புதன், 20 ஜூன், 2012

நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 16

”குடும்பக் கட்டுப்பாடு ஹிந்துக்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. முசுலீம்கள் நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் சிறுபான்மையினராகி இந்தியா ஒரு இசுலாமிய நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. எனவே குடும்பக் கட்டுப்பாட்டில் ஹிந்துக்களை மட்டுமின்றி மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
- இந்து முன்னணி மேடைப் பேச்சு.
குடும்பக்கட்டுப்பாடு என்பது சட்டப்படி யாருக்கும் கட்டாயமான ஒன்றல்ல. இந்துக்கள் மட்டும் கட்டாயக் கருத்தடை செய்யுமாறு எந்தச் சட்டமும் கூறவில்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டோ, செய்யாமலேயோ அளவாய்ப் பெற்றுக் கொள்வோரும் உண்டு.
முசுலீம் ஆண் ஒவ்வொருவரும் தலா நான்கு மனைவிகள் மணம் செய்ய வேண்டுமெனில் முசுலீம் ஆண், பெண் விதிகம் 1:4 என இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருபால் விகிதம் சமமாகவே உள்ளது. மேலும் 1975-ல் மைய அரசினால் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பலதார மண விகிதம் முசுலீம்களை விட இந்துக்களிடம்தான் அதிகம் உள்ளது.
கிருபானந்த வாரி மற்றும் சங்கராச்சாரியின் ஆன்மீகச் சீடரும், முருகக் கடவுளின் ரசிகருமான ஓட்டல் சரவண பவனின் உரிமையாளர் இராஜகோபாலனின் மனைவிமார் கதைகள் எல்லோரும் அறிந்ததே. கோடீசுவர இந்துக்களில் அநேகம்பேர் இப்படித்தான் பெண்டாளுகின்றனர். 1981 மக்கள் தொகைக் கணக்கின்படி இந்துக்களின் சதவீதம் 82.35, முசுலீம்களின் சதவீதம் 11.73 என உள்ளது. இதன்படி முசுலீம் மக்கள் என்றுமே பெரும்பான்மையாக முடியாது.
அடுத்து குடும்பக் கட்டுப்பாடு எனும் கருத்து கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவற்றினால் நடைமுறைக்கு வருகிறது. கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழைகள்தான் மதவேறுபாடின்றி பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில்  தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதற்கும், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கி இருப்பதற்கும் இதுதான் காரணம்.
இந்து முன்னணியின் கூற்றுப்படி முசுலீம்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதே ஒரு சதித்திட்டத்திற்காகத்தான் என்றால், இந்த சதியின் விளைவாகப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது யார்? ஒரு பிள்ளைக்கு 1000 தினார் என்று அராபிய சேக்குகள் மணியார்டர் அனுப்புகிறார்களா என்ன? ஒருவேளை அப்படிப்பட்ட வாய்ப்பு மட்டும் இருந்தால், அந்நியச் செலாவணிக்காக அம்மணமாக நிற்கவும் தயாராக இருக்கும் பா.ஜ.க. அரசு, ”உற்பத்தியைப் பெருக்குங்கள்” என்று முசுலீம்களுக்கு உத்திரவிடவும் வாய்ப்பிருக்கிறது.
அதிருக்கட்டும். இரண்டு மட்டும் பெற்றுக்கொண்டால், உணவு, வீடு, வேலை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என இந்நாட்டின் அரசோ, ஆளும் வர்க்கங்களோ, இந்துமத வெறியர்களோ பொறுப்பேற்கத் தயாரா? அதைத் தர முடியாதவர்கள் இரண்டுக்கும் மேல் பெறாதே என்று யாரிடமும் – இந்துக்கள் உட்படத்தான் – கூற அருகதை இல்லை.
தொடரும்

கருத்துகள் இல்லை: