செவ்வாய், 4 அக்டோபர், 2011

அம்மா.. எம்பேரு சரத்குமாருங்க என்றார், ஜெயலலிதாவிடம்!


தென்காசி, இந்தியா: அ.தி.மு.க. கூட்டணியில் நாமும் போட்டியிடுகிறோம் என்று நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அறிவித்து அதிக நாளாகவில்லை. இப்போது மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. “கூட்டணியில் இவர்கள் என்பது சரி. கூட்டணியில் எங்கே போட்டியிடுகிறார்கள்?” என்பதுதான் சந்தேகம்.
காரணம், சரத்குமார் கட்சிக்கு சிங்கிள் இடத்தைக்கூட ஒதுக்கவில்லை ஜெயலலிதா.
“சிங்கம் சிங்கிளாக வருமா, டபுள்ஸ் ஏறி வருமா?” என்று கட்சித் தொண்டர்களுக்கே தெரியாத நிலையில், வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.
எத்தனையோ சினிமாக்களில் மக்களுக்கெல்லாம் வழிகாட்டிய சரத்குமாருக்கு ஒரு வழி காட்டவில்லை முதல்வர் ஜெயலலிதா.
அப்புறம் என்ன? பேசாமல் போர்த்துக்கொண்டு படுத்துக்கலாமே என்ற கேட்க முடியாது. காரணம், கூட்டணிக் கட்சி (!) அ.தி.மு.க. சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சரத்குமார் கட்சியினர் ஆங்காங்கே சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இப்போது இவர்களை என்னதான் செய்வது என்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் லோக்கல் அ.தி.மு.க.வினர்.
“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன” என்று சரத்குமார் கட்சியினர் வெளியே சொல்லிக்கொண்டு திரிந்தாலும், அப்படி எதுவும் சீரியசாக நடந்ததாகத் தெரியவில்லை. ச.ம.க. ஆட்கள் ஏதோ பேசினோம் என்று பாவனை காட்டினாலும், ச.ம.க.விற்கு ஒரு வார்டு கூட ஒதுக்கப்படவில்லை. ஆனால், ‘வேறு விதமான’ நழுவல் கதை ஒன்று கூறப்பட்டிருந்தது.
“நீங்க கவலைப்படாம ஊர் போய்ச் சேருங்க. அந்தந்த ஏரியா மாவட்ட செயலாளர்களிடம் உங்க ஆட்களையும் வேட்பாளராக போட சொல்லி தகவல் கொடுக்கிறோம்” என்பதுதான் சரத்குமார் கட்சியினரிடம் சொல்லப்பட்ட ‘வேறு விதமான’ நழுவல் கதை.
இதைப் படிக்கும் உங்களுக்கே அதெல்லாம் கப்சா என்பது புரியும்போது, சரத்குமார் கட்சியினர் இதை நம்பிக்கொண்டு ஊர் போய் சேர்ந்ததுதான் உச்சக்கட்ட சோகம். “இவங்க அநியாயத்துக்கு ரொம்ப நல்லவங்களாக இருக்காங்களே!” என்று ‘கதை சொன்ன’ அ.தி.மு.க. அமைச்சர்களே உள்மனதில் பரிதாப பட்டிருப்பார்கள்!
தென் மாவட்டங்களில் சரத்குமார் கட்சிக்கு கணிசமான ஆதரவு உண்டு. அதை வைத்து சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஜெயிக்க முடியாதே தவிர, உள்ளாட்சித் தேர்தல்களில் வார்டு மட்டங்களில், சைட் சப்போர்ட் இருந்தால், சுமாரான வெற்றி பெறலாம்.
தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கீழப்பாவூர், செங்கோட்டை, ஆலங்குளம், கடையம், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் சரத்குமார் கட்சியினர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இங்கெல்லாம், அ.தி.மு.க. வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சரத்குமாரை அழைத்து வருவதற்கு அ.தி.மு.க. முயன்று வருகிறது.
சரத்குமார் வந்து யாரை ஆதரித்துப் பேசுவார்? அவரை அழைத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளர்களையா? அல்லது, அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் தளது சொந்தக் கட்சியின் வேட்பாளர்களையா?
“ரெட்டை இலை கூட்டணி என்பதால் ரெண்டு பேருக்கும் போடுங்க” என்று பேசும் அளவுக்கு, சரத்குமார் விபரம் தெரியாதவர் இல்லைதான். ஆனால் அவர் இருக்கும் கூட்டணி, வில்லங்கமானது அல்லவா!  “நானே போட்டியிட்டாலும் எனக்கேகூட ஓட்டு போடாதிங்க” என்று சொல்ல வைக்கக் கூடிய ஆட்களாச்சே அவர்கள்!

கருத்துகள் இல்லை: