புதன், 15 மே, 2019

துருக்கி ஊடக சிரியாவுக்கு சென்று, ISIS பயிற்சி பெற்றவர்கள் .. இலங்கை குண்டுதாக்குதல் ...

Jeevan Prasad :
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!
வவுணதீவு கொலைகளும் சஹரானின் வேலை ! - 3
இலங்கையில் உள்ள இஸ்லாமிய பங்கரவாத பயிற்சிக்காக துருக்கி ஊடக சிரியாவுக்கு சென்று, ISIS பயிற்சி பெற்றவர்கள் சிலர் மட்டுமே. அவர்களில் மாவனல்லையில் பெளத்த சிலைகளை உடைத்த சம்பவத்தில் ஈடுபட்ட சாஹிட் இருந்தான். புத்தளம் வன்னாத்திவில்லு பயிற்சி முகாமின் பொறுப்பாளன் அவன்தான். ஏனைய முகாம்களின் பயிற்சியாளர்களாக அவனும் ,சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள் சிலரும் இருந்துள்ளார்கள். தற்போது புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல்களின்படி சிரியா சென்று பயிற்சி பெற்ற 10க்கும் அதிகமானோர் , சஹரானின் குழுவில் இருந்துள்ளார்கள். அவர்களில் பலர் தற்போது கைதாகி உள்ளார்கள்.
வவுணதீவு போலீஸ் அதிகாரிகள் கொலை , பயிற்சிக்கான ஆயுத சேகரிப்புக்காகவே நடந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் பாதுகாப்பு பிரிவின் அதிக கவனம் காத்தான்குடியை நோக்கி திரும்பியது. அதன்பின் முழுக் காத்தான்குடி பிரதேசத்தையும் படையினர் சுற்றி வளைத்து சஹரானின் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தார்கள்.
அப்படி 100க் கணக்கானவர்களை சுற்றி வளைத்து , கைது செய்து விசாரித்த போது , சஹரானின் உறவினர்கள் பலர் கைதானார்கள். அவர்களில் முகமது ஷாரிப் ஆதம் லெப்பை எனப்படும் கபூர் மாமா மிக முக்கியமானவர். அவர்தான் சஹரானின் வாகன சாரதி. அவரை விசாரித்ததில் அநேக உண்மைகள் வெளியாகின.

2018 நவம்பர் 30ம் திகதி இரவு , வவுணதீவு போலீஸ் காவல் அரணில் சேவையிலிருந்த இரு போலீசாரை வெட்டிக் கொத்தி, வெடி வைத்து கொலை செய்த விபரம் அவரிடமிருந்தே வெளியானது. அந்த கொலை நடந்த காலம் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்றதால் , அந்த கொலையின் சந்தேகம் முழுவதும் , முன்னால் விடுதலைப் புலிகள் மேல் திசை திருப்பப்பட்டு இருந்தது.
எனவே போலீசார் முன்னால் புலிகளில் இருந்த சிலரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தார்கள். கபூர் மாமாவின் வாக்கு மூலத்தில்தான் , துப்பாக்கி பயிற்சிக்கு போதியளவு துப்பாக்கிகள் இல்லாமையால் சஹரானின் உத்தரவில் அங்கிருந்த போலீசாரை படுகொலை செய்து விட்டு ஆயுதங்களை எடுத்தது தெரிய வந்தது.
அதற்கு தலைமை தாங்கியவன் மில்ஹான். தேசிய தவ்ஹித் ஜமாத்தின் ஆயுதப் பொறுப்பாளன் அவன்தான். ரோ புலனாய்வு துறை இலங்கை அரசுக்கு தந்த பட்டியலில் அவனது பெயரும் இடம் பெற்றிருந்தது. ISIS அவனுக்கு வைத்த பெயர் அபுசீலன்.
அன்றைய வவுணதீவு தாக்குதலுக்கு கல்முனையிலிருந்து 4 பேர் , இரு மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளார்கள். அவர்களில் இந்திய புலனாய்வுத் துறையான ரோ , குறிப்பிட்டிருந்த , ஆர்மி மொகிதீனும் இருந்தான். மில்ஹானைத் தவிர ஏனைய மூவரும் தற்போது கைதாகி உள்ளனர்.
இக் குழுவில் இருந்து சவுதி விமான நிலையத்தில் ஒளித்து , பின்னர் அங்கு கைதான தற்கொலை தாக்குதல்தாரிதான் அமைச்சர் கபீர் ஹசீமின் தொடர்பாளரான முகமது நஸ்லீமுக்கு , 2019 மார்ச் 09ம் திகதி துப்பாக்கி சூடு நடத்தியவன். அதுவும் சஹரானின் வேலை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அமைச்சர் கபீர் ஹசீமின் ஆதரவாளரான முகமது நஸ்லீம், பயங்கரவாதிகளது தகவல்களை போலீசாருக்கு வழங்கிதோடு, வனாத்தவில்லு முகாம் குறித்த தகவலையும் வழங்கினார் என அவர்களுக்கு தெரிய வர , அவரைக் கொலை செய்ய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக காயங்களோடு முகமது நஸ்லீம் ,வைத்திய சிகிச்சையின் பின் உயிர் பிழைக்கிறார்.
கபூர் மாமா , முகமது நஸ்லீமுக்கு சுட்டவர், வவுணதீவு போலீசாரை சுட்டுக் கொன்ற அதே மில்ஹான்தான் என்கிறார். மேலும் முகமது நஸ்லீமை சுட்ட ரிவோல்வர், வவுணதீவு போலீசாரிடமிந்து பறிக்கப்பட்டதுதான் என்கிறார். அந்த ரிவோல்வரும் , போலீஸ்காரர்களைச் சுட்ட , அடுத்த T 56 ஆயுதத்தையும் போலீசார் கைப்பறியுள்ளனர். சாய்ந்தமருது வீட்டில் கொல்லப்பட்ட நிபாஸ் கையிலிருந்தது அந்த T 56 துப்பாக்கிதான் அது.
ஏப்பரல் 21ம் திகதி குண்டு வெடிப்பு நடைபெறும் போது சஹரானின் மைத்துனனான மௌலானா ரிலா மெக்காவில் புனித கடமைக்காக போய் இருந்தான். இரண்டாவது தாக்குதல் அவனது தலைமையிலேயே நடைபெற இருந்தது.ஆனால் அவன் இலங்கையில் நடைபெற்ற எதுவும் தெரியாவன் போல ஏப்பரல் 30ம் திகதி இலங்கை வர இருந்தான்.
அவன் வரும் விமானத்தை எதிர்பார்த்து , அவனை கைது செய்ய , குற்றவியல் தடுப்பு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதட்டத்தோடு நின்றிருந்தார்கள். அவன் அன்றை தினம் வருவதாக இருந்தது. அவனது பெயர் அட்டவனையில் வேறு இடம் பெற்றிருந்தது. சவுதியிலிருந்து வந்த விமானத்தில் அவனது பொதிகள் வந்தன. ஆனால் அவன் வரவில்லை.
கடும் குழப்பத்துக்கள்ளான குற்றப் பிரிவு அதிகாரிகள், உடனடியாக சர்வதேச புலனாய்வுத் துறையினரது உதவியை நாடினார்கள். அப்போதுதான் அவன் , இறுதி நேரத்தில் விமானத்தில் ஏறாமல் ,விமான நிலையத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவனை சவுதி போலீசார் அங்கு கைது செய்கிறார்கள். அங்கு கைதான அவன் இப்போது சவுதி சிறையில் உள்ளான்.
தொடரும் .......

முன்னைய தொடர்கள் ......
1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - பிரிவினையால் திட்டம் சிதறியது! -01
https://www.facebook.com/photo.php?fbid=10158643674218902
2. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - தடயங்களும் தேடல்களும் ! - 2
https://www.facebook.com/ajeevan.veerakrthi/posts/10158644898178902

கருத்துகள் இல்லை: