வியாழன், 4 மே, 2017

காஞ்சி சங்கரராமன் கொலையில் 21 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டால் யார் தான் குற்றவாளி ..நீதிமன்றம் கேள்வி !

காஞ்சி மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
By: Gajalakshmi  Oneindia Tamil : சென்னை : காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் யார் தான் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2004ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை என்றால் அது காஞ்சிபுரம் வராதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் கொலையாகத் தான் இருக்கும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004ல் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட போது குற்றசாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை, குற்றச்சதி செய்ததாக கூறப்படுவதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று கூறி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். 
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை காவல்துறை சரியான முறையில் நிரூபிக்கவில்லை என்று புதுச்சேரி கோர்ட் தெரிவித்ததையடுத்து நவம்பர் 2013ம் ஆண்டு அவர்கள் விடுதலையாகினர். 
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்காக இல்லாவிடிலும் ஜெயேந்திரர் தனக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியான ஆடியோ ஆதாரத்தை சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இதனை சிபி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்தமனுவை விசாரித்த விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் வழக்கில் தொடர்புடைய 21 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டால் யார் தான் குற்றவாளி என்று கேள்வி எழுப்பினர். 
இந்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், அப்போது ஆஜராகி விளக்கமளித்த புதுவை அரசு வக்கீல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நிராகரித்து விட்டதால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர். ஏன் புதுவை அரசு மேல்முறையீட்டு நடவடிக்கையை தீவிரமாக முயற்சிக்கவில்லை என்றும் நாளைக்குள் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஜெயேந்திரர் ஆடியோ மிரட்டல் குறித்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கிலும் புதுச்சேரி அரசு நாளை பதிலளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: