கடந்த ஏழு மாதங்களாக லிபிய அதிபர் மம்மர் கடாஃபிக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையில் நடந்துவந்த போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்கு வல்லரசு நாடுகளின் துணையுடன் புரட்சியாளர்கள் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பெருவாரியான பகுதிகளைக் கைப்பற்றி தாற்காலிக ஆட்சியையும் அமைத்துவிட்டனர். அதிபர் கடாஃபி இப்போது முன்னாள் அதிபராக்கப்பட்டு அவரது ஆதரவாளர்கள் ஒருசில பகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடாஃபியின் கதி என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்பது திட்டவட்டமாக இன்னும் தெரியவில்லை.இவை ஒருபுறம் இருக்க, லிபியாவின் தேசிய தாற்காலிக அரசு முஸ்தபா அப்தெல் ஜலீலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் உள்நாட்டுப் போர் முழுமையாக முடிவடையாததால், முறையான ஓர் அரசு இன்னும் அமைக்கப்படாத நிலைமை. இன்னும் பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாத அல்லது தயங்கும் உலக நாடுகள் சபை, வல்லரசுகளின் ஆதரவு இருப்பதால் லிபியாவின் தாற்காலிக அரசுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டிருக்கிறது.அதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றால், நாம் முன்பே நமது தலையங்கங்களில் எச்சரித்திருந்ததுபோல, லிபியாவின் உள்நாட்டுப் புரட்சியும், அதற்கு வெளிநாட்டு ராணுவ ஆதரவும்கூட எதிர்பார்த்த ஒன்றுதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. அங்கே நடந்த மம்மர் கடாஃபிக்கு எதிரான எழுச்சி என்பதே, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்று வல்லரசு நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் அரங்கேறியது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவுடுத்துகின்றன.பன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கும் இடையே புரட்சியாளர்களுக்கு உதவுவதிலும், இப்போது எண்ணெய் வயல்களை நிர்வகிப்பதிலும் இருக்கும் தொடர்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில், மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான விட்டோலுக்கும், பிரிட்டனின் சர்வதேச நிகழ்வுகளின் இணையமைச்சர் ஆலன் டங்கனுக்கும் இடையே நடந்த சந்திப்புகள் "தி கார்டியன்' பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அதேபோல, பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் அலய்ன் ஜுப்பே, லிபியாவின் தாற்காலிக அரசுடன் அந்த நாட்டின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 35 விழுக்காட்டை பிரான்சுக்குத் தருவதற்கான ரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருப்பதாக "லிபரேஷன்' என்கிற தினசரி வெளிப்படுத்தி இருக்கிறது. அதேபோல, அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கழுகைப்போல லிபியாவை வட்டமிடத் தொடங்கி இருப்பதாக மேலைநாட்டு அரசியல் விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.கடாஃபியின் ஆட்சியில் ஷெல், பிப்பி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு எண்ணெய்க் கிணறுகள் முழுவதும் லிபிய அரசின் நேரடிக் கட்டுப்பாடில் கொண்டுவரப்பட்டன. இப்போது, மீண்டும் லிபியாவுக்குள் நுழையும் முயற்சியில் அந்த நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதுமட்டுமல்ல, லிபியப் புரட்சியாளர்களுக்கு உதவியதற்குப் பிரதிபலனாக பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஆட்சியில் முன்னுரிமை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் வியப்பில்லை.ஆனால், லிபியாவில் அது மம்மர் கடாஃபியானாலும், புரட்சியாளர்களின் தாற்காலிக அரசானாலும், அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை நம்பி மட்டும்தான் ஆட்சி நடத்த முடியும். பாலைவனம் சூழ்ந்த வறண்ட பூமியான லிபியாவின் ஒரே பலம் எண்ணெய்க் கிணறுகள் மட்டுமே. லிபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல்கள். இன்றைய கச்சா எண்ணெயின் விலை நிலவரப்படி அது வாரத்துக்கு 1.3 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டித் தரக்கூடும். இந்த வருமானம் இல்லாமல் லிபியாவின் எந்த அரசாலும் அந்த நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது.மூடிக்கிடக்கும் எண்ணெய்க் கிணறுகள் உடனடியாகச் செயல்படத் தொடங்கி, மீண்டும் உற்பத்தி தொடங்கினால்தான் அரசு செயல்பட முடியும். அப்படி எண்ணெய்க் கிணறுகளைச் செயல்படச் செய்வதற்கு, லிபியாவின் தாற்காலிக அரசுக்குப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் உதவி தேவை. அதேநேரத்தில், தனது மொத்த உற்பத்தியில் 35% பிரான்ஸýக்கும், மீதியுள்ளதை பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி என்று பிற நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பது என்பதும் சாத்தியமில்லை. தாற்காலிக அரசு லிபியாவின் எண்ணெய் வளத்தை மேலைநாடுகளுக்குத் தாரை வார்க்கிறது என்கிற நிலைமை ஏற்பட்டால், புரட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் திரும்பிவிடுவார்கள் என்கிற ஆபத்தும் இருக்கிறது.இராக்கிலும் சதாம் ஹுசைனின் ஆட்சியை அகற்றியவுடன், பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் புதிய அரசு செயல்படும் என்று எதிர்பார்த்துக் கடைசியில் ஏமாற்றம் அடைந்தன. பிப்பி போன்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் புதிய இராக் அரசு, கச்சா எண்ணெய் எடுப்பதற்காக அந்த நிறுவனங்களிடம் ராயல்டி வாங்கிக் கொள்கிறதே தவிர, தனது நாட்டின் எண்ணெய்க் கிணறுகளை விற்றுவிடச் சம்மதிக்கவில்லை. இதே நிலைமைதான் ரஷியா போன்ற நாடுகளிலும். எண்ணெய்க் கிணறுகளை அரசு நிறுவனங்களாக வைத்துக் கொள்வதில் எல்லா நாடுகளுமே கறாராக இருப்பதை எப்படித் தடுக்க முடியும்?இராக்கில் நடந்ததுபோலவே லிபியாவிலும் நடந்தேறியது கச்சா எண்ணெய்க்கான போர்தான். உள்நாட்டுப் போர் முடிந்து, புதிய தாற்காலிக அரசு ஏற்பட்டிருப்பதால் இனி அடுத்த யுத்தம் தொடங்க இருக்கிறது. அது தாற்காலிக அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கப் போகிறதா இல்லை லிபியாவில் குழப்பம் ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி ஆகிய நான்கு நாடுகளுக்கும் இடையில் யாருக்கு எத்தனை விழுக்காடு எண்ணெய் என்பதைப் பங்குபோட்டுக் கொள்வதிலா என்பதுதான் இப்போதைய கேள்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக