்தின் முதல் நாள் ஏப்ரல் 1, 2007. ஆனால், திட்ட ஆவணம் ஜூன் 25, 2008ல்தான் தயாரானது. இப்படி வீணாக்கப்பட்ட ஒரு முழு ஆண்டு பல முக்கிய திட்டங்களின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. “மத்தியில் கால” மதிப்பீடு ஐந்து ஆண்டு கால திட்டத்தின் நான்காவது ஆண்டில் வெளிவந்தது! இப்போது, நாம் 12வது திட்டத்தின் முதல் ஆண்டில் இருக்கிறோம். ஆனால் திட்ட ஆவணம் தயாராவது இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது.
திட்டக் குழுவின் இணையதளத்தில் அவரது பயண விவரங்கள் வெளியிடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமை மூலம் பெற்ற தகவல்கள் அவரது செலவுகளைப் பற்றியது. அவற்றையும் அவர் வெளியிடுவாரா? மற்ற திட்டக் குழு உறுப்பினர்களின் செலவுகளும் வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாக, நாம் ஒப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
டாக்டர் அலுவாலியா நடைமுறை உலகத்திலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறார் என்பதன் அளவீடுதான், அவரது செலவுகளை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது. அவரது விளக்கம் அவரைப் பற்றிய மக்களின் கருத்தில் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.
______________________________________________________
- நன்றி: தி இந்து
தமிழாக்கம்: அப்துல்.

கருத்துகள் இல்லை: