எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களது மறுவாழ்வு, அவர்கள் எங்கே செல்கிறார்கள்?
அவர்களை சிறையிலடைத்து சித்திரவதை புரியாமல் மறுவாழ்வு அளிப்பதை தெரிவு செய்தது அரசாங்கத்தின் தொலை நோக்கமுள்ள ஒரு நல்ல முடிவு. 1971ல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல அநேக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்.
வெள்ளியன்று அலரிமாளிகையில் 1800 முன்னாள் போராளிகளை சமூகத்தில் இணைப்பதற்காக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக இடம்பெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, எப்படி முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள் ஓருங்கிணைப்பது என்று ஸ்ரீலங்கா உலகத்துக்கு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நடவடிக்கை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, 1500 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்கள் மட்டும் தற்சமயம் பாதுகாப்பு படைகளின் பொறுப்பில் உள்ளனர். இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் டெய்லி மிரரின் “மிரர் உள்ளுணர்வு” பகுதி இந்த முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு நடவடிக்கைகளையும் மற்றும் அவர்களின் எதிர்கால நம்பிக்கைகளைப் பற்றியும் ஒரு நெருக்கமான பார்வையை வீசுகிறது.
இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போதும்,அதன் பின்னர் உள்ளக இடம் பெயர் முகாம்களிலிருந்தும் படையினரால் இனங்காணப்பட்ட 11,700 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களுள் 594 பேர் சிறுவர் போராளிகளாவர். கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 9500 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்கள் அரசாங்கத்தினால் சிறு சிறு குழுக்களாக சமூகத்துடன் மீள் இணைக்கப்பட்டு விட்டார்கள். போரின் உச்சக் கட்டத்தின்போது அவர்களில் பெரும்பாலானோர், கிளர்ச்சி அமைப்பினைக் கைவிட்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைந்தவர்களாவர். ஆரம்பத்தில் 24 மறுவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது ஒன்பது முகாம்கள் மட்டுமே உள்ளன. இந்த வருடம் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூபா 750 மில்லியன் அளவுள்ள தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. 2009 முதல் 2010 வரையான காலப்பகுதியில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் 1.8 மில்லியன் ரூபாக்களும் அதைத் தொடர்ந்து 2010 – 2011 காலப்பகுதியில் 774 மில்லியன் ரூபாக்களும் செலவிடப் பட்டுள்ளன.
இந்தப் போராளிகளின் வளமான எதிர்காலத்துக்காக திட்டமிடப் பட்டுள்ள பாடநெறிகளில் தொழிற்பயிற்சியும் மற்றும் மொழித் திறன்களை மேம்படுத்தும் பயிற்சியும் அடங்கும். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சகத்தின் கூற்றின்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களுள் பிரதானமாக உட்படுபவர்கள் போர் வீரர்களே. எப்படியாயினும் குறிப்பிட்ட தொகையான சாரதிகள்,சமையற்காரர்கள் மற்றும் இதர உதவியாளர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் உட்படுகிறார்கள்.
பத்து விகிதமான முன்னாள் போராளிகள் எந்தவித கல்வியறிவுமற்ற சிறுவர் போராளிகளாவர். கிட்டத்தட்ட 70 விகிதமானவர்கள் எட்டாம் வகுப்புக்கு மேல் எந்தவித கல்வியறிவையும் பெறாதவர்கள். மற்றும் சில அங்கத்தினர்கள் இப்போதுதான் முதற்தடவையாக முறையான கல்வியினைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் சமீபத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.
ஒரு வருட புனர்வாழ்வுத் திட்டமானது தகவல் தொழில்நுட்பம், தையல், குழாய் இணைப்புகள், மின்சார வேலைகள், தச்சுவேலை, கட்டிட வேலை, ஒட்டு வேலை, உலோக வேலை போன்ற தொழிற் பயிற்சி நெறிகளை போன்றவற்றை வழங்குகிறது. அவர்கள் மீண்டும் ஒருக்கால் சமூகத்துடன் ஒன்றிணையும் போது இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவையினை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் இந்த தொழிற் பயிற்சி நெறிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மறுவாழ்வு மற்றும் தொழிற் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த இந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களுக்காக கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் வவுனியாவில் அரசாங்கம் ஒரு விசேட வேலை வாய்ப்புச் சந்தையினை ஏற்பாடு செய்திருந்தது. கட்டிட நிர்மாணம் மற்றும் ஆடைத் தொழில் போன்ற பல்வேறு தொழில் களங்களைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த தொழிற் சந்தையில் பங்கேற்றிருந்தன.
தற்போது வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைகளில் இந்த மறுவாழ்வு பெற்ற அங்கத்தினர்களை பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் சபதம் பூண்டுள்ளது. அரசாங்கத்தின் மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஆரம்ப முயற்சியாக அவர்களுக்கு தொழிற்பயிற்சி, மொழியறிவுப் பாடங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள், விளையாட்டு மற்றும் பாடநெறி சாரா நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைத்து, பொதுமக்களிடையே அவர்களின் பங்கினைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முன்னாள் போராளிகளை ஏற்றுக்கொள்ளவும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்யவும் தூண்டுவதும் மற்றும் சமூகத் தொடர்பாடல்கள், குடும்பம் சார்ந்த நடவடிக்கைகள்,சமய மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதுமாகும்.
மறுவாழ்வு முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ள இந்த அங்கத்தினர்கள், மேசன் தொழில், கைப்பணி வேலைகள் மற்றும் பூச்சு வேலைகள் என்பனவற்றிற்கான இறுதிப் பரீட்சையில் ஈடுபட்டுள்ளார்கள்.
புனர்வாழ்வினூடாக வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல்
இந்த புனர்வாழ்வு நடவடிக்கையானது 6+1 மாதிரியின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.அதில் தொழிற் பயிற்சிகள், மனநிலை சிகிச்சை, கல்வி மற்றும் சன சமூகத் திட்டங்கள்,விளையாட்டு மற்றும் பாடநெறி சார தொழிற்பாடுகள் என்பன அடங்கியுள்ளன. தற்சமயம் ஒன்பது மறுவாழ்வு நிலையங்களிலுமுள்ள முன்னாள் போராளிகள் 16 பாடநெறிகளை மூன்று தொடக்கம் ஒன்பது மாதங்கள் வரையான நேர அமைப்புக்குள் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த முன்னாள் போராளிகள் ஒரு தாக்குதல் சக்தி என்ற நிலயிலிருந்து சுமுகமான ஒரு பரிமாற்றம் மூலம் மனிதாபிமான மறுவாழ்க்கைக்கு திரும்புவதற்காக அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள கல்வி நிகழ்ச்சிநிரல்களை பின்பற்றுவதற்காக அவர்கள் உள்ளக இடம் பெயர்ந்தவர்களிலிருந்து வேறாக்கப் பட்டுள்ளார்கள். பிரதானமாக அவர்களது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் மற்றும் தீவிரமய நிலை என்பன படையினரால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் மிக முக்கியமானதும் சுமையானதுமான பணிகளில் ஒன்றாகவிருப்பது, இந்த முன்னாள் போராளிகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு வேண்டிப் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதியிலுமுள்ள பொதுமக்களை தயாராக்குவதும் போதிப்பதுமே. அரசாங்க அதிகாரிகள் இவர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள அவர்களது முகவர்கள், சமூக மற்றும் சமயத் தலைவர்கள், போன்றவர்களிடம் மறுவாழ்வளிக்கப்பட்ட அங்கத்தினர்கள் சிதைவிலிருந்து தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மறுவாழ்வு நடவடிக்கைகளின் மிக முக்கியமான பண்பு, அவர்கள் பழைய பழக்கங்களுக்கு அல்லது பழைய சிந்தனை வடிவங்களுக்கு திரும்பாமல் இருப்பதை உறுதி செய்வதே. அவர்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்படும் முன்னர் ஒரு அடையாள அட்டையும் அரசாங்க முத்திரையுடன்கூடிய ஒரு கடிதமும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப் படுகிறது. இது அரசாங்க மற்றும் இதர சட்ட அமலாக்க முகவர்கள் இந்தப் போராளிகளுடன் சுமுக உறவினை மேற்கொள்வதற்கு உதவியாகவிருக்கும். எப்படியாயினும்; இந்த நபர்கள் அவர்களது பிரதேச காவல்துறை அதிகாரிகளினால் குறுகிய ஒரு காலம்வரை கண்காணிக்கப்பட்டு வருவார்கள். விடு;தலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் கடன் பெற்று சுயதொழில் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.
இந்த மறுவாழ்வு முயற்சிகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நேரடி ஆதிக்க வரம்பின் கீழ் வருகிறது. இந்த முன்னாள் போராளிகளின் விவகாரங்களை நேரடியாக மேற்பார்வை செய்வதற்காக ஒரு விசேட ஆணையாளர் நாயகம் நியமிக்கப் பட்டுள்ளார்.
உண்மையில் புனர்வாழ்வு என்பதன் கருத்து என்ன?
எழுப்பப்படும் தேசபக்தி மந்திரங்கள் மற்றும் பதிக்கப்படும் பல தேசியவாதி முத்திரைகளுக்கு அப்பால் இந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே. அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த நாட்டிலே. முதலில் வலுக்கட்டாயமாக அல்லது சுய உணர்வின்மையால் அல்லது அரசாங்கத்துக்கு எதிராக மூளைச் சலவை செய்யப்பட்டதால் முப்பது நீண்ட ஆண்டுகளாய் ஒரு நாட்டை முடமாக்கும் அறிவாற்றல் பெற்றிருந்தார்கள். அவர்கள் சுவாசித்ததும் இந்து சமுத்திரத்தைச் சுற்றி வீசும் இந்த தூய காற்றைத்தான். அவர்கள் விளையாடிக் களித்ததும் இதே மண்ணில்தான். அவர்கள் நீந்திக் குளித்த நதிகள் எல்லாம் 64,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டில்தான் ஓடுகின்றன.
இது எந்த வகையிலும் அந்தக் காலப்பகுதியில் அவர்களின் ஆயுதங்களில் இருந்து வெடித்துப் பாய்ந்த பயங்கரவாதத்தை நியாயப் படுத்தவில்லை அல்லது அவர்களின் விடயத்தை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் குதர்க்க வாதமுமில்லை. இந்தப் போராளிகள் எல்லோருமே மரபுவழியாக ஸ்ரீலங்கா மக்களே. மேலும் இந்த விடயங்கள் இத்தோடு முற்றுப் பெறுகின்றன.
இதில் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தப் போராளிகள் அனைவரும் வெறும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களே, பயங்கரவாத அமைப்பின் முடிவு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் எந்தப் பங்குமே வகிக்காதவர்கள். ஆனால் வெறுமனே மேலிடத்தில் இருந்தவர்கள் வழங்கிய ஆணைகளைச் செயல்படுத்தியவர்கள். இந்த நபர்கள் ஒரு காரணத்துக்கு பொறுப்பேற்றுள்ளார்கள். அது சரியா அல்லது தவறா என்பது அகநிலை மதிப்பு வாய்ந்த ஒரு தீர்ப்புக்கு உரியது. வலுக்கட்டாயமாக படைக்கு ஆட்சேர்க்கப் பட்டவர்களுக்கு தங்கள் இலக்கை அடைய இதுதான் சரியான பாதை என நம்புவதைத் தவிர வேறு தெரிவு எதுவம் இருக்கவில்லை. அறியாமைதான் பிரதானமாக இருந்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் இந்த செயல்பாட்டில் அவர்களின் தாக்கத்தை செலுத்த முக்கியமான ஒரே காரணியாக இருந்திருக்கவேண்டும். சுற்றியுள்ள உலகத்துடன் எதுவித வழியுமில்லாமல் ஒரு சிங்களவருடன்கூட எதுவித தொடர்புமில்லாமல வளர்க்கப்பட்ட சூழலில் நீங்கள் கேள்விப் படுவதெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களால் செய்யப்படும் அட்டூழியங்கள்தான் எனும்போது ஆயுதம் ஏந்துவதற்கு எந்த ஒருவரையும் தூண்டிவிடத்தான் செய்யும்.
அவர்களை சிறையிலடைத்து சித்திரவதை புரியாமல் மறுவாழ்வு அளிப்பதை தெரிவு செய்தது அரசாங்கத்தின் தொலை நோக்கமுள்ள ஒரு நல்ல முடிவு. 1971ல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல அநேக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். எப்படியாயினும் கேள்வி எழுவது என்னவென்றால் மறுவாழ்வின் குறுகிய வரைவிலக்கணம் ஒருமைப்பாடு என்கிற அதன் மிகப் பிரதானமான நோக்கத்தை நிறைவேற்றுமா?
சனத் ஜயசூரியா மற்றும் டல்லஸ் அழகப்பெருமாவுடனும் கிரிக்கட் போட்டி ஒன்றை விளையாடுவதும், ஒரு பிரமாண்டமான திருமணச் சடங்கில் இந்திய நடிகர் விவேக் ஒபராயைச் சந்திப்பதும், சுகமானதும் நலமானதுமான ஒரு விடயம்தான். ஆனால் நாங்கள் உண்மையாக விரும்புவது அவர்களை முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என்கிற முத்திரை குத்தாமல் எங்கள் சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்பு செய்வதைத்தான்.
மறுவாழ்வு என்பது கொண்டுள்ள விரிவான வரைவிலக்கணம் என்ன? நாங்கள் நம்புவது அது கொண்டுவர வேண்டியது நம்பிக்கையைத்தான் என்று. இந்த இளைஞர்களுக்கு வேண்டியது நம்பிக்கை, அது அவர்கள் தங்கள் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய இடைவெளியை, தங்கள் கவலைகளை, விரக்தியை, மற்றும் அதிருப்தியை வெளிக்காட்டும் குரலை, மற்றும் தங்கள் குறைகளை பொறுமையுடன் செவிமடுக்கும் இந்த சமூகத்தின் ஒரு பகுதியும் அங்கமும் தாங்கள் என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
நாட்டின் தேசியவாதிகள், மிதவாதிகள்,மற்றும் தீவிரவாதிகள் போன்ற அனைவரும் இந்த இளைஞர்கள்,தங்கள் அதிருப்தியையும் மற்றும் கவலைகளையும் பற்றிக் குரல் கொடுப்பதற்குத் தேவையான ஒரு அமைப்பினை வழங்க வேண்டும். அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவார்கள், அவர்கள் சாதாரணமாகவும் நீதியானதாகவும் நடத்தப்படுவார்கள் என்கிற நம்பிக்கையை அவர்களிடம் பாய்ச்ச வேண்டும். தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய மற்றொரு செல்வழியை வழங்கும் சாதாரண ஒரு முறை உள்ளது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு அவசியம் தேவை.
அப்போதுதான் மறுவாழ்க்கை என்கிற அதன் உள்ளார்ந்த நோக்கம் பூரணமாக நிறைவேறியிருக்கும்.மறுவாழ்வு என்பது ஒரு சேருமிடம் அல்ல அது ஒரு பயணம்.நாங்கள் அனைவரும் ஒருமித்து இந்த இளைஞர்களும் யுவதிகளும் எங்கள் மண்ணின் குழந்தைகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாடு உயர் சிகரங்களை தொடுவதற்கு ஆண்களும் பெண்களும் உதவவேண்டும். மற்றும் இளையோர் தங்கள் வருங்கால உற்றார் உறவினருக்கு வளமான எதிர்காலத்தை வடிவமைக்க உதவவேண்டும். நாங்கள் அவர்களுக்கு இடமளிக்க வேண்டிய தேவை உள்ளது. அதுதான் உண்மையில் அவர்களிடம் குறைவாக உள்ளது,நாங்கள் அவர்களுக்கும் அவர்களின் சமூகத்துக்கும் வளமான எதிர்காலத்துக்கு வேண்டிய நம்பிக்கையை ஊட்ட வேண்டும்,ஏனெனில் வேறு எதனாலும் செய்ய முடியாததை நம்பிக்கை ஊக்குவிக்கும் - ஒரு எதிர்காலத்துக்கு வேண்டிய பேரார்வத்தை.
நன்றி: டெய்லி மிரர்தமிழில். எஸ்.குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக