டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்துள்ள பேட்டியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் ராசாவை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதனால் காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றால், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க நான் தயார் என்று கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பெரும் தேசிய நஷ்டத்துக்கு அமைச்சர் ராஜாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ள அவரது அறிக்கை ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தது சுப்ரீம் கோர்ட்.
இப்போது இந்த அறிக்கையும் ராசாவுக்கு எதிராக உள்ளதால், சுப்ரீம் கோட்டில் நடக்கும் இந்த வழக்கின் அடுத்த அமர்வுக்கு முன் ராஜா மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் ராசா நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் மோதல் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஒரு அமைச்சர் கூட பணியாற்ற முடியாது என்று திமுக கூறியுள்ளது.
இதனால் ராசா மீது நடவடிக்கை எடு்க்கும் விஷயத்தில் மத்திய அரசு திணறி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை தனது சாதகமாகத் திருப்பி திமுக-காங்கிரஸ் கூட்டணியையே உடைத்து, காங்கிரசுடன் எப்படியாவது கைகோர்த்துவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்துள்ள பேட்டியில், ராசாவை நீக்குவதால் காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றால், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க நான் தயார்.
இப்போது எங்கள் கட்சிக்கு மக்களவையில் 9 எம்பிக்கள் உள்ளனர். மேலும் எங்களது கருத்தை ஒத்துள்ள கட்சிகளுடன் சேர்ந்து 18 எம்பிக்களின் ஆதரவை என்னால் திரட்டித் தர முடியும். (திமுகவுக்கு மக்களவையில் 18 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது).
நானாகவே முன் வந்து இந்த ஆதரவைத் தெரிவிப்பதற்கான காரணம் மிக சிம்பிளானது. இப்போது நடப்பது கூட்டணி அரசியல்.
ராசாவை நீக்குவதால் தனது மெஜாரிட்டி பறிபோய், ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று காங்கிரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் அஞ்சுவதாக நினைக்கிறேன். இதனால் தான் நானாகவே முன் வந்து ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளேன்.
காங்கிரஸ் இந்த விஷயத்தில் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதியின் முழு ஆதரவு பெற்ற ராசாவை இனியும் பதவிலியிருந்து நீக்காவிட்டால், காங்கிரசின் பெயர் இன்னும் கெடும் என்றார் ஜெயலலிதா.
உங்களது 9 எம்பிக்களோடு மேலும் 9 எம்பிக்களின் ஆதரவையும் பெற்றுத் தருவேன் என்று கூறுகிறீர்களே, அவர்கள் யார் என்று கேட்டதற்கு, அதை நான் இப்போது சொல்ல முடியாது என்றார் ஜெயலலிதா.
உங்களுக்கு ஆதரவுக்கு நிபந்தனை ஏதும் உண்டா என்று கேட்டதற்கு, என் சைடில் இருந்து எந்த நிபந்தனையும் இல்லை என்றார்.
பதிவு செய்தது: 11 Nov 2010 5:28 pm
ஜெயலலிதா இந்த அளவுக்கு தன்மானத்தை விட்டு பார்த்ததில்லை எப்படியும் பதவிக்கு வரவேண்டும் என்ற பதவி வெறி கண்ணை மறைக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக