ஞாயிறு, 17 ஜூன், 2012

அமெரிக்காவில் வீடுகள் வாங்கும் இந்தியர்கள்!

வீட்டு விலைகள் கிராஷ்: பாய்ந்து, அமெரிக்காவில் வீடு வாங்கும் இந்தியர்கள்!

Viruvirupu  அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் வீட்டு விலைகள் கடுமையாக சரிந்திருப்பதால், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வீடு வாங்குவது அதிகரித்துள்ளது என்று ரியல் எஸ்டேட் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீப காலத்தில் அமெரிக்காவில் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ள வெளிநாட்டவர்களில், அமெரிக்காவில் வசிக்காத இந்தியர்களும் பெருமளவில் உள்ளனர் என்பதுதான் சுவாரசியமான தகவல்.
அமெரிக்க டாலரின் வீழ்ச்சியும், ஏற்கனவே சரிந்துள்ள ரியல் எஸ்டேட் மார்க்கெட்டும்தான், அமெரிக்க வீடுகள்மீது வெளிநாட்டவர்களின் பார்வை திரும்ப காரணமாக உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


2006-ம் ஆண்டு விலையைவிட 30 சதவீதம் குறைவு!
கடந்த மார்ச் வரையுள்ள ஓராண்டு காலத்தில், அமெரிக்க வீடுகளை வெளிநாட்டவர்கள் 82.5 பில்லியன் டாலர் (மில்லியன் அல்ல, பில்லியன்) பணம் செலவு செய்து வாங்கியுள்ளனர். அமெரிக்காவின் மொத்த வீட்டு விற்பனையில் 9 சதவீதம் இது. வெளிநாட்டவர்கள் வீடுகளை வாங்குவது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட் 2007-ம் ஆண்டு கிராஷ் ஆகியது. 2006-ம் ஆண்டில் இருந்த சராசரி விலையைவிட இன்று 30 சதவீதம் குறைவான விலையில் வீடுகள் விற்பனையாகின்றன.
அதிகமான வெளிநாட்டவர்கள் அமெரிக்காவின் 5 மாநிலங்களில் மட்டுமே வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா, நியூயார்க் ஆகியவையே அந்த 5 மாநிலங்கள். இவற்றில் இந்தியர்கள் அதிகம் வீடு வாங்குவது, கலிபோர்னியா மற்றும் நியூயார்க்கில்.
இந்த 5 மாநிலங்களில் வெளிநாட்டவரால் மிக அதிகமாக விரும்பப்படும் இடமாக இருப்பது, இந்தியர்கள் அதிகம் வீடு வாங்க முன்வராத புளோரிடா மாநிலம்தான். இங்கு அதிக வீடுகளை வாங்குபவர்கள், கனடா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டவர்கள் வாங்கிய வீடுகளில் 26 சதவீதம் இந்த மாநிலத்தில் மட்டும் வாங்கப்பட்டுள்ளன.
வீடு வாங்கிய வெளிநாட்டவர்களில் அதிகமானோர், கனடா, சீனா, இந்தியா, பிரிட்டன், மெக்சிகோ நாட்டவர்கள். இவர்களில், சுமார் 60 சதவீதமானவர்கள் ரெடி கேஷ் கொடுத்து வாங்கியுள்ளனர். வாங்கியவர்களில், பெரும்பாலானோர், வருடத்துக்கு 6 மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் வசிப்பதில்லை (டாக்ஸ் காரணங்களுக்காக)

கருத்துகள் இல்லை: