சனி, 1 ஜூன், 2013

கோடிகள் புரளும் கிரிக்கெட் வாரியம்: சீனிவாச மர்ம புராணம்

லலித் மோடிஏ சி முத்தையாஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தின் விறுவிறுப்பான த்ரில்ல்ர் கதை! படியுங்கள், ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 2
பிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. இதிலும் ஃபிக்சிங் உண்டு, விக்கெட்டுகள் சரிவது உண்டு. இப்போது ஆட்டம் கண்டிருக்கும் விக்கெட் சென்னை ஐபிஎல் அணியின் முதலாளி சீனிவாசனுடையது.

ஏ சி முத்தையா
சீனிவாசன்சரத் பவார்ஜக்மோகன் டால்மியாகிரிக்கெட் தொழிலைப் பொறுத்த வரை சீனிவாசன் வீழ்த்திய முதல் விக்கெட் ஸ்பிக் முதலாளி ஏ சி முத்தையா. உர மான்யம் மூலமாக மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டுக் கொண்டே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் இருந்தவர் ஏ சி முத்தையா. அவரது தயவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் சீனிவாசன். அந்த கால கட்டத்தில் தினமும் ஏ சி முத்தையாவின் வீட்டுக்கு காரில் போய் அவரை சந்தித்து பேசி விளையாட்டுத் தொழிலில் தனது நுழைவுக்கு ஆதரவு கேட்பாராம் சீனிவாசன்.
சீனிவாசன் கிரிக்கெட் சங்கத்தில் நுழைவதை 146 உறுப்பினர்களில் 118 பேர் எதிர்த்ததாகவும் முத்தையா அவருக்கு உறுதியாக உதவியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளே நுழைந்த சீனிவாசன் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முத்தையாவை வீழ்த்தி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை கைப்பற்றியதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இவையெல்லாம் தெருவோர கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போடும் சண்டை அல்ல. அமுத சுரபி போல அள்ளித்தரும் கிரிக்கெட் எனும் மாபெரும் வர்த்தகத்தை கைப்பற்றும் சாம்ராஜ்ஜியப் போர்!

ஜக்மோகன் டால்மியா (இப்போதைய முதமைச்சர் மம்தா பானர்ஜியுடன்)
சீனிவாசன் பங்கேற்ற அடுத்த காய் நகர்த்தல் வங்காள கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியாவை வீழ்த்துவதற்கானது. 1980-களுக்குப் பிறகான மறுகாலனியாக்க சூழலில் ரியல் எஸ்டேட் குடும்பத் தொழிலை விட வளர்ந்து வந்த கிரிக்கெட் தொழில் லாபகரமானது என்று முடிவு செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் இந்திய/உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர் ஜக்மோகன் டால்மியா. டால்மியா பதவி விலகும் வரை அல்லது விலக்கப்படும் வரை பெரும் ஊழல்கள் செய்தவர். அந்தக் குற்றச்சாட்டுகள் வழக்குகளாக மாறியதும் உண்டு. அத்தகையவரது தயவில் வாரியத்தின் நிதிக் குழு தலைவர் பதவியை பிடித்தார் சீனிவாசன்.

2005 முதல் 2010 வரை நேரடியாகவும், பினாமி மூலமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கட்டுப்படுத்திய சரத் பவார் மத்திய ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் விவசாய அமைச்சராகவும் இருந்தார். மத்திய அரசின் மக்கள் விரோத விவசாய கொள்கைகளால் மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் கொள்ளை போனது; அந்தக் கொள்ளையில் சரத் பவாரின் உறவினராக அஜித் பவாரும் ஏனைய பினாமிகளும் பங்கேற்றனர். இதன்றி மாராட்டிய மாநில சர்க்கரை ஆலைகளும் பவாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அந்த வகையில் அவர் மிகப்பெரும் தரகு முதலாளி.
இவர் விவசாய அமைச்சராக இருக்கும் போதுதான் அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த கால கட்டத்தில் சரத்பவார் முழு நேர கிரிக்கெட் நிர்வாகியாக தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.

சரத் பவார்
அவர் 2004-ம் ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது டால்மியாவின் பினாமியிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஆண்டே தமிழ்நாட்டின் சீனிவாசன், அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக இருந்த லலித் மோடி உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் டால்மியாவை மண்ணைக் கவ்வ வைத்து கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றினார் சரத்பவார். அதைத் தொடர்ந்து டால்மியா மீது மோசடி, பண கையாடல் வழக்குகள் போடப்பட்டு அவர் கல்கத்தா கிரிக்கெட் சங்க பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். டால்மியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தவர் சீனிவாசன்.
சரத் பவார் தலைவர் ஆனதும் சீனிவாசன் வாரியத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். சீனிவாசன் 2008-ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியை குத்தகைக்கு எடுத்தார். “வாரிய நிர்வாகிகள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் வணிக ஆதாயம் ஈட்டக் கூடாது” என்ற விதி திருத்தப்பட்டு ஐபிஎல் மற்றும் பிற டி-20 போட்டிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. எந்த சட்டமும், விதிகளும் முதலாளிகளின் நலன் பொருட்டே அவதரிக்க மட்டுமல்ல, திருத்தவும் படும். அதன் மூலம் வெளிப்படையாக பலன் அடைந்தவர் சீனிவாசன். இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் சொந்தக்காரராக இருந்த அதே நேரத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொருளாளர், செயலாளர், தலைவர் என்று அடுத்தடுத்து பதவி வகித்தார்.
இரு பதவிகளையும் ஒரே முதலாளி வைத்திருப்பதால் ஏற்படும் உள்ள பொருளாதார நல முரண்பாட்டை எதிர்த்து அவரது ஆரம்ப எதிரி ஸ்பிக் ஏ சி முத்தையா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சமாளிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரங்களை தனது மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் விட்டிருந்தார் சீனிவாசன். உச்ச நீதிமன்ற அமர்வின் 2 நீதிபதிகள் எதிரெதிரான தீர்ப்புகளை அளித்தனர். விரிவான அமர்வு ஒன்றின் விசாரணைக்காக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அது ஒரு புறமிருக்க இந்திய கிரிக்கெட் தொழிலில் தனது பிடியை வலிமையாக்கிக் கொண்டார் சீனிவாசன்.

லலித் மோடி
இந்தியா சிமென்ட்சில் வெறும் 0.14 சதவீதம் பங்குகளை மட்டும் வைத்திருக்கும் அவர் பல்வேறு உறவினர்கள், அறக்கட்டளைகள் என்று பினாமி மூலமாக சுமார் 28 சதவீதம் பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவற்றின் மூலம் கம்பெனியை 100 சதவீதம் கட்டுப்படுத்துகிறார். மூலதனமும், பங்குகளும், உரிமையும் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இணைக்கப்பட்டிருக்கின்றதோ அதே போன்ற மங்காத்தா விளையாட்டைத்தான் கிரிக்கெட்டிலும் நடத்துகிறார், சீனிவாசன். கோடிக்கணக்கான மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்குவதன் மூலம் இப்போதைய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்கள் அனைவரின் விசுவாசத்தையும் வாங்கியிருந்தார். கிரிக்கெட் வர்த்தகத்திற்கு விலை போகாதவர்கள் என்று எவருமில்லை.
ஐபிஎல்லை உருவாக்கி நிர்வகித்த, சரத் பவாரின் ஆதரவு பெற்ற லலித் மோடியை அவரது மோசடி, முறைகேடுகளை பயன்படுத்திக் கொண்டு 2010-ம் ஆண்டு நாட்டை விட்டே ஓடிப் போக வைத்தார், சீனிவாசன். அவர் மீது சென்னை போலீசில் மோசடி புகார் கொடுத்தவரும் சீனிவாசன்தான். இதெல்லாம் பிசிசிஐ எனும் நிறுவனத்தின் ஆதாயங்களை அடைய சண்டை போட்ட முதலாளிகளின் குடுமிபிடிச் சண்டையின் விளைவுகள். அதனால் ஏதோ சீனிவாசன் தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்று புரிந்துகொள்ளக் கூடாது.
அது உண்மைதான் என்பது மருமகன் குருநாத் மெய்யப்பன் மூலம் நடத்தப்பட்ட ஐபிஎல் சூதாட்டங்களின் மூலம் சீனிவாசன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதன் மூலம் தெரிய வருகிறது.

சீனிவாசன்
தமிழ் திரையுலகின் தாதாக்களான ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் மெய்யப்பன், சீனிவாசனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ‘சிமென்ட் தொழிலில் மற்ற முதலாளிகளுடன் கூட்டணி வைத்து விலையை உயர்த்தி, ஆண்டுக்கு ரூ 4,200 கோடி விற்பனையில் சுமார் ரூ 100 கோடி லாபம் பார்க்க முடிகிறது. இதுவே சென்னை சூப்பர் கிங்ஸை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு மாதத்திலேயே அவ்வளவு லாபம் சம்பாதித்து விடலாம், எல்லாம் என்னிடம் விட்டுடுங்க’ என்று குருநாத் மாமனாரிடம் சொல்லியிருக்கலாம்.
மாமனார் கிரிக்கெட் வாரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, மருமகன் சென்னை ஐபிஎல் அணி விவகாரங்களை பார்த்துக் கொள்ள சென்னை அணியின் பிராண்ட் மதிப்பு வாங்கிய போது இருந்த ரூ 500 கோடியை விட சில மடங்காவது தாண்டியிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியை இந்திய அணி தலைமை பொறுப்பிலிருந்து நீக்குவதாக தேர்வுக் குழு முடிவு செய்த போது வாரியத்தின் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் அதைத் தடுத்திருக்கிறார். தோனியின் கட்டுப்பாட்டில் இந்திய அணி இருப்பது வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் மதிப்பு உயரும். அதைப் பாதுகாக்க வேண்டியதுதான் சீனிவாசனின் முதல் கடமை. அதைத் தவறாமல் செய்திருக்கிறார். மேலும் தோனி தற்போது இந்தியா சிமெண்ட்சின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பந்தயம் வைத்து சூதாடியதற்காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்ட செய்தி வந்ததும் பங்குச் சந்தையில் இந்தியா சிமென்ட்சின் பங்கு விலை 20% சரிந்து ரூ 87.40-லிருந்து ரூ 71.65 ஆக இறங்கியது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ 500 கோடி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரூ 500 கோடி பிராண்ட் மதிப்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற வால்தான், ரூ 2,000 கோடி சந்தை மதிப்புடைய இந்தியா சிமென்ட்ஸ் என்ற நாயை ஆட்டுகிறது என்றால் ஐபிஎல் அணியின் சொத்து மதிப்பை புரிந்து கொள்ளலாம்.
குருநாத் மெய்யப்பனின் தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, ‘பெரிய மனது’ வைத்து, ஐபிஎல்லின், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாண்பை மக்கள் முன்பு காப்பாற்றுவதற்கு சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் மற்ற அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வாரியத்தின் விதிகளின்படி சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள்.
அருண் ஜேட்லி
அருண் ஜேட்லி
ஐபிஎல் போட்டி தொடர்பான சூதாட்ட கும்பலில் ஒருவராக குருநாத் கைது செய்யப்பட்டதும், அதுவரை அணியின் உரிமையாளராக முன் நிறுத்தப்பட்டு வந்த அவர், ஒரு சாதாரண கிரிக்கெட் ஆர்வலர்தான், சும்மா டீம் கூட சுத்திக் கிட்டு இருப்பார் என்று சீனிவாசன் நிறுவ முயன்றதை இவர்கள் யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரே நாளில் குருநாத்தின் டுவிட்டர் புரொஃபைல் மாற்றப்பட்டதையும், பொது வெளியில் இருக்கும் டுவிட்டர் விபரங்களுக்கே இந்த கதி என்றால் சீனிவாசன் & கம்பெனி கையில் இருக்கும் இந்தியா சிமென்ட்சிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய விபரங்கள் என்னவாகியிருக்கும் என்பதையும் கிரிக்கெட் முதலாளிகள் யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஐபிஎல் ஆணையராக பதவி வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர் ராஜீவ் சுக்லாவும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா துணைத் தலைவர் அருண் ஜேட்லியும், குருநாத் மெய்யப்பன் விவகாரத்தை விசாரிக்கப் போகும் குழுவை அமைப்பதில் சீனிவாசன் தலையிட்டு விடக் கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்களாம். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், தொலைக்காட்சி நிலையங்களிலும், பத்திரிகைகளிலும் ஊழலுக்கு எதிராக வீரமாக முழக்கமிடும் அருண் ஜேட்லி கிரிக்கெட் மோசடிகள் வெளியில் வந்து நாறுவது வரை அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் ஊழல் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் நேர்மையை புரிந்து கொள்ளலாம்.
அவரது ஐபிஎல் அணிக்கு சொந்தமான தோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதை தடுத்தது போல அவரது மருமகன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு குழு அமைப்பதில் வாரியத் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் தலையிட்டிருந்தால் வாரிய விதிகளோ, சக முதலாளிகளோ எதுவும் செய்திருக்கப் போவதில்லை, செய்திருக்கவும் முடியாது.
கிரிக்கெட் வாரிய பதவிகள் வகிக்கும் போதே ஐபிஎல் அணி முதலாளியாகவும் இருந்த சீனிவாசனை 3 ஐபிஎல் அணிகளில் பினாமிகள் மூலம் பங்குகள் வைத்திருந்த லலித் மோடியோ, புனே அணியில் பினாமி பங்குகள் வைத்திருப்பதாக சொல்லப்படும் சரத்பவாரோ விமர்சிப்பார்களா, என்ன?
நரேந்திர மோடி
நரேந்திர மோடி
குருநாத் மெய்யப்பன் சிக்கலில் மாட்டியதும், சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று மே 24-ம் தேதியே சரத்பவார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி பி திரிபாதி அவசரக் குடுக்கையாக கூறினார். அதை உடனடியாக வாபஸ் வாங்கிய சரத்பவார், ஒரு வாரத்துக்குப் பிறகு, காலம் கனிந்து விட்டது என்று உணர்ந்து அதே கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். “நான் வாரியத் தலைவராக இருந்திருந்தால் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்காது” என்று இப்போது அவர் சொல்கிறார். “கிரிக்கெட்டை காதலிக்கும் லட்சக்கணக்கான பேர் கோபமாக உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் அது இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என்று முதலைக் கண்ணீர் விடுகிறார் சரத்பவார்.
சரத்பவார் வழிகாட்டியதும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் களத்தில் குதித்திருக்கிறது. “கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை முடிவது வரை அதன் தலைவர் தார்மீக அறங்களின்படி பதவி விலக வேண்டும்” என்று ஒரு பிட்டை போட்டிருக்கிறது.
உறுதியான நிர்வாகம், ஊழலற்ற அரசியல் என்று இந்துத்துவா அம்பிகளால் விதந்தோதப்படும் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கமோ ‘அவரே எந்த தவறும் செய்யாததால்’ சீனிவாசனை உறுதியாக ஆதரிப்பதாக சொல்கிறது. தான் பிரதமர் ஆவதற்கு உதவும் என்றால் கர்நாடகாவின் எடியூரப்பாவையும் ஆதரிப்பவர்தான் மோடி.
ஐபிஎல் சூதாட்டம் பற்றி விசாரித்து உண்மைகளை கண்டறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்திருக்கும் மூன்று நபர் குழு உண்மையில் எதையும் கண்டறியவோ, சரி செய்யவோ போவதில்லை என்பதை சீனிவாசனே கூறி விட்டார். “நாங்கள் ஒரு தனியார் அமைப்பு, அரசு இல்லை. எங்களுக்கு விசாரணை செய்யும் அதிகாரங்கள் இல்லை” என்று அவர் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சூதாட்ட தரகர்கள், சூதாடும் வீரர்கள் யாரையும் கண்காணிக்கவோ, தகவல் தொடர்புகளை ஒட்டுக் கேட்கவோ, தவறு செய்பவர்களை கைது செய்யவோ அதிகாரம் இல்லாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் முறைகேடுகளை எப்படி ஒழுங்குபடுத்தும் என்று கேட்டவர் இந்த சீனிவாசன். ஒரு முறைகேடே முறைகேடுகளை ஒழுங்குபடுத்த முடியுமா என்ன?
சுருக்கமாகச் சொன்னால், இப்போது அம்பலமாகியிருக்கும் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட சூதாடிகளின் திருவிளையாடல்கள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளாலும் அவரது சக முதலாளிகளாலும் அனுமதிக்கப்படுபவை. அதனால்தானோ என்னவோ சூதாட்ட கிங்குக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2013-ல் களத்தில் “நெறிமுறை தவறமல் நேர்மையாக விளையாடிய அணி (fair play)” என்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் வாரிய விதிகளின்படி சூதாடி முதலாளிகளை நீக்க முடியாது; ஊழல்களை சரி செய்ய முடியாது; கிரிக்கெட் விளையாட்டின் ஆரோக்கியத்தை மீட்க முடியாது எனும் போது சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆனால், மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதாக சொல்லும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று முதலாளிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார். அதன் மூலம் சீசன்களின் போதும், சீசன்களுக்கு இடையேயேயும் முதலாளிகளின் மங்காத்தா தொடர்வதற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.
ஐபில் மோசடிகளையும் ஊழல்களையும் வெறுமனே கிரிக்கெட் எனும் ஒரு விளையாட்டு வர்த்தகமாக ஆனதின் பிரச்சினைகள் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இது உண்மையில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட் எனும் சாம்ராஜ்ஜியத்தில் முதலாளிகள் எப்படி தொழில் செய்கிறார்கள், சட்டம், விதிமுறை, நெறிமுறை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு தங்களது கொள்ளைக்கேற்ப தொழிலை எப்படி வடிவமைக்கிறார்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள், ஊடகங்கள் அனைத்தும் இதில் எப்படி சங்கமத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது.
முதலாளித்துவம் என்றால் என்ன அதன் கோரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிசிசியும் அதன் தலைவர் சீனிவாசனும் எடுத்துக்காட்டுகள். ஐபிஎல்லை தடை செய்து, பிசிசிஐ நாட்டுடமையாக்கி, அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர இந்த கொள்ளையர்களை துரத்துவதற்கு வேறு வழியில்லை.
(தொடரும்)
____________________
- அப்துல்

கருத்துகள் இல்லை: