புதன், 10 நவம்பர், 2010

கருணாநிதி Vs சீமான் Vs தங்கர்பச்சான்?


சீமான் - தங்கர் பச்சான் இருவரும் தமிழர் பிரச்னை யைப் பேசுவதில் இணைந்த

கைகளாக இருந் தார்கள். இந்த நட்புக்கு ஒரு திடீர் சோதனை!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் சீமானை இரண்டு முறை சென்று சந்தித்தவர் தங்கர்பச்சான். சீமானின் விடுதலையை வலியுறுத்தி மேடைகளில் முழங்கும் அவர், ''இதற்காக, முதல்வர் கலைஞரை சந்தித்து கோரிக்கை வைப்பேன்!'' என்று மும்பையில் நடந்த 'நாம் தமிழர்' இயக்கப் பொதுக்கூட்டத்திலும் பேசினார். திடீரென, கடந்த புதன்கிழமை, கோபாலபுரம் இல்லத்தில் முதல்வரை சந்தித்தார்.



இந்த நிலையில், வேலூர் சிறையில் இருந்து சீமான் ஒரு கடிதம் எழுதி, தங்கருக்கு அனுப்பி இருப்பதாகவும், அதில் கோபமான வார்த்தைகள் வெடித்து இருப்பதாகவும் ஒரு தகவல். 'என் விடுதலைக்காக கெஞ்சும் தொனியில் கோரிக்கைவைத்து, முதல்வரை சந்தித்தது தவறு!' என்று குற்றம் சாட்டியுள்ள சீமான், 'வருத்தமும் கோபமும் கலந்த சீமான்' என்று கடிதத்தை முடித்து இருக்கிறாராம். ''என் நட்பை சந்தேகப்படுகிறாரே சீமான்...'' என்று தங்கர் சொல்லி வரு(ந்து)வதாகவும் ஒரு கிளைத் தகவல்.

தங்கரிடம், ''சீமான் விடுதலையை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதியை நீங்கள் சந்தித்தது தவறு என்று குற்றம் சாட்டுகிறார்களே?'' என்ற கேள்வியைக் கேட்டோம்.

தகதகவெனப் பொரிந்தார் தங்கர்...

''சீமான் என் சகோதரன். சாதியால்... மதத்தால்... கட்சியால் பிரிந்த தமிழர்களை இணைக்க வந்த தமிழ்க் கயிறு சீமான்! அவனது அன்பால் 10 ஆண்டுகளுக்கு முன் பிணைக்கப்பட்டு, இருவருக்கும் ஏற்பட்ட கொள்கை ஒற்றுமையால் இன்றுவரை ஒன்றிணைந்து வாழ்கிறோம். என் திரைப்படங்களிலும் இலக்கியத்திலும் எந்தத் தமிழர் ஒருமைப்பாட்டை நான் வலியுறுத்துகிறேனோ... அதை அரசியல் மேடைகளில் விதைத்து வருபவன் சீமான்.

நாலரை மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். தமிழ், தமிழ் இனம்பற்றி பேசுபவர்கள்கூட சீமானை மறந்துவிட்டனர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் நான் மூன்று முறை வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுள்ளேன். அங்கு உள்ள தமிழர்கள் அனைவருமே கேட்கும் ஒரே கேள்வி, 'சீமான் எப்போது விடுதலை ஆவார்?' என்பதுதான். இப்படிப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள 'நாம் தமிழர்' இயக்கத்தினர் என்னைப் பேச அழைத்தார்கள். 'என் சொந்த செலவில்தான் வருவேன்...' என்று சொன்னேன். அங்கு பேசும்போது, 'சீமான் விடுதலைக்காக கலைஞரை சந்தித்து முறையிடுவேன்!' என்று சொன்னேன். இது என் மனதில் இருந்து திடீரென்று கிளம்பிய ஓர் எண்ணம். அவ்வளவுதான்.

அடுத்த சில நாட்களில் காவிரிப் பிரச்னை தலை தூக்கியது. கட்சிக்குள் தலையைப் பிய்த்துச் சண்டை போட்டுக்கொள்ளும் கர்நாடக அரசியல்வாதிகள், 'தமிழனுக்கு தண்ணீர் தரக் கூடாது' என்ற விஷயத்தில் மட்டும் கைகோத்து நிற்கும் கொடுமையைக் கண்டித்து பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினேன். 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வரும் கூட்ட வேண்டும்' என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த சில நாட்களில் கலைஞரைச் சந்தித்தேன். 'சீமானை விடுதலை செய்யுங்கள், காவிரிப் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்!' என்று அவரிடமும் கோரிக்கை வைத்தேன். இதுதான் நடந்தது. இதில் என்ன தவறு?

இதைப் பார்த்துவிட்டு சீமான் எனக்கு ஒரு கடிதம் கொடுத்ததாகக் கொண்டுவந்து தந்தார்கள். எனது மும்பைப் பேச்சு அடங்கிய 'ஜூ.வி.' இதழை வேலூர் சிறையில் சந்தித்தபோது சீமானிடம் காட்டியிருந்தேன். அவரும் அதைப் படித்தார். அப்போதுகூட, 'நீ எனக்காக கலைஞரை சந்திக்காதே! அது எனக்குப் பிடிக்கவில்லை...' என்று அவர் சொல்லவில்லையே! 'நன்றாகத்தான் பேசியிருக்கிறாய்' என்றுதானே சொன்னார்.

இதில்கூட எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், அவர் எனக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில், எங்களது நட்பின் அடையாளம் தொலைந்து போயிருந்தது. என்னுடைய 10 ஆண்டுப் பாசம் அறுந்து போயிருந்தது. 'ஏதோ ஒரு நோக்கத்துக்காக நீ இப்படிச் செயல்படுகிறாய்' என்று சீமான் சொல்லி இருக்கும் வார்த்தைகளை என்னால் படிக்கவே முடியவில்லை.

எனக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும்? தங்கர்பச்சான் ஒரு தனி ஆள். எனக்குப் பின்னால் இயக்கம் இல்லை. நான் எந்த இயக்கத்தின் பின்னாலும் இல்லை. எடுத்த படத்தை வெளியிட முடியாமல், அதற்கான காரணத்தையும் சொல்ல முடியாமல், தவிக்கும் ஒரு தமிழ்ப் பட இயக்குநர் நான். சீமானின் நலம் மட்டுமே நாடும் நண்பன். எனக்கு என்ன நோக்கம் இருந்திருக்கும் என்று அவர் நினைக்கிறார் என்று தெரியவில்லை. கலைஞரை நான் சந்தித்தது தவறு என்று 'நாம் தமிழர்' இயக்கம் நினைக்கலாம். நான் அதன் உறுப்பினரும் அல்ல. பொறுப்பாளரும் அல்ல. என்னை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது. என் மனசாட்சி சொன் னதை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் உங்களைச் சந்திக்கவருகிறேன் என்று கலைஞரிடம் நான் சொல்லவும் இல்லை. 'சீமான் தவறாகப் பேசி விட்டார். அவரை மன்னித்து விடுதலை செய்யுங்கள்' என்று நான் சொல்லியிருந்தால் கெஞ்ச லாக இருந்திருக்கும். 'சீமானைக் கைது செய்ததே தவறானது.அவரை விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு வந்தேன். இருப்பினும், இது தன்னுடைய தன் மானத்தை அடமானம் வைக்கும் செயல் என்று சீமான் நினைக்கிறார். அப்படி இல்லை..... நான் எனது கள்ளமற்ற அபிமானத்தையே வெளிப் படுத்தினேன், அவ்வளவுதான்!'' -

கலங்கிய கண்களுடன் விளக்கி முடிக்கிறார் தங்கர்பச்சான்!

- ப.திருமாவேலன்

கருத்துகள் இல்லை: