புதன், 15 மே, 2019

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை! வீடியோ

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!மின்னம்பலம் :சேலத்தில் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவதாக மிரட்டியதால் பைனான்ஸ் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் மீதும், டி.எஸ்.பி. மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரி உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்( 50). இவர் ஆத்தூரில் ஸ்ரீ தனலட்சுமி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக பிரேம்குமாரிடம் ஆட்டோவின் ஆர்.சி.புத்தகத்தை வைத்து கடன் வாங்கிய தில்லை நகரைச் சேர்ந்த குட்டி என்கிற ராஜ்குமார் 75,000 ரூபாயும், பிறகு அதன் பேரிலேயே 50,000 என இரண்டு முறை பணம் வாங்கியுள்ளார். பிறகு, பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டு ஆய்வாளர் கேசவன் முன்னிலையில் சமாதானம் பேசி ஒரு மாதத்தில் கடனை திருப்பி கொடுத்துவிடுவதாக இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு எழுதி கையெழுத்துப் போட்டுள்ளனர்.


இந்நிலையில், தன்னை பிரேம்குமாரின் தம்பியெனக் கூறி, முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார் என்பவர் பணம் கேட்டு மிரட்டுவதாகக் குட்டி என்கிற ராஜ்குமார் ரயில் நிலையம் அருகிலுள்ள அவருடைய வீட்டின் முன்பாக காலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்றிய ஆத்தூர் போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். காலில் ஐந்து விழுக்காடு தீ காயத்துடன் சிகிச்சையிலிருந்த குட்டி கொடுத்த வாக்குமூலத்தில், செந்தில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தனது சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதாகவும் அதனால் தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து செந்தில்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்த ஆத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் என்.கேசவன், அவர்கள் இருவரையும் கைது செய்யாமல், புகார் கொடுத்த குட்டியை சரிக்கட்டி புகாரைத் திருப்பி வாங்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதுடன், அதற்கு மாற்றாக ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைக் காவல் நிலையத்துக்கும், புகார் கொடுத்த குட்டி வாங்கிய 75-ஆயிரம் ரூபாயைத் திரும்ப கேட்கக்கூடாது, அத்துடன் குட்டிக்கு இழப்பீடாக மூன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும். இல்லையானால் உன் தம்பி மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவோம் என மிரட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் தன் தம்பியை போலீசார் கைது செய்வதாகக் கூறி மிரட்டியதைக் கண்டு பயந்த பிரேம்குமார் நேற்று (மே 14) காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் உடனடியாக பிரேம்குமாரை மீட்டு ஆத்தூரில் உள்ள டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் பசிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (மே 15) அவர் உயிரிழந்தார்.
தான் உயிரிழக்கும் முன்பாக பிரேம்குமார் தன் மொபைல் போன் மூலம் பேசி பதிவு செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்,” குட்டி என்பவர் என்னிடம் 75, ஆயிரம் மற்றும் 50, ஆயிரம் என இரண்டு முறை பணம் வாங்கியுள்ளார். அதில், 12, ஆயிரம் மட்டும் தான் திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தைக் கேட்டபோது, நான் சொல்லாத வார்த்தைகளை எல்லாம் சொல்லியும், சாதிப் பெயரைச் சொல்லியும் திட்டியதாகக் கூறி பொய் புகார் கொடுத்துள்ளார்.
இதன் மீது வழக்குப் போட்டுள்ள ஆத்தூர் டி.எஸ்.பி வி.ராஜு மற்றும் ஆத்தூர் ஆய்வாளர் என்.கேசவன், இவர்களுடன், சாத்தை பாக்கியராஜ் அவர்களின் மக்கள் தேசம் கட்சியை சேர்ந்த சரவணன், குட்டி என்கிற ராஜ்குமார் எல்லோரும் சேர்ந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள்.
நான் அவர்களைச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டவில்லை இந்த புகாரை நீங்கள் தீர விசாரிக்க வேண்டும் எனக்கூறினேன் ஆனால், போலீசார் அதை விசாரிக்காமல் என்னைப் பணம் கேட்டு மிரட்டினார்கள். அதனால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட பிரேம் குமாரின் மகன் அரவிந்தன் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தீபாகணிக்கரிடம் கொடுத்துள்ள புகாரில், ”என் தந்தை மீதும், சித்தப்பா மீதும் பொய் வழக்குப் போடுவதாக இருபது நாளாக மிரட்டிவந்த டி.எஸ்.பி, ராஜு மற்றும் காவல் ஆய்வாளர்.கேசவன் இருவரும் என் தந்தையாரிடம் இருந்து தலா 50,000-பணம் வாங்கியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கை சுமுகமாக முடிக்க மேலும் ஐந்து லட்சம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். அதனாலேயே மன உளைச்சலுக்கு ஆளான என் தந்தையார் தற்கொலை செய்துகொள்ள முயன்றாக என்னிடம் கூறினார்.
எனவே, ஆத்தூர் டி.எஸ்.பி. வி. ராஜு மற்றும் காவல் ஆய்வாளர் என்.கேசவன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும், எங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாகத் திகழும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், சேலம் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஏத்தாப்பூர் இளங்கோவனின் சிபாரிசில் ஆத்தூரில் பணியாற்றிவரும், டி.எஸ்.பி வி. ராஜு மற்றும் ஆத்தூர் நகரக் காவல் ஆய்வாளர் என்.கேசவன் இருவரும் சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்தூர் பகுதி பொதுமக்கள் இவர்கள் மீது கடுமையான வெறுப்பில் உள்ளதால், அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்கவேண்டும் என்பதற்காகக் கூடுதல் போலீசாருடன் ஆத்தூர் வந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் காவல்நிலையத்தில் புகாருக்கு உள்ளான அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்ட பிரேம்குமாரின் உடல் மாலை நான்கு மணி வரை அவர் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையிலேயே உள்ளது.
..

கருத்துகள் இல்லை: