Viruvirupu
புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிவு அ.தி.மு.க.-வுக்கு வெற்றியாக
அமைந்தாலும், அக் கட்சிக்குள் ஆனந்தம் இல்லை. வாக்கு வித்தியாசம் போதாது
என்று கட்சித் தலைவி ஜெயலலிதா அவரது 32 சிப்பாய்களையும் கதிகலங்க வைத்துக்
கொண்டிருக்கிறார். பாதிப்பேர், ரத்த அழுத்தம் எகிறி, ராத்திரி தூக்கத்தை
தெலைத்த நிலையில் உள்ளார்கள்.அவர்களது நிலை குறித்து ப்ளூ கிராஸ் போன்ற சேவை அமைப்புகளிடம் இதுவரை யாரும் முறையீடு செய்ததாக தெரியவில்லை.
மாறாக, தோல்வியடைந்த கட்சியான தே.மு.தி.க. ஆனந்தத்தில் மிதக்கிறது!
அக் கட்சிக்கு 30,500 வாக்குகள் கிடைத்திருப்பது தமக்கே ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் விஜயகாந்தே திகைத்துப் போய் கருத்து தெரிவித்திருக்கிறார். காரணம், தே.மு.தி.க. உருவாக்கப்பட்ட பின், அவர்கள் போட்டியிட்ட எந்தவொரு இடைத் தேர்தலிலும் டெபாசிட்டை திரும்ப வாங்கியதாக சரித்திரம் இல்லை.
ஆனால் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் சீண்டல், அமைச்சர்களின் கிண்டல் காரணமாக, புதுக்கோட்டை இடைத் தேர்தலில்தான் திரணியை காட்ட முயன்று, முதல் முறையாக அக்கட்சி டெபாசிட் பெற்றுள்ளது. கிண்டல் செய்த அமைச்சர்கள் கார்டனில் தண்டால் செய்து கொண்டுள்ளார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் இந்திய அரசியல்வாதிகளிலேயே ‘பாடி ஃபிட்’ நிலையில் உள்ளவர்கள்.
இடிவிழுந்த நிலையில் உள்ள அமைச்சர்களின் வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக் கொள்வதற்காக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நேற்று ஒரு காரியம் செய்திருக்கிறார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தே.மு.தி.க.-வுக்காக தீவிரமாக உழைத்த கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்து, தங்க மோதிரம் வழங்கி கெளரவித்திருக்கிறார். அதற்கு முன், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் விஜயகாந்த் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தோல்வியடைந்த கட்சி ஒன்று தமது தோல்வியை கொண்டாட, வெற்றியடைந்த கட்சி வெலவெலத்துப் போய் இருப்பது சுவாரசியமான காட்சிதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக