சனி, 8 அக்டோபர், 2011

சித்திரவதைகளை எல்லாம் தாங்கேலாது. ஆனபடியாலை உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாத்ததையும் சொல்லுங்கோ”

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (17)
17. பி.எல்.எப்.ரி அன்ரன் சந்திக்க வைக்கப்பட்டார்!
எங்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனம் சுமார் ஒரு மணி நேரம் ஓடிய பின்னர் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறக்கப்பட்டோம். நான் உட்பட அதில் கூட்டிவரப்பட்ட அனைவரையும் புதிய இடம் ஒன்றில் சிறை வைக்கப் போகிறார்கள் என நான் எண்ணினேன்.
எனது கண்களை மறைத்துக் கட்டியிருந்த கறுப்புத் துணியை ஒருவன் அகற்றினான். எங்கும் கும்மிருட்டாக இருந்தது. வானின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த அனைவரும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அதிலிருந்து இறக்கப்பட்டனர். அவர்கள் மீது ஒரு புலி உறுப்பினன் ரோச் லைற் ஒன்றின் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி நின்றான்.

பின்னர் அவர்கள் எல்லோரும் ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி நடக்க, முன்னாலும் பின்னாலுமாக சில புலிகள் அவர்களை வழி நடாத்திச் சென்றனர். ரோச் லைற் வெளிச்சத்தில் அவர்கள் எல்லோரும் நீளமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் கட்டிடத்தில் அடுக்கடுக்காக ஏராளமான இரும்புச் சட்டங்களிலானான கதவுகள் இருப்பது தெரிந்தது. எனவே அது ஒரு சிறைச்சாலை எனப் புரிந்து கொண்டேன். ஆனால் என்னை அவர்களுடன் அழைத்துச் செல்லாது தனியாக வைத்திருந்தனர்.கொண்டுவரப்பட்ட ‘கைதிகள்’ அனைவரும் அந்தச் சிறைச்சாலையினுள் அடைக்கப்பட்ட பின்னர், காந்தியும் உதயனும் அருகிலிருந்த வட்டக் கொட்டில் ஒன்றினுள் என்னை கூட்டிச்சென்று உட்கார வைத்தனர். எனக்கு மிகவும் தண்ணீர் தாகமாக இருந்தது. முதல் நாள் மாலை கைதுசெய்யப்பட்டது முதல், தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் களைத்துப் போயிருந்தேன்.

“எனக்கு குடிக்கிறதுக்குக் கொஞ்சம் தண்ணி வேணும்” என அவர்கள் இருவரிடமும் கேட்டேன். அவர்கள் எதுவித சலனமுமின்றி மௌனமாக இருந்தனர்.

பின்னர் உதயன் என்பவன் என்னிடம், “இஞ்சை நாங்கள் தண்ணி குடிக்கிறதுக்காக வரல்லை” என்று சொன்னான்.

தாகமெடுத்தவனுக்கு தண்ணீர் தர மறுப்பவர்கள், மேற்கொண்டு என்னை எப்படியெல்லாம் நடாத்தப் போகிறார்களோ என எண்ணினேன். எச்சிலை மெல்ல விழுங்கி தொண்டையை ஈரமாக்கிக்கொண்டு பேசாமல் இருந்தேன்.

“இந்த இடம் எவடம் என்று தெரியுதா?” என உதயன் என்னிடம் வினவினான்.
நான், “தெரியேல்லை” எனப் பதிலளித்தேன்.

“இதுதான் நாங்கள் உங்களைப் போன்றவைக்காக கட்டி வைச்சிருக்கிற மேல் உலகம். இஞ்சை வந்தால் நேரடியாக மேல் உலகத்துக்குப் போகலாம். நீயும் எங்கடை விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கல்லை எண்டால், இங்கைதான் வரவேண்டியிருக்கும். ஆனபடியாலை யோசிச்சு நடந்துகொள்” என எனக்கு புத்திமதி கூறினான்.

அதன்பின்னர் அந்த மங்கலான மார்கழி மாதத்து நிலவு வெளிச்சத்தில், நான் அந்தப் பிரதேசத்தை அவதானித்தேன். சுற்றிவர தென்னை மரங்கள் நிறைந்த நிற்பது தெரிந்தது. எனவே அது ஒரு தென்னந்தோட்டம் என அனுமானித்துக் கொண்டேன். அவர்கள் பிரயாணம் செய்த நேரத்தையும் வைத்துப் பார்க்கையில், அது தென்மராட்சி அல்லது பச்சிலைப்பள்ளி பிரதேசமாக இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டேன். ஏனெனில் அங்குதான் இந்த மாதிரித் தென்னந்தோட்டங்கள் நிறைய உண்டு. அத்துடன் அந்தப் பிரதேசத்துக்குரிய வகையில் தரை மணலால் நிரம்பியிருந்தது.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் எழுந்து கொண்ட காந்தியும் உதயனும், தம்முடன் வரும்படி எனக்குக் கூறிவிட்டு முன்னால் நடந்தனர். நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அந்த இருட்டில் நான் எங்கும் தப்பி ஓடிவிடாதபடி இரு புலிகள் துப்பாக்கிகள் சகிதம் எனது இருபக்கமும் காவலுக்கு வந்தனர். சில அடிகள் தூரம் சென்றதும் அவர்கள் இருவரும் ஓரிடத்தில் நின்றனர்.

திடீரென எனது முகத்துக்கு மிகவும் பிரகாசமான ரோச் லைற் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. அதேபோல் எனக்கு முன்னால் சற்றுத் தள்ளி நின்ற ஒருவர் மீதும், அதேபோன்ற ஒரு ரோச் லைற் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. நான் கண்களை விழித்து உற்றுப் பார்த்தேன்.

என்ன ஆச்சரியம்! எனக்கு முன்னர் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்ட விசுவானந்ததேவனின் பி.எல்.எப்.ரி (PLFT) இயக்க முக்கியஸ்தர் அன்ரன் (விவேகானந்தன்) அங்கு நின்று கொண்டிருந்தார். அதே தோற்றம், அதே தாடி. கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. குழி விழுந்த கன்னங்களை தாடி மறைத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. கறுப்பும் வெள்ளையுமான ஒரு ரீ சேர்ட் அணிந்திருந்தார். அவரும் ஆச்சரியமாக என்னை உற்றுப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

“விவேகானந்தன் உன்ரை மணியண்ணை வந்திருக்கிறார். அவருக்கு நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு” என காந்தி அவரைப் பார்த்துக் கூறினான்.

அன்ரன் எவ்வித தயக்கமுமின்றி, சொல்லிக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்வது போல, “மணியண்ணை உங்களாலை இந்தச் சித்திரவதைகளை எல்லாம் தாங்கேலாது. ஆனபடியாலை உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாத்ததையும் சொல்லுங்கோ” என்று கூறினார்.

அவ்வளவுதான். ரோச் லைற்றுகள் அணைக்கப்பட்டு இருவரும் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டோம்.

அன்ரனை அந்த நிலையில் கண்டது எனக்கு மனக்கவலை அளித்தாலும், இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் அவரது இளம் மனைவியும் கைக்குழந்தையும் மட்டுமின்றி, அவருடன் பழகிய அனைவருமே அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற மனக் கிலேசத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மன உளைச்சல் பட்டுக் கொண்டிருந்தோம். இப்பொழுது அவர் உயிருடன்தான் இருக்கிறாh என்பதை எனது இரண்டு நிஜக் கண்களாலும் கண்டதுடன், அவரது வாhத்தைகளையும் கேட்டுவிட்டேன். அதன் காரணமாக ஒருவித மன நிம்மதி ஏற்பட்டது.
LTTE torture camp6
அன்ரன் என்னிடம் கூறிய வார்த்தைகள் புலிகளால் திட்டமிட்டு சொல்ல வைக்கப்பட்டவை என்பதை ஊகிக்க எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. தில்லையை என்னுடன் கதைக்க வைத்திருந்தாலும், இதே வார்த்தைகளைத்தான் தில்லையைக் கொண்டும் சொல்ல வைத்திருப்பார்கள்  என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இதிலுள்ள முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகள் என்னிடம் என்.எல்.எப்.ரி அல்லது பி.எல்.எப்.ரி சம்பந்தமான பல இரகசியமான விடயங்கள் இருக்கின்றன எனக் கருதியதுதான். ஆனபடியால்தான் அவர்கள் அன்ரன் மூலமாக எனக்கு ‘புத்திமதி’ சொல்ல எத்தனித்திருக்கின்றனர். அதாவது தமது சித்திரவதை முறைகளை அன்ரன் மூலம் சொல்லிப் பயமுறுத்தி, என்னிடமிருந்து விடயங்களைக் ‘கறக்கலாம்’ என எண்ணினர் போலும்!

என்னைப் பொறுத்தவரை, அவர்கள் கருதுவது போல என்னிடம் எந்தவிதமான இரகசியத் தகவல்களும் இல்லையென்பதுடன், மாமேதை லெனின் ஒருமுறை கூறியதுபோல ‘கம்யூனிஸ்ட்டுகளான எமது கொள்கைகள் ஒளிவு மறைவுமற்றவை’ என்பதே உண்மையாகும். புலிகளுடன் எமக்கு நேரெதிரான கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், அவற்றை நாம் அரசியல் ரீதியாகத்தான் தீர்த்துக் கொள்வோமேயொழிய, சதி சூழ்ச்சிகளில்; ஈடுபடுவது எமது நோக்கமோ வேலைப்பாணியோ அல்ல என்பது தெளிவானது. (ஆனால் புலிகள் அதற்கான ஜனநாயக இடைவெளியை ஒருபோதும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை)

இந்த இடத்தில் புலிகள் ‘வேலை மினக்கெட்டு’ என்னைச் சந்திக்க வைத்த அன்ரனைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியமானது. ஏனெனில் தங்கள் வாழ்க்கையை இந்த சமூக அமைப்பில் ஓரளவு சிறப்பாக தகவமைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தும், அவ்வாறு செய்யாமல், தமது மக்களுக்காகவும், தாம் வரித்துக்கொண்ட இலட்சியங்களுக்காகவும் இறுதிவரை விசுவாசத்துடனும் ஆத்ம சுத்தியுடனும் வாழ்ந்து மரணித்த மகத்தான மனிதர்களில் அன்ரனும் ஒருவர். அதுவும் புலிகள் போன்ற, அந்த மண்ணிலேயே உருவான பாசிசக் கொடுங்கோலர்களின் கரங்களினால் மரணத்தைத் தழுவிக் கொண்ட பல ‘மாமனிதர்களில்’ அன்ரனும் ஒருவர்.

அன்ரன் போன்ற இத்தகைய தியாகிகளே எமது வருங்கால சமுதாயத்தின் ஆதர்ச புருசர்களாக இருக்கப் போகிறவர்கள். அவர்களது மரணங்கள் - அவர்கள் எதற்காகக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள், எப்படிக் கொல்லப்பட்டார்கள், என்னவிதமான சித்திரவதைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டன, அவர்கள் எங்கு வைத்துக் கொல்லப்பட்டார்கள், அவர்கள் மீது என்னவிதமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பன போன்ற விவரங்கள் எமது சமூகத்தின் முன்னால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படுவதின் மூலமே, இன்னமும் கூட வெளிநாடுகளில் பகிரங்கமாகவும், உள்நாட்டில் இரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டு அடைகாக்கப்படும், தமிழ் பாசிச (யாழ்ப்பாணிய) முட்டைகளை குஞ்சு பொரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தொடரும்

கருத்துகள் இல்லை: