புதன், 1 ஆகஸ்ட், 2018

மம்தா : எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை! டெல்லியில் சோனியா ராகுல் சந்திப்பு .. கொல்கத்தா பேரணிக்கு அழைப்பு..


சோனியா, ராகுல், தேவே கவுடாவை சந்தித்தார் மம்தா பானர்ஜிtamilthehindu : எனக்கு பிரதமராகும் ஆசையில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த மம்தா பானர்ஜி, பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “எனக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. நான் சாமானியர். சாதாரண ஒரு தொழிலாளி அவ்வளவுதான். தொடர்ந்து எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு இப்போது தேவையெல்லாம், மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்.

மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு அதிகபட்சமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை பாஜக அரசு செய்கிறது, மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை நிகழ்த்துகிறது. ஆதலால், ஒவ்வொருவரும் ஒன்று சேர வேண்டும், ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். நாட்டைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்து என்ன? என்று கேட்டதற்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், “நாட்டில் உள்ள 40 லட்சம் மக்களின் பெயர் அசாமில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளது. அவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும், அவர்கள் நமது குடும்ப உறுப்பினர்கள்தானே. அவர்களை வெளியேறு என்று சொல்லக்கூடாது” எனத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 11-ம் தேதி மேற்குவங்கத்தில் பேரணி நடத்துவேன் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசி இருப்பது குறித்து நிருபர்கள் மம்தாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,” அமித் ஷா தாராளமாக மேற்கு வங்கம் செல்லட்டும். 365 நாட்களும் அங்கு தங்கட்டும். பெங்கால் அனைவருக்குமானது. யார் வேண்டுமானாலும் பெங்காலுக்கு வரலாம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நான் கூறிய கருத்துகள் எல்லாம், பாஜக இந்த நாட்டில் என்ன செய்து வருகிறார்களோ அதைத்தான் நான் கூறினேன். ரத்தக்களறியாக பாஜக மாற்றும் என்பதைத்தான் நான் கூறினேன். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்.
தேசிய குடிமைப் பதிவேட்டைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையிலான நட்புறவு அழிக்கப்படும். என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த 883 பேர் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாஜக வாக்கு வங்கியைக் குறிவைத்து தேசிய குடிமைப் பதிவேட்டை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் உலகத்தையே பாதிக்கும். எல்லைகளில் யாரும் ஊடுருவ முடியாத வகையில் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், ஊடுருவிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பலர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்“ எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு மம்தா பதில் அளிக்கையில், “ நான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். 7 முறை எம்.பி.யாக இருந்திருக்கிறேன். அனைத்து கட்சித் தலைவர்களுடன் நல்ல நட்பு எனக்கு இருக்கிறது. இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்புதான்” எனத் தெரிவித்தார்

மாலைமலர் : டெல்லி சென்றுள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பேரணியில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.< அதன் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லிக்கு வந்த மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.


இந்நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். இருவரையும் பேரணியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். 

மேலும்,  டெல்லியில் பாராளுமன்றம் வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஜெயாபச்சன், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவே கவுடாவை சந்தித்து பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை: