சிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது.
புத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் எனக்கு அவ்வளவாக அதிர்ச்சியாக இல்லை. ஆனால் கொஞ்சம் அதீதமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
கடைசியாக, தொடர்ந்து அவருக்குப் பிறருடன் ஏற்படும் தகராறுகள். அதில் பல ‘அவள் என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா!’ ரக சில்லறை விஷயங்கள். ஒரு புத்தகத்தில் எழுதத்தக்கவையே அல்ல. சில நிர்வாகத்தின் ஊழலில் அவர் பங்குகொள்ளாமல் எதிர்த்தபோது ஏற்பட்ட தகராறுகள். இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இங்கும் அவர் தன் தரப்பு வாதத்தை மட்டுமே வைக்கிறார் என்பதுபோலத் தோன்றியது. மாற்றுத் தரப்புக்கும் இடம் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இறுதியாக, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் இவரது உயரதிகாரியான மதர் ஜெனரலுக்கும் இவருக்கும் நடக்கும் உரசல், அவர் ஜெஸ்மியை மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயற்சி செய்வது, அதிலிருந்து இவர் தப்பிப்பது, பின் ஒட்டுமொத்தமாக மடத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிடுவது என்று முடிவுசெய்துவிட்டு ஏதோ வில்லன்கள் குகையிலிருந்து தப்பிவருவதுபோல ஓட்டம் எடுப்பது. இது கொஞ்சம்கூட ஒட்டவில்லை.
முதலில் (இயேசுவுடனான) காதலைப் பார்ப்போம்.
என்னுடைய இயேசுவானவர் என்னை மணமகளாக சுவீகரித்துக்கொண்ட அன்றைய பரிசுத்தத் திருப்பலியை மனதிற்கிசைந்த ஒரு திருவிருந்தாக நான் உணர்ந்தேன். திரு உட்கொண்டதன்பின் நடக்கும் ஒன்றுகூடலின் பரவசத்தின்போது, நான் உமக்கானவள் மட்டுமே என்று அறிவித்த எனது விரலில் இயேசு மோதிரம் அணிவித்தார். ஆன்மிக நிலையில் மோட்சத்தினை நோக்கி உயர்த்தப்பட்ட அந்நிமிடங்களில் அவருக்கானவளாக மட்டுமே என்னால் இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். இனியொரு திருமணம் எனக்குத் தேவையில்லை, வாழ்க்கையில் எல்லா உலகியல் ஆசாபாசங்களும் தேவையில்லை, அவர்தான் எனது ஜீவன், ஏக அபயம், உறுதியான கற்பாறை, எனது கோட்டை, எனது வழி, உண்மை, எனது மோட்சம், எனது ஆனந்தம், என்னுடைய எல்லாமே… (பக்கம் 19)இது மேமி எனப்படும் பின்னாளில் கன்னிகாஸ்திரீயாக ஆகும்போது ஜெஸ்மி என்று பெயர் மாற்றம் பெற்றவர் கல்லூரியில் பிரீ டிகிரி படிக்கும்போது கத்தோலிக்க மாணவர்கள் குளோஸ்ட் ரிட்ரீட் என்ற முறையில் மூன்று நாள்கள் ஜெபம் செய்யும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் பின்னர்தான் மேமி கன்யாஸ்த்ரீயாக முடிவெடுக்கிறார். ஒருவித ட்ரான்ஸ் நிலையில் இறைவனோடு பேசுவதான, கூடுவதான நிலைகளை அவர் கற்பித்துக்கொள்கிறார்.
பின்னர் திருச்சபை சட்டப்பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதுகிறார்.
அன்றிரவு எங்களுக்குச் சீக்கிரமாகப் படுத்துக்கொள்வதற்கான அனுமதி உண்டு. கடந்த நாட்களில் நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோம் அல்லவா? ஆனால், ஏதோ ஒரு ஆன்மிகத் தூண்டுதல் என்னை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்றது. மற்றொரு நோவீஷுடன் நான் பீடத்தின்முன் முழந்தாளிட்டு நின்றேன். படிப்படியாகப் பிரார்த்தனையில் மூழ்கி தன்னை மறந்துபோனேன். ஓசையில்லாமல், அசைவில்லாமல், வெளிச்சமில்லாமல், நேரம் போவதறியாமல்… காற்றில் மிதக்கிறேனா நான்? திடீரென்று அது நிகழ்ந்தது. இயேசுவானவர் என்னுடைய இருதயத்தினுள் குதித்தார்.இதுபோன்ற இண்டென்ஸ் ஆன்மிக அனுபவங்களுக்குப் பிறகு சடங்குரீதியாக இயேசுவுக்கு மணவாட்டியாக இவரும் இவருடைய பேட்ச்சில் உள்ள பிற பெண்களும் கன்யாஸ்திரீ ஆகிறார்கள். கத்தோலிக்க அமைப்பின் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலை கிடைக்கிறது.
என்னுடைய உடல் பயங்கரமான இறுக்கத்தை அனுபவித்தது. இயேசுவே… என்னுடலினுள் உம்முடைய நுழைவின் உடல்ரீதியான அனுபவம்… இருதயம் தகர்ந்துபோகிறது. நானொரு புது சிருஷ்டியாக உருவாவதை என்னால் உணரமுடிகிறது. இயேசுவானவர் இப்போது என்னுடைய மனதிலும் உடலிலும் இணைந்திருக்கிறார். அவரது அசாதாரணமான ஐக்கியம், அவருடன் சேர்ந்தே இருப்பது – இதுதான் என்னுடைய ஒரே ஆசை. சொர்க்கம் வேறெங்குமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துகொண்டேன். (பக்கம் 46, 47)
அதன்பின் அவருக்கு ஏற்படுவதெல்லாம் மோசமான அனுபவங்களே என்பதாகவே புத்தகம் சொல்கிறது. பெண் துறவிகள் ஒருபால் சேர்க்கை நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சிஸ்டர் விமி என் பின்னால் திரிகிறாள் என்பதை நான் மெதுவாகவே புரிந்துகொண்டேன். … விடுதியில் உள்ளவர்கள் என்னைத் தேடி வரும்போது அவர்களிடம் கோபப்படுவதும் அலமாரியில் வைப்பதற்காக அவர்கள் கொண்டுவருகிற டேப் ரிக்கார்டரை இழுத்து வெளியே எறிவதுமாக என்னைப் பழி தீர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய இச்சைகளுக்கு நான் இணங்கவில்லை என்பதுதான் கோபத்திற்குக் காரணம் எனும் விஷயத்தை மற்ற கன்யாஸ்திரீகள் புரிந்துகொண்டார்கள். கடைசியில், அவளுடன் ஒத்துப்போகும்படி அவர்கள் எனக்கு ஜாடைமாடையாக அறிவுறுத்த ஆரம்பித்தார்கள்.ஆண் துறவிகள் அவரவர் மடங்களில் இப்படியே வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே ஆண் துறவிகள் வாய்ப்பு கிடைக்கும்போது பெண் துறவிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிஸ்டர் ஜெஸ்மி பெங்களூரு செல்லும்போது இப்படி நடக்கிறது.
என்னுடைய பாதுகாப்புக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலையில் கொஞ்ச நாட்கள் அவளுடைய விருப்பங்களுக்கு நான் ஒத்துழைத்தேன். இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கியபிறகு அவள் மெதுவாக வந்து என் படுக்கையில் நுழைவாள். பிறகு அவள் என்மீது காட்டுகிற அசிங்கங்களை எல்லாம் என்னால் தடுக்க முடியாமல் போய்விடும். தனித் தனிக் கதவுகள் இல்லாத அறைகள், விரிப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே வாசலை அடைக்க இயலாது. கர்ப்பம் தரிக்காமல் இருக்கவே தான் சுயபாலின்பத்தை விரும்புவதாகச் சொல்வாள். (பக்கம் 58, 59)
அதிகாலையில் நான் பெங்களூரு ஸ்டேஷனுக்கு வந்து சேரும்போது அருட்தந்தை, பொறுமையிழந்தவராக, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதை ரயிலிலிருந்து இறங்கும்போதே கவனித்தேன். அவருடைய அடக்கமான இயல்புக்கு மாறாக, என்னைக் கண்டதுமே மிகுந்த ஆவேசத்துடன் ஆலிங்கனம் செய்து, ஏற்கெனவே உறுதியளித்திருந்தது போன்ற ராஜ உபச்சாரத்துடன் அவரது தங்குமிடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். …இப்படியான சில பல காமப் பிரச்னைகளை புத்தகம் நெடுகிலும் காணலாம். காமக்கொடூரன்கள் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் உண்டு என்றாலும் வழிபாடு, கல்வி என்று கத்தோலிக்க மத அமைப்பில், மக்களின் நம்பிக்கைக்கு உகந்த இடங்களில் இருப்போர் சிறுவர், சிறுமிகளை, ஆதரவற்ற கன்யாஸ்திரீகளை சீரழிப்பது உலகம் முழுதும் நடக்கும் ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல அவ்வளவாக இடம் இருப்பதில்லை என்பது சோகம். மேலிடத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் இழுத்து மூடப்படுகிறது.
… நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்துகொண்ட அருட்தந்தை, மூச்சடைக்கவைப்பதுபோல் என்னைப் பலமாகக் கட்டிப்பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித்தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்காரவைத்துவிட்டுக் கேட்டார்:
‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’
இல்லயென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார். (பக்கம் 102, 103)
மற்றபடி கேரள கத்தோலிக்கக் கல்வி நிலையங்களில் ஊழல் பலவிதங்களில் தலைவிரித்தாடுவதை ஜெஸ்மியின் புத்தகம் விவரிக்கிறது. தனிநபர் ஊழல், புறஞ்சொல்லுதல், பொறாமை, பணம் கையாடல், நன்கொடை வசூலித்தல், ஏமாற்றுதல், வஞ்சம் தீர்த்தல், ஆட்களைக் கருவி அழித்தல்… மாறி மாறி, பக்கத்துக்குப் பக்கம் இப்படிச் செல்லும்போது மிகுந்த அலுப்பையே தருகிறது.
ஆனால் தனி நபராக ஒருவருக்கு இந்த அளவுக்குத் தொல்லைகள், அதுவும் பாலியல் தொல்லைகளும் சேர்த்து என்று வரும்போது ஜெஸ்மிமீது பரிதாபமும் வருகிறது. ஏன் இவர் இந்தக் கேடுகெட்ட ஸ்தாபனத்தில் இன்னமும் தொடரவேண்டும், ஏன் அறுத்துக்கொண்டு ஓடியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு செயல் அல்ல என்று கோடிட்டுக் காட்டுகிறார் ஜெஸ்மி.
என்ன செய்வார்கள்? திரும்பப் பிடித்துக்கொண்டுபோய்த் துன்புறுத்த அது என்ன ஜெயிலா? கத்தோலிக்க அமைப்பிலிருந்து வெளியேறினால் ஆள்வைத்துக் கொல்வார்களா என்ன? புரியவில்லை. அவர் கடைசியாக வெளியேற முடிவுசெய்து ரயிலில் போகும்போது அவர் படும் பதைபதைப்பு புத்தகத்தில் வெளியாகிறது. அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
இன்று அவர் வெளியில் இருக்கிறார். தன் பிரச்னைகளைப் புத்தகமாகவும் எழுதி அது பல இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையும் ஆகியுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பின் ஏன் அந்த அளவுக்குப் பயந்தார்?
தீவிர கத்தோலிக்கர்கள் பதில் சொல்ல இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது. இந்தப் புத்தகம் அவர்கள் மத்தியில் சுய பரிசோதனைக்கு இட்டுச் சென்றதா? அல்லது கேடுகெட்ட, மூளை பிசகிய, பைத்தியக்காரி ஒருத்தியின் உளறல்கள் என்று சொல்லி, அவரை உதாசீனப்படுத்திவிட்டார்களா? தெரியவில்லை.
-பத்ரி சேஷாத்ரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக