இந்திய அரசியல் சாசனத்தில் 262ஆவது பிரிவின்கீழ் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. அதை ஏற்பதும் ஏற்காமல்போவதும் மத்திய அரசின் விருப்பம். ஆகவே, கடந்த 20 மற்றும் 30ஆம் தேதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய, அது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியது. தமிழகத் தலைவர்கள் அனைவரும் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டநிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன.
இன்று காலை கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் எதிரில் ஒன்றுகூடி, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு கர்நாடகத்துக்கு சாதகமாகவும் தமிழகத்திடம் பாரபட்சமாகவும் நடந்துகொள்வதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். திருச்சியில் மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பேசிய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, “நமது நாடு கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி மகான். கிராமங்கள் விவசாயத்தில் வாழ்கிறது, விவசாயம்தான் நமது முதுகெலும்பு. அந்த முதுகெலும்பான விவசாயத்தின் மீது மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியிருக்கும். காவிரியில் எங்கள் உரிமை மீட்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
பாஜக அலுவலகம் முற்றுகை!
சென்னை தியாகராய நகரில் இருக்கும் பாஜக-வின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், அதற்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தினார்கள். பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். கடலூர், தஞ்சை, திருவாருர் உள்ளிட்ட பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக திமுக தஞ்சையில் 7ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. அதுபோல, மக்கள் நலக் கூட்டணியும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக