பல போராட்டங்கள், தடங்கல்கள் தாண்டி நவம்பர் 26 திரையில் பாஸ் பண்ணவிருக்கிறது பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்து + 2” . சாந்தனு - சாந்தினி நாயகன் நாயகியாக ப(ந)டித்துள்ளனர். ராஜேஷ், கஞ்சா கருப்பு, சீதா, தலைவாசல் விஜய் என திரைப்பட்டாளங்கள் பலரும் ந(ப)டித்திருக்கிறார்கள். இசை-யுவன் ஷங்கர் ராஜா. ஒரு ஹைலைட்டான பாடலையும் இதில் பாடியுள்ளாராம் யுவன்.
சித்து +2 படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி நடந்தும் தாமதமாகிவிட்டதாம். இந்தத் தாமதம் குறித்து சொல்லும் பாக்கியராஜ், 16 வயதினிலே படத்தின் போதும் பல தடங்கல்கள் ஏற்பட்டது. ஆனால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே போல் சித்து +2 வும் தாமதமானாலும் நல்ல வெற்றியைப் பெறும் என உறுதியளிக்கிறார்.
16 வயதினிலே படப்பிடிப்பின் போது, படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்தானது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடி மீண்டும் விபத்தானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எல்லோரும் தப்பினோம்.
அப்போது, எங்கள் வண்டியில இருந்த ஒருவர், வண்டியைவிட்டு இறங்கிபோனபோது இன்னொரு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது. 16 வயதினிலே பல தடைகளை மீறி ஹிட்டானது போல, இந்தப் படமும் ஹிட்டாகும். முதல் படம் செய்த போதுகூட நான் பயந்தது கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் தாமதத்தினால் ரொம்பவே பயம் வருகிறது.
இப்படி கூறிய பாக்கியராஜ் மேலும் தனது படங்களின் நாயகிகள் பற்றியும் குறிப்பிட்டார். “என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களை தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால்தான் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அதே மாதிரிதான், ‘சித்து+2’ படத்தின் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும். அதனால அவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கக் கூடிய மகன், தந்தை சென்டிமெண்ட், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ‘டீன் ஏஜ்’ காதல் போன்றவற்றுடன் பாக்கியராஜின் வழக்கமான சிறப்பம்சங்கள் பல நிறைந்த ‘சித்து +2’ ரசிகர்களிடம் ‘பாஸ்’ ஆகும் என்ற திடமான நம்பிக்கையில் உள்ளது படக்குழு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக