வெள்ளி, 31 மே, 2013

Radisson hotel vikram agarwal எங்கே? சி.பி.சி.ஐ.டி.,யில் ஆஜராகவில்லை! போலீஸ் தயார்

சென்னை:ஐ.பி.எல்., சூதாட்ட விவகாரத்தில், ஓட்டல் அதிபர் விக்ரம்
அகர்வாலின், முன்ஜாமின் மனு, தள்ளுபடியான நிலையில், நேற்று இரவு வரை, சி.பி.சி.ஐ,டி., அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி., தெரிவித்துள்ளது.ஐ.பி.எல்., சூதாட்ட விவகாரத்தில் தினம் ஒரு திருப்பம் நிகழ்ந்து வருகிறது. சென்னை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட,சூதாட்ட புரோக்கர்கள், 10 பேரில், கிட்டி(எ) உத்தம் ஜெயின் மற்றும், ராஜா ஆகியோர், காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.இதில், அயனாவரத்தில் உள்ள கிட்டி வீட்டில் சோதனையிட்ட போலீசார், பல ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கிட்டி மற்றும் ராஜா, இருவரும், நேற்று, போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் கோரிக்கையை ஏற்று, கிட்டியின் போலீஸ் காவல் மட்டும், வரும், மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ராஜா, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, கிட்டியை, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத் திற்கு மீண்டும் போலீசார் அழைத்து வந்தனர்.


விக்ரம் அகர்வால் எங்கே?

சூதாட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வரும், சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு, விசாரணைக்கு ஆஜராகும் படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும், மும்பை போலீசார் சம்மன் அளித்துள்ளனர். இதற்கிடையில், கைதை தவிர்க்க, முன்ஜாமீன் கேட்டு, விக்ரம் அகர்வால், ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.அவர் அளித்த இரு மனுக்களில், சி.பி.சி.ஐ.டி., தொடர்பான மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், நேற்று இரவுக்குள், சி.பி.சி.ஐ.டி., போலீசார் முன், ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரவு வரை அவர் வரவில்லை. பத்திரிகையாளர்களும், காலை, 8:00 மணி முதல், இரவு வரை காத்திருந்து, ஏமாற்றமடைந்தனர்.

மும்பை போலீசில், இன்று அவர், ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அங்கு, ஆஜராகலாம் என கருதப்படுகிறது. அதற்குள், அவரை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு இறங்கியுள்ளனர்.தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அடுத்த கட்ட நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து, டி.எஸ்.பி., ராஜா சீனிவாஸ் கூறியதாவது:

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கிட்டியின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை விசாரித்து, வழக்கு தொடர்பான, ஆதாரங்களை கைப்பற்றுவோம்.விக்ரம் அகர்வாலை, இன்று(நேற்று) ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தோம். ஆனால், ஆஜராகவில்லை. அதற்கிடையில், ஐகோர்ட்டில் அவர் அளித்திருந்த, முன்ஜாமின் மனுவும், தள்ளுபடியாகியுள்ளது. அவர், ஆஜராகாத பட்சத்தில், அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


விக்டரும், விக்ரமும்... : கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், விக்ரம் அகர்வால், தமிழகம் மட்டுமல்லாது, மும்பை, டில்லியிலும் பிரபலமானவராக இருந்துள்ளார். சூதாட்ட உலகில், அவர் விக்ரம் என்ற பெயரை விட, " விக்டர்' என்ற பெயரிலேயே அதிகமாக அறியப்படுகிறார். கிட்டியிடம் விசாரணை நடத்திய போலீசார், "விக்டர்' பெயரை கூறியதும் தான், அதிகளவு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: