வெள்ளி, 12 நவம்பர், 2010

கமலின் அடுத்தக் கனவுப் படம்

 
   
         நவம்பர் 20 ந் தேதி நடைபெறவுள்ள இசை வெளியீட்டினைத் தொடர்ந்து விரைவில் திரையில் ‘மன்மதன் அம்பு’ தொடுக்கவிருக்கிறார் கமல்.  அதற்கு முன் தனது அடுத்தப் படம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.



தசாவதாரம் படம் முடிந்தவுடன் எடுப்பதாக இருந்து... பட்ஜெட்டின் காரணமாக தள்ளிப்போடப்பட்ட படம்தான் ‘தலைவன் இருக்கின்றான்’. உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அன்பு என அடுத்தடுத்து பிஸியாகிவிட்ட கமல் மீண்டும் இப்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.  

சர்வதேச சமூகத்தை பற்றியதான இந்தப் படம்தான் இப்போது கமல் மனதை ஆக்கிரமித்துள்ளதாம்.  கமலின் கனவு படங்களான மருதநாயகம் மர்மயோகி படங்களின் வரிசையில் அடுத்தாக இருக்கும் இந்த ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாம். இந்தப் படத்தை கமலே இயக்கலாம் என்றும் அல்லது கமலுக்கு பிடித்தமான இயக்குனர் யாரேனும் இயக்கலாம் என்றும் கமல் வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.

தனது படத்துக்கு கதை, திரைக்கதை ஆகிவற்றை தானே அமைத்தாலும், அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை நம்பிக்கையான இயக்குனரிடம் விட்டுவிடுவது கமலின் வழக்கம். சிறப்பான பழக்கமும்கூட. இந்த வகையில் ‘அன்பேசிவம்’ படத்தை சுந்தர்.சி இயக்கினார்.  ‘தசாவதாரம்’ படத்தை அடுத்து ‘மன்மதன் அம்பு’ படத்தையும் இயக்கும் பொறுப்பை ஏற்றார் கே.எஸ்.ரவிக்குமார். 

கமலுக்கு மிகவும் பிடித்தமான, குறிப்பிட்டக்காலத்திற்குள் சிறந்த முறையில் படத்தை எடுத்து கொடுக்கும் இயக்குனராக இருப்பவர் ரவிக்குமார்தான்.  அதனால் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை கமல் இயக்காத பட்சத்தில் அந்த வாய்ப்பு ரவிக்குமாருக்கே கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் திரைவட்டாரத்தில் உள்ளது. 

‘மன்மதன் அம்பு’வில் கமலுடன் ஜோடி சேர்ந்த திரிஷா இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறாராம். மீண்டும் இணைகிறார் என்பதைவிட ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்க ஆல் ரெடி புக்கிங் திரிஷாதான். இந்தப் படம் தாமதமானதால்தான் மன்மதன் அம்புவில் அசின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் அந்த வாய்ப்பு வாய்த்தது திரிஷாவுக்கு.    

இந்தப் படத்திற்கு முதலில் ‘தலைவன் இருக்கிறான்’ என்றுதான் பெயர்வைத்திருந்தார்களாம்.  தமிழ் இலக்கண முறைப்படி ‘தலைவன் இருக்கின்றான்’ என்பதே சரி என்பதால் அதையே வைத்துள்ளார் கமல்.

கருத்துகள் இல்லை: