வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கலைஞரின் புதிய தலைமை செயலகத்திற்கு எதிரான ஜெயாவின் ரகுபதி கமிஷனை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

புதிய தலைமை செயலகம் விவகாரத்தில் அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷனை கலைக்க ஐகோர்ட் உத்தரவுமாலைமலர் : புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #RagupathiCommission சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த 2012-ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 2015-ம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, இதுவரை எவ்வளவு  ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.


மீண்டும் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டதற்கான செலவுகளை அரசு தாக்கல் செய்தது. 

ரகுபதி ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐகோர்ட் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது.

அப்போது இது வீண் செலவு இல்லையா என கேள்வி எழுப்பினார். ஆணையத்தின் செயல்படுகளை அரசு கண்காணித்து இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இன்று வழக்கு விசாரணையில், ரகுபதி ஆணையத்தை கலைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை ரகுபதி ஆணையம் ஆய்வு செய்துள்ள ஆவணங்களை வைத்து கைது நடவடிக்கை உள்ளிட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு வந்த வசதிகளை நிறுத்தவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை: