திங்கள், 17 மார்ச், 2014

அழகிரி : தனிக்கட்சி தொடங்க மாட்டேன் ! ஸ்டாலின் நிம்மதி போச்சுடா ? அண்ணன் விளையாடுகிறார் !


தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி. அதிரடி நடவடிக்கையால் அரசியலை கலக்கி வந்தார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வைகோவை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இதனால் மு.க.அழகிரி என்ன முடிவு எடுக்கபோகிறார்? என்ன செய்யப்போகிறார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் "கலைஞர் தி.மு.க." என்ற பெயரில் மதுரையில் பல பகுதிகளில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டி இருந்தனர். கட்சியும் ரெடி, கொடியும் ரெடி கலைஞர் தி.மு.க. பொதுச்செயலாளரே என்ற வாசகத்துடன் மு.க.அழகிரி நடந்து வருவதுபோல அந்த போஸ்டர்கள் காணப்பட்டன. இதனால் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது.


இதுதொடர்பாக நேற்று அவர் கூறும்போது, நாளை (அதாவது இன்று) எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளேன். அந்த கூட் டத்தில் அவர்களது கருத்தை கேட்டறிந்து எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.

அதன்படி மதுரையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா மகாலில் இன்று காலையில் இருந்தே அவரது ஆதரவாளர்கள் வந்து குவிய தொடங்கினர். சுமார் 2 ஆயிரம் பேர் வந்து குவிந்தனர். 10.50 மணிக்கு மு.க.அழகிரி வந்தார். அவர் வந்ததும் அண்ணன் அஞ்சாநெஞ்சன் வாழ்க என தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஆதரவாளர்கள் பேசிய பிறகு மு.க.அழகிரி பேசினார்.

அவர் பேசியதாவது:–

எனது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மட்டுமல்ல, எப்போதும் எனக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது நாம் அமைதிகாக்க வேண்டும். முதலில் போஸ்டர் அடிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அடித்ததுதான் நம்மளை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் கலைஞரை எதிர்த்தே போஸ்டர்கள் அடித்தார்கள். அதெல்லாம் ஒன்றும் தவறில்லையாம். ஆனால் எனது பிறந்த நாளைக்கு என்னை வாழ்த்தி நீங்கள் போஸ்டர் அடித்தால் அது தவறாக தெரிகிறது. எனது ஆதரவாளர்களை நீக்கினார்கள். இதுபற்றி தலைவரிடம் சென்று கேட்டபோது என்னையும் சஸ்பெண்டு செய்து விட்டார்கள்.

நான் என்ன தவறு செய்தேன். கடந்த 5 ஆண்டு காலம் மத்திய மந்திரிசபையில் கேபினட் அமைச்சராக இருந்து மதுரைக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தேன். இதற்கு உதவியாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கை சமீபத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

அப்போது அவர், கூட்டணியை விட்டு தி.மு.க. விலகியது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தேன். அவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து என்னிடம் பேசினார்.

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டார். நான் எதுவாக இருந்தாலும் எனது ஆதரவாளர்களிடம் கலந்து பேசிதான் முடிவை அறிவிப்பேன். அதுவரை நான் ஒன்றும் சொல்ல முடியாது என்றேன். தேர்தலில் ஆதரவு தருவதாக எந்த உத்தரவாதமும் தர முடியாது என கூறிவிட்டு சென்னை வந்தேன்.

இங்கு வந்தால் நிருபர்கள் கட்சி தலைமை உங்களை அழைத்ததா? என்றார்கள். நான் இல்லை என்றேன். கட்சி தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்? மன்னிப்பு கேட்பதற்கு. நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் நான் மன்னிப்பு கேட்க தயார். (கூட்டத்தினர் வேண்டாம்.... வேண்டாம்... மன்னிப்பு கேட்க வேண்டாம் என கோஷம் போட்டனர்.)

அப்பா என்ற முறையிலும், கட்சி தலைவர் என்ற முறையிலும் எத்தனையோ முறை அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறேன். ஆனால் எந்த தவறும் செய்யாமல் தற்போது எப்படி மன்னிப்பு கேட்பது? தலைவர் கலைஞருக்கு தி.மு.க.வில் விசுவாசமிக்க ஒரே ஆளாக மு.க.அழகிரி மட்டும்தான் இருக்க முடியும். நான் மன்னிப்பு கேட்பதால் உங்களுக்கு லாபம், ஆதாயம் கிடைக்கும் என்றால் கேட்க தயார். அதற்காகத்தானே நான் போராடுகிறேன்.

கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதற்கு உங்களுடைய (ஆதரவாளர்கள்) உழைப்பு முக்கிய காரணம். நீங்கள் இல்லாமல் ஜெயிக்க முடியுமா? தி.மு.க. வெற்றி பெற முடியாத கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

மதுரையில் முதன் முறையாக உதயசூரியன் ஜெயித்தது. நான் வெற்றி பெற்றேன். தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசம் பெற்ற 2–வது இடம் என்ற பெயர் மதுரைக்கு கிடைத்தது. சட்டசபை தேர்தலில் கூட தென் மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் ஜெயித்தது.

கட்சிக்கு உழைத்தவர்கள், அல்லும் பகலும் பாடுபட்டவர்களை காரணம் இன்றி நீக்குகிறார்கள். இதுதான் கட்சியின் லட்சணமா? தலைவர் கலைஞர் பாவம். அவர் என்ன செய்வார்? அ.தி.மு.க. – ம.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் அதிக மரியாதை கிடைக்கிறது. தி.மு.க.வில் இப்போது வியாபாரிகள் தான் உள்ளனர். பதவி... பதவி... என்று அலைகிறார்கள். 100 வருடம் வாழப்போகிறார்களா?

இன்றைக்கு அடுத்த கட்ட முடிவு என்ன என்பதை நான் அறிவிக்கப் போகிறேன் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். எனது மனக்கஷ்டத்தை வெளிப்படுத்துகிறேன். அதற்குள் கலைஞர் தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் போவதாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நான் அப்படி ஒன்றும் முடிவு எடுக்கப்போவதில்லை. தி.மு.க. என்றாலே கலைஞர்தான். கலைஞரையும், தி.மு.க.வையும் காக்க வேண்டியதுதான் நமது கடமை. எனவே முடிவை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களால் எல்லாம் முடியும். உங்களை சந்தித்து கருத்து கேட்பது போல தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களை கேட்டுத்தான் எந்த முடிவையும் அறிவிப்பேன். நான் எடுக்கும் முடிவை வெளிப்படையாக அறிவிப்பேன்.

தி.மு.க. என்ற கட்சிதான் நமக்கு முக்கியம். தி.மு.க.வை நாம் காப்பாற்றுவதை விட, தலைவர் கலைஞரை கயவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். எதிரிகள் பரவாயில்லை. கலைஞர் அருகே துரோகிகள் இருக்கிறார்கள். அந்த துரோகிகளிடம் இருந்து கலைஞரை காப்பாற்ற வேண்டும்.

தலைவர் கலைஞரிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன். எனக்கு அந்த உரிமை இல்லையா? அதற்காக அவரிடம் சண்டை போட்டேன். கலைஞர் பாவம். அவர் என்ன செய்வார். கடந்த வாரம் கூட மதுரை விமான நிலையத்தில் அருமை நண்பர் வைகோ என்னை சந்தித்தார். பழைய பாசத்தில் என்னிடம் நலம் விசாரித்தார். உங்களுக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது என வருத்தம் தெரிவித்தார். உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்றும் கூறினார். அவரிடமும் சொன்னேன். எந்த முடிவாக இருந்தாலும் எனது ஆதரவாளர்களை கலந்து பேசிதான் அறிவிப்பேன் என்றேன். எனவே நாம் அமைதியான முறையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.maalaimalar.com/ 

கருத்துகள் இல்லை: