திங்கள், 13 மே, 2019

படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!

periyar university periyar university .nakkheeran.in - manosoundar : பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் தொலைதூரக்கல்வி மையங்களின் ஒருங்கிணைப்பார்களோ, “கோவையிலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்டு  தமிழகத்தில் 200 தொலைதூர கல்விமையங்கள் உள்ளன. வரும் 15ந் தேதி சுமார் 16,000 மாணவர்கள் சேர்ந்து தேர்வு எழுத இருக்கிறார்கள். கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு ஈக்குவலான ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ்.வரை வேலைவாய்ப்பில்  ஏ டூ செட் முன்னுரிமைகளும் தொலைதூர கல்விமையத்தில் படிப்பவர்களுக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தொலைதூரக் கல்விமையத்தின்மூலம் டிகிரி முடித்துவிட்டால் பட்டதாரி ஆசிரியராகி  45,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும்.

அலுவலக உதவியாளர் இதில் சேர்ந்து டிகிரி முடித்துவிட்டால்  அலுவலகப் பணியாளருக்கான பதவி உயர்வுபெற்றுவிடுவார். போலீஸ் கான்ஸ்டபிளோ எஸ்.ஐ. தேர்வுக்கு தகுதியாகிவிடுவார். குரூப்-1, குரூப்- 2  என துணைக்கலெக்டர், டி.எஸ்.பி. பதவிகளுக்கான தேர்வுகள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆவதற்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகள்கூட எழுதமுடியும். அப்படிப்பட்ட, தொலைதூரக்கல்வி மைய மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்களே வழங்கவில்லை பெரியார் பல்கலைக்கழகம்” என்றவர்கள் தொலைதூரக் கல்வி மையங்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஊழல்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“தொலைதூரக் கல்விமையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகவேண்டும் என்றால் ட்ரஸ்ட் பதிவு செய்து பிரைடு எனப்படும் பெரியார் யுனிவர்சிட்டி டைரக்டரேட் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் இயக்குனர் புவனலதாவிடம்  விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கவேண்டும். மையத்தை கண்காணிக்க யுனிவர்சிட்டி இன்ஸ்பெக்‌ஷன் டீம் வரும். ஒருவருக்கு 25,000 ரூபாய் என இரண்டு பேருக்கு 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஓ.யு. (புரிந்துணைர்வு ஒப்பந்தம்) சைன் பண்ண அழைப்பார்கள்.
 5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய்வரை பேரம் நடக்கும். அதில், பேரம் படிந்தபிறகுதான் மையம் நடத்துவதற்கான அனுமதியே கிடைக்கும். அதற்குப்பிறகு, விளம்பரங்கள் கொடுத்து மாணவர்ச் சேர்க்கை நடத்தலாம். டிசம்பர், மே மாதங்களில் தேர்வு நடக்கிறது என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே புத்தகங்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதானே, படித்து தேர்வுக்கு தயாராக முடியும்? ஆனால், புத்தகங்கள் வழங்கப்படாமலேயே 16,000 மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள். காப்பி அடித்துக்கொள்ள ஒரு பேப்பருக்கு 500 ரூபாய் என 5 பாடங்களுக்கு 2,500 ரூபாய் வசூலித்துக்கொள்கிறார்கள்.

 1 மாணவருக்கு 2,500 ரூபாய் என்றால் சுமார் 16,000 மாணவர்களிடம் 4 கோடி ரூபாயை  வசூலித்துக்கொண்டு காப்பியடிக்க வைத்துவிடுவார்கள். இப்படி, தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எப்படி தகுதியானவர்களாக இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறவர்களிடம் புத்தகம் வழங்காமல் இருப்பது ஏன்? என்று கேட்டபோதுதான் இதைவிட கோடிக்கணக்கில் நடக்கும் ஊழலை வெளிப்படுத்துகிறார்கள்.


“பெரியார் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர் ஓய்வுபெற்றபோது உயர்கல்வித்துறைச் செயலாளர் சுனில்பாலிவால் கன்வீனராக இருந்தார். அப்போது, பல்கலைக்கழங்களில் தனியார் பிரிண்டர்களிடம்  கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு துணைவேந்தர்கள் அண்ட் கோவினர் ஊழல் செய்வதை கருத்தில் கொண்டு, ‘இனி, தொலைதூர கல்வி மையங்களுக்கான புத்தகங்களை பல்கலைக்கழகங்கள் பிரிண்டிங் செய்வதற்கான ஆர்டரை தமிழக அரசு அச்சகத்தில்தான் கொடுக்கவேண்டும்’ என்று அரசாணை வெளியிட்டார். இதனால், புதிதாக வந்த துணைவேந்தர் குழந்தைவேலு அரசு அச்சகத்தில் ஆர்டர் கொடுத்தால்  கமிஷன் கிடைக்காது என்பதால் ஆர்டர் கொடுக்காமல் இருக்கிறார். ஆனால், ஒருசில பல்கலைக்கழக துணைவேந்தர்களோ  அரசாணையை மதிக்காமல் தனியார் அச்சகங்களில் புத்தகங்களை பிரிண்டிங் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் கமிஷன்களை வாங்கிக்கொண்டு ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

துணைவேந்தர்களின் சுயநலத்தால் புத்தகங்கள் வழங்காமல் எதிர்கால அரசு அதிகாரிகளின் தரத்தையே பாழாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கடந்த 26ந் தேதிக்குள் தேர்வுக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று 23ந் தேதி அறிவித்திருக்கிறார்கள். சர்வர் ஒர்க் ஆகாதாதால் பல மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தமுடியாமல் தேர்வு எழுதமுடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  மே-15ந் தேதி நடத்தப்படும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட வேண்டும். புத்தகங்கள் வழங்கியபிறகே  தேர்வுகள் வைக்கப்படவேண்டும். இல்லையென்றால், தேர்வானது முறையான தேர்வாக இருக்காது” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, பெரியார் யுனிவர்சிட்டி டைரக்டரேட் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் இயக்குனர் புவனலதாவை தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் அண்ட் நாட் ரீச்சபிள் நிலையிலேயே உள்ளது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டபோது, விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார்.
புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்?

கருத்துகள் இல்லை: