ஞாயிறு, 16 மார்ச், 2014

பா.ஜ.க. கூட்டணியில் விஜயகாந்த் ‘வழிக்கு வந்தது’ எப்படி?

ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கூட்டணி தொகுதிப் பங்கீடு ஒரு வழியாக முடிந்தது.
தொடக்கத்தில் பல தொகுதிகளில் பிரச்னை இருந்தாலும், கடைசிக் கட்டத்தில் திருப்பூர் தொகுதி யாருக்கு என்பதில் தே.மு.தி.க.வுக்கும, பாரதிய ஜனதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் இந்த இழுபறிக்குக் காரணமாம். இந்தப் பிரச்னை முற்றி, தே.மு.தி.க.வையே கூட்டணியில் இருந்து கழட்டிவிட பா.ஜ.க. தயாராகிறது என்பதை புரிந்து கொண்ட விஜயகாந்த், திருப்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தார் என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரங்களில்.
நாடு முழுவதும் வீசும் மத்திய காங்கிரஸ் அரசு மீதான எதிர்ப்பு, நரந்திர மோடி அலை, தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ஆகியவை பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பதை புரிந்து கொண்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முதலில் பா.ஜ.க. கூட்டணியை அமைக்க அச்சாரம் போட்டார். இதையடுத்து கொங்குநாடு மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. பா.ம.க., புதுவை என்.ஆர்.காங்கிரஸ், தே.மு.தி.க. என வரிசையாக கட்சிகள் பாரதிய ஜனதாவோடு கூட்டணி அமைக்க வந்தன.

இதற்கு முன் நடந்த தேர்தல்களின்போது, பா.ஜ.க. அலுவலகம் இருந்த தெருவுக்கே யாரும் வருவதில்லை. இம்முறை பலரும் வரிசையில் வந்ததை பார்த்த பா.ஜ.க.வும் அகமகிழ்ந்தது.
ஆனால், வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியபோதுதான் அவர்களது மகிழ்ச்சி, மிரட்சியாக மாறியது!
யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் தொடங்கிய பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே போனது. பின்னர் படிப்படியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதில் முடிவு எட்டப்பட்டது. அதன்படி தே.மு.தி.க. 14, பா.ம.க. 8, பா.ஜ.க. 8, ம.தி.மு.க. 7, கொங்கு நாடு மக்கள் கட்சி 1, ஐஜே.கே. 1, என்.ஆர். காங்கிரஸ் 1 என எண்ணிக்கை முடிவானது.
அடுத்ததுதான் ரியல் பிரச்னை ஆரம்பமானது.
கூட்டணி சேர்வதற்கு முன்னரே பா.ம.க., 10 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இது, முதல் முட்டுக்கட்டை. பா.ம.க. அறிவித்த தொகுதிகளையே தே.மு.தி.க.வும் கேட்டது. இது, இரண்டாவது முட்டுக்கட்டை.
இந்த இரு கட்சியைச் சேர்ந்த குழுவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையால் பாரதி ஜனதா கட்சிக்கு வாழ்க்கையே வெறுத்து, அதன் தமிழக தலைவர்கள் துறவம் மேற்கொள்ளலாமா என்று நினைக்கும் அளவுக்கு போனது.
ஒரு கட்டத்தில், பா.ம.க.வை கூட்டணியிலிருந்து கழற்றிவிடலாமா என்று பா.ஜ.க. யோசிக்க தொடங்கியது. அதையடுத்து பா.ம.க.வும் சற்று இறங்கி வந்தது. பா.ஜ.க.வும் தாம் கண்வைத்திருந்த சில தொகுதிகளை பா.ம.க.வுக்கு விட்டுக்கொடுப்பதாக தெரிவித்தது. அதன் பின்னரே பா.ம.க.வுடனான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
டில்லி தலைமை கொடுத்த நெருக்கடியையும் கண்டுகொள்ளாமல் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் நிதானமாகப் பேச்சுவார்த்தையை நடத்தினர். பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தல் அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளதை புரிந்து கொண்ட பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள், பொறுமை காத்து பேச்சுக்களை நடத்தினர்.
இந்த பேச்சுக்களில் அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல், வைகோதான். சில விஷயங்களில் முரண்பட்டாலும், கண்ணியமாக நடந்து கொண்டார் என்கிறார்கள், தமிழக பா.ஜ.க.வினர்.
இறுதியில் கடந்த சில நாட்களாக திருப்பூர் தொகுதிக்கு யாருக்கு என்பதில் தே.மு.தி.க.வுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் சிக்கல் நீடித்தது.
திருப்பூரைப் பெறுவதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டியதற்குக் காரணம், அங்கு அவர்களது கட்சிக்கு கொஞ்சம் அடித்தளம் உள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் அக்கறையின்மையால் தொழில்துறையினர், குறிப்பாக பனியன் தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, கொங்கு நாடு மக்கள் கட்சிக்கும் அங்கே கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது.
இவையெல்லாம் தனது வெற்றிக்கு சாதகமான அம்சங்கள் என நினைத்து திருப்பூரிலேயே பாரதிய ஜனதா தொங்கிக்கொண்டிருந்தது.
அதேநேரத்தில் பாரதிய ஜனதா மனதில் வைத்திருந்த இதே மூன்று காரணங்களையும் தே.மு.தி.க.வும் மனதில் வைத்துக்கொண்டு, தமக்கு திருப்பூரை கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.
இந்தச் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கையில்தான் விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கி 5 தொகுதிகளில் வேட்பாளர்களையும் தன்னிச்சையாக அறிவித்தார்.

இதனால், தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். “தே.மு.தி.க.வை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டாலும் பரவாயில்லை கூட்டணி தர்மத்தை மீறுவதை அனுமதிக்கக் கூடாது” என தமிழக பா.ஜ.க.வில் பலர் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து, “தே.மு.தி.க.வுக்கு கடைசி சந்தர்ப்பம் கொடுக்கலாம். சரிப்பட்டு வராவிட்டால் கழட்டி விடலாம்” என்ற முடிவு, பா.ஜ.க. தமிழக தலைமையால் எடுக்கப்பட்டது. அதற்கு டில்லியின் ஒப்புதலும் கிடைத்தது.
டில்லி பச்சைக்கொடி காட்டியதும், தமிழக பா.ஜ.க.வினர் தந்திரமான காரியம் ஒன்றை செய்தனர்.
“தே.மு.தி.க.வை கழட்டிவிட சொல்லிவிட்டது டில்லி” என்று ஒரு பேச்சை லீக் செய்தனர். கேப்டனுக்கு நெருக்கமான செய்தியாளர் ஒருவர் மூலமாக இந்த கதை விஜயகாந்தின் காதுவரை போக செய்தனர்.
கூட்டணியிலேயே அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள தமது கட்சியையே கழட்டிவிட தயாராகிறார்கள் என்பதை அறிந்து, திகைத்துப் போனார் கேப்டன்.
இந்த நிலையில் நேற்று காலை கேப்டனை தொடர்புகொண்ட பாரதிய ஜனதா, “இன்று மாலைக்குள் முடிவைக் கூறுங்கள், இல்லையெனில் உங்களது வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டது.
விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிஷை தொடர்பு கொண்ட, பொன். ராதாகிருஷ்ணன்,  “தே.மு.தி.க. எமது கூட்டணியில் நீடிக்கிறதா? இல்லையா? விஜயகாந்த் நேற்றைய பிரசாரத்தில் ஓர் இடத்தில்கூட மோடியை பற்றியோ, பா.ஜ.க. கூட்டணி பற்றியோ பேசவே இல்லை. என்ன செய்யும் உத்தேசத்தில் உள்ளார் என்பதை கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள்” என்றார்.
இந்த விஷயத்தை உடனடியாக ஆரணி தொகுதியில் பிரசாரத்தில் இருந்த விஜயகாந்துக்கு பாஸ் செய்தார் சுதீஷ்.
ஏற்கனவே தமக்கு வேண்டிய செய்தியாளர் காதில் போட்ட தகவலும், சுதீஷ் கூறிய தகவலும் ஒத்துப் போவதை கவனித்த விஜயகாந்த், ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டார்! “நமக்கு தலையில் மஞ்சத்தண்ணி தெளிச்சு விட்டாக.. அடுத்து, கேள்வி இல்லாமல் வேள்விதான்”
உடனே யு-டர்ன் அடித்த கேப்டன், “என்னங்க இது? யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது ஒரு பிரச்னையே இல்லிங்க. கூட்டணிதான் நமக்கு முக்கியம் இல்லிங்களா? திருப்பூர்ல நீங்க நின்று ஜெயித்தாலும் நாம ஜெயித்தது மாதிரி தானுங்களே.. நீங்களே திருப்பூரை வெச்சுக்குங்க” என்றார், பெருந்தன்மையாக (!).
உடனடியாக தமது பிரசாரத்தில் “மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்” எனவும் பேச தொடங்கி விட்டார்.
கேப்டனின் இந்த திடீர் மாற்றத்தை புரிந்துகொண்ட கமலாலயத்தில் (பா.ஜ.க. அலுவலகம்) இருந்தவர்களின் முகங்கள் அவர்களது சின்னமான தாமரைபோல மலர்ந்தன. தொண்டர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக உற்சாகமடைந்தனர். விஜயகாந்தின் இந்த முடிவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி, ராஜ்நாத் சிங், மோடி மற்றும் வைகோ, ஏன் அன்புமணி ராமதாஸ் கூட வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதன் மூலம் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே மிரளும் வகையில் பாரதிய ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது.
பாரதிய ஜனதா டில்லி தலைமை இன்று தொகுதிப் பங்கீட்டை அறிவித்த உடன், கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கத் தயாராக உள்ளனர். இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர்கள், வைகோ, ராமதாஸ் ஆகியோரும் தங்கள் பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி விட்டனர்.
ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் குறையாத மூன்று முக்கிய அணிகள் களத்தில் இறங்கியுள்ள தேர்தல் திருவிழா, தமிழகத்தில் இனி களைகட்டும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: