தீவிரவாத அச்சம் நிலவிய 10,986 நாட்களில் என்ன நடந்தது என்று பாராமல், போரின் கடைசி 14 நாட்களில் என்ன நடந்து என்று கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருப்பதாக சிறிலங்கா அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 ஆண்டு காலமாக தீவிரவாதத்தின் பிடியில் இருந்த மக்களை மீட்ட சிறிலங்கா அதிபரின் பெயரைக் கெடுக்க சில ஊடகங்கள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தீவிரவாத அச்சம் நிலவிய 10,986 நாட்களைப் பற்றி – ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது பற்றி எவரும் வாய் திறப்பதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
நான்கு ஐந்து பேர் பற்றியே சனல்-4 தொலைக்காட்சி பேசுவதாகக் கூறிய கெஹலிய ரம்புக்வெல, கொலையாளிகளான 7800 முன்னாள் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் விடுவித்துள்ளது குறித்து அவர்கள் ஏதும் பேசுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
81 பேரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட 12 வயது சிறார் போராளி ஒருவரைக் கூட புனர்வாழ்வு அளித்து சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்தாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
சில குறிப்பிட்ட இணையத்தளங்களும், ஊடகங்களும் திரிபுபடுத்திய செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வதந்திகளைப் பரப்பி பொதுமக்களை தவறாக வழி நடத்தி நாட்டில் குழப்பதை ஏற்படுத்த சில சக்திகள் முனைவதை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இன, மத, சமூக ரீதியான பிளவுகளை ஏற்படுத்த இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக