Viruvirupu
நித்தி சுவாமிகள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு
வந்துவிட்டால், ‘யாவரும் நலம்’ என்பது அவரது சிஷ்யகோடிகளின் நினைப்பாக
இருந்தது. அந்த நினைப்பில் மண் விழுந்திருக்கிறது.
தமிழகத்திலும்,
பொதுமக்கள், பிளஸ் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பை நித்தி எதிர்கொள்ள
வேண்டியுள்ளது.கர்நாடகாவில் ஜெயில்வாசத்தை முடித்துக் கொண்டு, வேண்டாம் அந்த மாநிலம் என்று உதறிவிட்டு மதுரை வந்தவரை, நம்ம ஆதீனம்தான் கட்டித் தழுவி வரவேற்றாரே தவிர, வேறு யாரும் தழுவுவதாக தெரியவில்லை, ஆளை கழுவுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தி தங்கியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், மடத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் துவங்கின. வெளியே தலையைக் காட்டினால் மொட்டை அடித்து விடுவார்கள் என்ற நிலையில், மதுரையை உதறிவிட்டு, திருவண்ணாமலையை நோக்கி நடையைக் கட்டினார். அங்கேயுள்ள தமது ஆசிரமத்தில் தங்கிக் கொண்டார்.
ஆனால், மதுரைக்காரர்களுக்கு உள்ள உணர்வு, திருவண்ணாமலை வாசிகளுக்கு இருக்காதா?
அங்கும் மக்கள் மத்தியில் பதட்டம். திருவண்ணாமலையில் எல்லாமே சுமுகமாக இருக்கின்றது என்று காட்டுவதற்காக, அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய அவர் பிளான் பண்ணியிருந்தார். ஆனால், சிஷ்யகோடிகள் வெளியேயிருந்து அறிந்துவந்து சொன்ன ஒரு விஷயம் அவரைக் கலக்கி விட்டது.
சுவாமிகள் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும்போது, எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்த தகவல்தான் அவருக்கு வந்து சேர்ந்தது. அதையடுத்து, கோயிலுக்கு போகும் திட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
நித்தி என்ன பிளான் போட்டாலும், அதை பிசைந்து பரோட்டா தட்டுவதற்கு, பல அமைப்புகள் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டு உள்ளன.
திருவண்ணாமலையில் நித்தியை எப்படியாவது பேட்டி எடுத்துவிட செய்தியாளர்கள் பல விதங்களிலும் முயற்சிக்கின்றனர். இதுவரை யாரையும் சந்திக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “சுவாமிகள் ஆலோசனையில் உள்ளார்” என்று கிளிப்பிள்ளை போல ஒரே பதில்தான் வருகிறது.
யாருடன் ஆலோசனை என்று தெரியவில்லை. மூத்த ஆதீனத்துடனா? அல்லது ஸ்ட்ரெயிட்டாக முக்கண் சிவனுடன் ஆலோசிக்கிறாரா என்பதை, ஆசிரமத்தில் யாரும் சொல்கிறார்கள் இல்லை.
சுவாமிகள் வெளியே திக்விஜயம் வரும்போதுதான் உள்ளது நிஜமான திருவிழா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக