THE HINDU TAMIL : ஆதார் தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டு அதை ஹேக் செய்ய முடியுமா என டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா சவாலுக்கு ஹேக்கர் சரியான பதிலடி கொடுத்தது, ஆதார் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சர்மாவின் சவாலை ட்விட்டரில் ஏராளமானோர் பாராட்டிய நிலையில், அடுத்த 8 மணிநேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஹேக்கர் சர்மாவின் ஆதார், பான் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களை அடுக்கடுக்காக ட்விட்டரில் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு ஹேக்கர் எளிதாக ஆதார் தகவல்களை ஹேக் செய்து வெளியிட்டு இருப்பது ஆதார் குறித்த தகவல்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின்(டிராய்) தலைவராக இருப்பவர் ஆர்.எஸ். சர்மா. இவர் இதற்கு முன் ஆதார் எண் அளிக்கும் யுஐடிஏஐ நிறுவனத்தில் பணியாற்றி தற்போது டிராய்க்கு திரும்பியுள்ளார்.
ஆதார் தகவல்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானது இல்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.சர்மா மறுத்து யுஐடிஏஐக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.
இதில் உச்சகட்டமாக, நேற்று ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு சவால் விடுத்தார். அதில் நான் “எனது ஆதார் எண்ணைப் பதிவிட்டுள்ளேன். முடிந்தால் இந்த எண்ணைப் பயன்படுத்தி என்ன பாதிப்புகளை விளைவிக்க முடியும் என்று கூறுங்கள், என் தனிப்பட்ட தகவல்களை எடுங்கள் இது சவால்” என்று பதிவிட்டார்.
டிராய் தலைவரின் இந்த சவாலுக்கு ட்விட்ரில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர். ஆதார் தகவல்கள் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதால்தான் இப்படி துணிச்சலாக சவால் விடுக்கிறார் என்று கூறி பலரும் புகழ்ந்தனர். 2,850, ரீடீவிட்களும், 3 ஆயிரம் லைக்குகளும் சர்மாவுக்கு கிடைத்தது.
ஆனால், இவை அனைத்தும் சில மணிநேரங்களில் மாறியது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஹேக்கர், ஆன்லைன் வல்லுநர், எலியட் ஆன்டர்சன் ஆர் எஸ் சர்மாவின் அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக பதிவிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் சர்மாவின் புகைப்படம், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மாற்று தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை ட்விட்டரில் பதிவிட்டு பிரான்ஸ் ஹேக்கர் ஆன்டர்சன் அதிர்ச்சியடையவைத்தார்.
அதற்குப் பதில் அளித்த பிரான்ஸ் நாட்டு ஹேக்கர் ஆன்டர்சன், “நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் வங்கிக்கணக்கோடு இணைக்க இல்லை. நீங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தது உங்களுடைய மொபைல் எண் இல்லை அது உங்களுடைய தனிச்செயலாளருடையது என்று பதிவிட்டார். மேலும் பான் எண் அனைத்தையும் பதிவிட்டு உங்களுடைய ஜிமெயில் பாஸ்வேர்டு, பயனாளர் பெயர் ஆகியவற்றை மாற்றிவிடுங்கள்,மிகவும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது” என்று ஆன்டர்சன் எச்சரித்தார்.
இதையடுத்து, ட்விட்டரில் நெட்டசன்கள் ஆர்எஸ்.சர்மாவுக்கு அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். இப்படித்தான் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றும், உங்களுடைய சவாலை 5 மணிநேரத்தில் எங்கிருந்தோ ஒரு ஹேக்கர் முறியடித்து, உங்கள் குறித்த தகவல்களை அளித்துவிட்டார். அப்படி யென்றால் நாட்டு மக்கள் நிலை என்ன என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
இது குறித்து பிடிஐ சார்பில் ஆர்எஸ் சர்மாவை தொடர்பு கொண்டு கேள்வி கேட்டபோது, அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்தச் சவால் இன்னும் சிலநாட்களுக்கு இருக்கும் என்று தெரிவித்தார்.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், டிராய் தலைவர் விடுத்த சவால் ஹேக்கரால் முறியடிக்கப்பட்டது மேலும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக