சனி, 23 ஜூன், 2012

இன்னும் 30 நாட்களுக்கு யாருக்கும் கண்டமில்லை

ஜெ. கொடநாடு பயணம்: தூக்க மாத்திரையை, தூக்கி எறிந்தார் அமைச்சர்!

Viruvirupu
“அமைச்சர்கள் பலர் பல நாட்களின்பின் நேற்றிரவுதான் நிம்மதியாகத் தூங்கினார்கள்” என்று வாய்க்குள் (கிண்டலாக) சிரித்தபடி சொல்கிறார்கள், அ.தி.மு.க. புள்ளிகள். என்ன சமாச்சாரம்? தூக்க மாத்திரையா? துரத்தும் கனவுகள் வரவில்லையா? அதெல்லாம் இல்லை. முதல்வர் கொடநாடு சென்றுவிட்டார்.
“அம்மா அடுத்த மாத இறுதியில்தான் வருவாங்க” என்றார் ஒரு அமைச்சர் முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்புடன்.
இவர்களது ஆனந்தத்துக்கு காரணமே, முதல்வர் சென்னையில் இல்லாத நேரத்தில் மந்திரிசபை மாற்றம் இருக்காது என்பதுதான்!
புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபின், பல அமைச்சர்கள் தலையை அண்ணாந்து பார்ப்பதில்லை. பார்த்தால், தலைக்குமேல் கத்தி தொங்குவது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறதாம்.
முதல்வர் நேற்று கொடநாட்டுக்கு விமானம் ஏறும் கடைசி நிமிடம்வரை சில அமைச்சர்கள் சட்டை பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். சட்டைப் பையில், புரட்சித் தலைவியின் போட்டோவுடன்,  ஊருக்கு போக ரிடர்ன் பஸ் டிக்கெட்டும் வைத்திருந்தார்கள்.
ஆனால், அதற்கு தேவை ஏற்படாமலும், பிரமைக் கத்தி பிடரியில் விழாமலும், அனைவரது பதவிகளும் தப்பி விட்டன.
புதுக்கோட்டை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, நான்கு அமைச்சர்கள் மீது கொஞ்சம் ‘அப்படி-இப்படியான’ ரிப்போர்ட் ஒன்றை உளவுத்துறை தயாரித்து கொடுத்திருந்தது. அந்த 4 பேரில் குழறந்தபட்சம் 2 பேருடைய பதவிகளாவது பஞ்சாக பறந்துவிடும் என்று உளவுத்துறை வட்டாரங்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், முதல்வர் என்ன நினைத்தாரோ… யார் மீதும் பாசக் கயிற்றை வீசாமல் பறந்துவிட்டார். மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக வளைய வருகிறார்கள் மந்திரிகள். இன்னும் 30 நாட்களுக்கு யாருக்கும் கண்டமில்லை!
இருந்தாலும், அதிக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள் மாண்புமிகுகளே.. கவர்னர் கொடநாட்டில் பிராஞ்ச் துவங்கினால், கதை கந்தலாகிவிடும்!

கருத்துகள் இல்லை: