ஞாயிறு, 16 மார்ச், 2014

மாயமான மலேசியன் விமானம்: சில உண்மைகள் !


இன்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களை சந்தித்து விமானம் மாயமானது குறித்து சில தகவல்களை தெரிவித்தார். விமானம் மாயமாக மறைந்தபின், மலேசியப் பிரதமர் அது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டை நடத்துவது, இதுவே முதல் தடவை.
அதன் அர்த்தம் என்னவென்றால், புலனாய்வில் தெரியவந்த சில விஷயங்களை, வெளிப்படையாக அறிவிப்பதற்கு மலேசியா தயாராகி விட்டது.
மாயமான போயிங் 777-200ER விமானம் (இதில் ER என்பது எதைக் குறிக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, Extended Range) வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது என்ற பிரதமர், “விமானத்தை அதன் வழமையான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர்” என்றார்.

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், விமானம் பற்றிய விஷயம் நன்கு தெரிந்த யாரோதான் இதை செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் மலேசிய புலனாய்வாளர்கள்.
அதாவது, தொழில்நுட்ப கோளாறு, விமானத்தின் ஸ்டக்ஷரல் டேமேஜ் ஆகியவற்றின் சாத்தியங்களை ஒதுக்கி விட்டனர்.
“எமது புலனாய்வு தற்போது, விமானத்தை செலுத்திய விமானிகள், விமானாத்தில் இருந்த பயணிகளை மையம் கொண்டே உள்ளது. அவர்களது பின்னணிகள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளோம்” என்றும் கூறினார், மலேசிய பிரதமர்.
விமானத்தை செலுத்திச் சென்ற விமானிகள் இருவருக்கும், விமானம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதிலும், விமானத்தின் பிரதான விமானி, 53 வயதான ஸகாரி அஹ்மத் ஷா, போயிங் 777 விமானம் பற்றி நன்கு அறிந்தவர். இந்த விமானத்தின் பயிற்சி உபகரணம் ஒன்றை (flight simulator) தமது வீட்டிலேயே தயார் பண்ணி வைத்திருந்தவர்.
இந்த இரு விமானிகளையும் விட்டுவிட்டு பார்த்தால், இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்காவது, விமானத்துறையுடன் தொடர்புகள் உள்ளனவா என்பதை புலனாய்வாளர்கள் பார்ப்பார்கள்.
முக்கியமாக, பயணிகளில் யாருக்காவது பிளையிங் லைசென்ஸ் உள்ளதா என்பது தெரிய வேண்டும்.
அப்படியான பிளையிங் லைசென்ஸ் உள்ள யாராவது அந்த விமானத்தில் பயணியாக பயணம் செய்திருந்தால், அந்த நபர் ஆபரேட் பண்ணியது எந்த ரக விமானங்கள் என்பதை ரிக்கார்ட்கள் மூலம் சுலபமாக தெரிந்து கொண்டுவிடலாம் என்பது உண்மைதான்.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு நபர், தமது சொந்தப் பெயரில் பயணம் செய்திருக்க வேண்டுமே..! 
செய்தியாளர் மாநாட்டில் மலேசிய பிரதமர் உறுதி செய்த மற்றொரு முக்கிய தகவல், “எமக்கு கிடைத்துள்ள புதிய தரவுகளின்படி, இந்த விமானத்துக்கும், தரைக்குமான இறுதி சிக்னல் ட்ரான்ஸ்மிஷன், மலேசிய நேரம் காலை 8:11-க்கு (0011 GMT) ஏற்பட்டது” என்பது!
இவர் சொல்வதன் அர்த்தம் என்ன? இந்த விமானம் மாயமாக போன நேரத்திலிருந்து 7 மணி நேரத்தின் பின்னர், இந்த சிக்னல் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், மலேசிய பிரதமரின் செய்தியாளர் மாநாடு நடப்பதற்கு முன்னரே, பிரதமர் இப்போது கூறியுள்ள சிக்னல் விவகாரம் பற்றி விரிவாக விறுவிறுப்பு.காமில் “மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய கடலுக்கு வந்தது என்ற ஊகம் ஏன்?” என்ற கட்டுரையில் எழுதியிருந்தோம். அதில் கூறப்பட்ட விஷயங்களைத்தான் சில மணி நேரத்தின்பின் மலேசிய பிரதமர் செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.
நாம், அந்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு தரப்பில் இருந்து பெற்றிருந்தோம்.
இரு தினங்களுக்கு முன் பிரபல அமெரிக்க பிசினெஸ் மீடியா, த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், “மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், தரையுடன் இறுதியாக தொடர்பு கொண்டதாக கூறப்படும் நேரத்தில் இருந்து 4 முதல் 5 மணி நேரம் பறந்திருக்கிறது” என்ற தகவலை வெளியிட்டது.
அது பற்றி விறுவிறுப்பு.காமில், “மாயமான மலேசியன் விமான எஞ்சினில் இருந்து தகவல் வந்து சேர்ந்தது என்பது நிஜமா?” என்ற கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அந்த தகவலை அப்போது மறுத்தது மலேசியா. மலேசிய மறுப்பு பற்றி நாம் வெளியிட்ட “BRIEF: “மலேசிய விமானம் பற்றி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் தவறு” -மலேசியா” என்ற செய்தியை பார்க்கவும்.
அந்த செய்தியில், மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசேன், “விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த டேட்டா ட்ரான்ஸ்மிஷன், அதிகாலை 01:07-க்கு (மலேசிய நேரம்) அனுப்பப்பட்டது. அதன்பின் எந்த தகவலும் (டேட்டா) விமானத்தில் இருந்து ட்ரான்ஸ்மிட் செய்யப்படவில்லை” என்று கூறியதை எழுதியிருந்தோம்.
பின்னாட்களில் இந்த விவகாரம் திசைதிரும்பலாம் என்பதற்காகவே, மலேசிய போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்திருந்தோம்.
இப்போது மலேசிய பிரதமர், “இந்த விமானத்துக்கும், தரைக்குமான இறுதி சிக்னல் ட்ரான்ஸ்மிஷன், மலேசிய நேரம் காலை 8:11-க்கு (0011 GMT) ஏற்பட்டது” என்கிறார்.
இருவரது கூற்றுக்கும் இடையே, ட்ரான்ஸ்மிஷன் கிடைத்த விவகாரத்தில், 7 மணி நேரத்தைவிட அதிக வித்தியாசம் உள்ளது.
பிரதமர் கூறிய தகவல் தற்போதுதான் புதிதாக கிடைத்தது என்று சொன்னால் நம்பாதீர்கள்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் மீடியாவுக்கே இந்த தகவல் தெரியும்போது, விமானத்துக்கு உரிமையாளரான ஒரு நாட்டுக்கு அந்த விஷயம் தெரியாமல் இருந்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது என நம்புவதென்றால்… அட, போங்க சார்.
சரியான காரணம் இருந்தால் விஷயத்தை மறைப்பதில் தப்பில்லை. ஆனால், புத்திசாலித்தனமாக மறைக்க வேண்டும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: