பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு: “நமது பிரதமர் ஒரு தகுதியற்ற நபர்!”
Viruvirupu
மிகப் பெரிய அரசியல் சூறாவளியில் சிக்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.
காரணம், சுப்ரீம் கோர்ட், பாகிஸ்தான் பிரதமர் அவரது பதவியில் இருக்க
தகுதியற்றவர் என்று இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.“கடந்த ஏப்ரல் 26-ம் தேதியில் இருந்து, தகுதியற்ற நபர் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். சட்டப்படி அன்றைய தினத்தில் இருந்து இந்த நாடு பிரதமர் இருந்தும், இல்லாத நிலையில் உள்ளது. எனவே உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதி இஃப்திகார் செளத்ரி தீர்ப்பு வழங்கி, பாகிஸ்தான் அரசை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார்.
இதிலுள்ள பெரிய தமாஷ் என்னவென்றால், பாகிஸ்தானின் வரலாற்றிலேயே, தற்போதைய அரசுதான் முதல் தடவையாக, முழுமையான 5 ஆண்டு பதவிக்காலத்தை முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று பிரதமர் கிலானி பதவி விலகினால், அடுத்த நிமிடமே அரசு கவிழும் என்று இஸ்லாமபாத் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அப்படியொரு நிலை ஏற்பட்டால், அவசர கதியில் மற்றொரு பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
பிரதமர் கிலானிக்கு இதிலுள்ள பெரிய சோகம் என்னவென்றால், அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணம், அவர் சொந்தமாக செய்த முறைகேடு எதனாலும் அல்ல.
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி மீதான மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த விசாரணையை மீண்டும் துவங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை பிரதமர் கிலானி செயல்படுத்தவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் கோபப் பார்வை பிரதமர் கிலானி மீது திரும்பியது.
கடந்த ஏப்ரல் மாதம், கிலானியை கோர்ட்டுக்கு அழைத்து, அவருக்கு சிம்பாலிக்காக ஒரு தண்டனை வழங்கப்பட்டது. கோர்ட்டில் அரை நிமிடம் (30 செகன்ட்கள்) அவர் கைதியாக நிறுத்தப்பட்டார். இந்த சிம்பாலிக் தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது என்றால், பிரதமர் கிலானியின் பாடிகார்டுகள் அகன்றுவிட, கோர்ட் போலீஸ்காரர்கள் அவரின் இரு பக்கத்திலும் 30 செகன்ட்கள் வந்து நின்று கொண்டார்கள்.
கிலானி அந்த அரை நிமிடமும், கோர்ட் போலீஸாரின் காவலில் இருந்தார் என்பதே அதன் அர்த்தம்.
விவகாரம் அத்துடன் முடிந்து போகும் என்று கிலானி நினைத்திருந்தார். ஆனால், அவரது நினைப்பு தவறு என இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காட்டியிருக்கிறது.
இன்றைய தீர்ப்பின்படி அவர் பதவி விலகுவாரா இல்லையா என்பது தெளிவாக தெரியாமல் அங்கே ஒரே குழப்பமாக உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் (இவரும் கிலானியின் கட்சியைச் சேர்ந்தவர்), “சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கெல்லாம் பிரதமர் பதவி விலக முடியாது” என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.
அடுத்த சில தினங்களுக்கு இஸ்லாமபாத் அரசியல், என்றும் இல்லாத அளவில் குழப்பம் நிறைந்ததாக இருக்கப்போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக