செவ்வாய், 28 மே, 2013

IPL சூதாட்டம்: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 21 சதவீதம் வீழ்ச்சி

மும்பை: ஐபிஎல் சூதாட்ட புகார்கள், கைதுகள் காரணமாக பிசிசிஐ தலைவர் என் சீனிவாசன் தலைமையில் இயங்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ 500 கோடி நஷ்டத்தை கடந்த வாரத்தில் ஏற்படுத்தியுள்ளன. ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகள் எதிர்மறையாக இருந்த நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸின் அப்போதைய நிர்வாகி (Team Principle) குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்படதுமே 20.79 சதவீதம் வீழ்ச்சி கண்டன இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள். நிறுவனத்தின் நான்காம் காலாண்டில் லாபம் 59 சதவீதம் வீழ்ச்சி கண்டு வெறும் ரூ 26.28 கோடியாக இருந்தது. குறைவான தேவை, உள்ளூர் வரிகள் உயர்வுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது கிரிக்கெட் சூதாட்ட புகாரால் ஏற்பட்டுள்ள அவப்பெயர் நிறுவனத்தை அதள பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிறுவனத்தின் சந்தை முதலீடு குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிக வீழ்ச்சியை இந்த நிறுவனப் பங்குகள் சந்திக்கும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர். குருநாத் மெய்யப்பன் சூதாட்டப் புகாரில் கைதானதுமே அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியா சிமென்ட்ஸ் அறிவித்தது நினைவிருக்கலாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: