புதன், 29 மே, 2013

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ‘திடீர் குலுக்கல்’! 12 பேர் காயம்!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் குலுக்கல் (turbulence) காரணமாக 11 பயணிகளும், ஒரு விமான சிப்பந்தியும் காயமடைந்தனர். ஏர்பஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ‘சூப்பர் டூப்பர்’ விமானம் என விளம்பரப் படுத்தப்படும் மிகப்பெரிய A-380 விமானத்திலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
“சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் SQ 308 விமானம் ‘சராசரிக்கு அதிகமானதில் இருந்து ஆபத்தான’ அளவிலான திடீர் குலுக்கலை சந்தித்தது. அந்த நேரத்தில், விமானத்தில் ‘சீட் பெல்ட்களை அணியவும்’ என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
லண்டனில் மீடியாக்களுக்கு பயணிகள் கூறியதன்படி, பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென உயரத்தை இழந்து (sudden loss of altitude) வானிலேயே கீழே விழுந்தது என்று தெரிகிறது.

விமானங்களுடன் உங்களுக்கு பரிச்சயம் இருந்தால், இதை ஏர்-பாக்கெட் (air pocket) என்று சொல்வார்கள் என்று அறிந்திருக்கலாம். (சில வருடங்களுக்கு முன் பாரிஸ் ஏர்-ஷோவில் ஏர்பஸ் நிறுவனம், A-330க்கு பிறகு தயாரிக்கப்பட்ட விமானங்கள் turbulence-ல் பாதிக்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளன என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது)
சிங்கப்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு, இரண்டு மணி நேரத்தின்பின் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது. விபத்து நடைபெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், 328 பயணிகளும், 26 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: