செவ்வாய், 18 மார்ச், 2014

ரேடாரில் சிக்காமல் இருக்க, 5,000 அடி உயரத்தில் பறந்த மலேசிய விமானம்

கோலாலம்பூர் : சீனாவுக்கு புறப்பட்ட, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், ரேடார் சிக்ன லில் சிக்காமலிருக்க, 5,000 அடி உயரத்தில் தாழ பறந்ததாக கூறப்படுவதால், கடத்தல் சந்தேகம் நீடிக்கிறது. தொடர்பு துண்டிப்பு:மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம் தேதி, இரவு, 239 பேருடன், சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் எல்லையில் நுழைந்த போது, தரைகட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த, சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டில் வசிக்கும், தமிழர் முக்தேஷ் மற்றும் அவரது மனைவி ஜானா உள்ளிட்டோர் பயணித்தனர்.விமானம் மறைந்து, 10 நாட்களாகி விட்டது. இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த விமானத்தை பற்றிய கட்டுக்கதைகள் தான் வந்து கொண்டிருக்கின்றன.
விமானம் சென்ற திசையை அங்குலம் அங்குலமாக தேடி பார்த்து விட்டனர். இந்தியா, அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், என, பல நாடுகள் இந்த விமானத்தை தேடி அலுத்து விட்டன.விமானத்தில் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்புவார்கள், என்ற பயணிகளின் உறவினர்களது நம்பிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது.விமானம் மறைந்த மறுநாள், வியட்நாம் பகுதியில் மிதந்த எண்ணெய் படலத்தை வைத்து விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக அப்பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அந்த எண்ணெய் படலம், நாட்டு படகிலிருந்து கசிந்தது தெரிய வந்தது. வியட்நாம் வரை சென்ற விமானம், சீனாவுக்கு செல்லாமல் மீண்டும் திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி விட்டது, என்ற தகவலால், அந்தமான் கடல் பகுதியிலும், பின், இந்திய பெருங்கடல் வரை தேடியும் பார்த்தாகி விட்டது.'இன்னும் எத்தனை நாளைக்கு தான் விமானத்தை பற்றிய பொய் கதைகளை சொல்வீர்கள்' என, சீன அரசு பாய துவங்கி விட்டது. ஏனென்றால், விமானத்தில் பயணித்த, 239 பேரில், 152 பேர் சீனர்கள்.


பிரதமர் பேட்டி:



பயணிகளின் உறவினர்கள் எல்லாம், கோலாலம்பூரை முற்றுகையிட்டனர். பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள்ளான, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், 'இந்த விமானத்தின் சிக்னல்கள் எல்லாம் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும், விமானம் ஏழரை மணி நேரம் தொடர்ந்து பறந்துள்ளது; எனவே, விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளது' என்றார்.பிரிட்டனில் உள்ள செயற்கை கோள் நிறுவனம், 'மாயமான விமானத்தில் உள்ள கம்ப்யூட்டர் சிக்கனல்கள் இன்னும் கிடைத்து கொண்டிருக்கின்றன' என, தெரிவித்து உள்ளது.மலேசிய பிரதமரின் பேட்டியால், விமானத்தை கடலில் தேடும் பணி, நிறுத்தப்பட்டுள்ளது.


விமானி மீது சந்தேகம்:



விமானத்தின் சிக்னல் நிறுத்தப்பட்டதற்கு விமானி உடந்தையாக இருந்திருக்க வேண்டும், என்பதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. உடனடியாக,கோலாலம்பூரில், விமானி, ஜகாரி அகமது ஷாவின் வீட்டை, புலனாய்வு அதிகாரிகள் குடைந்தனர்.மாயமான விமானம் போன்றே, ஒரு சிறிய மாதிரி விமானம் தயாரித்து தன் வீட்டில் வைத்திருந்தது, விசாரணையில் தெரிய வந்தது. இந்த விமானத்தை, சில மைல் தூரம் ஜகாரி ஓட்டி பார்த்துள்ளார். இந்த விமானத்தை வைத்து அவர், கடத்தலுக்கு ஒத்திகை பார்த்திருக்கலாம், என்ற கோணத்தில் தற்போது விசாரணை செல்கிறது.'விமானி ஜகாரி நல்ல மனிதர்' என, அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமின் ஆதரவாளராக ஜகாரி உள்ளதால், அவர் மீது மலேசிய அரசுக்கு சந்தேகம் தீரவில்லை. இவரை தொடர்ந்து, இளம் பைலட் அப்துல் ஹமீது என்பவர் மீதும் சந்தேகம் நிலவியது. ஆனால், 27 வயது ஹமீது, நதீரா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. எனவே, திருமணம் செய்து கொள்ள இருப்பவர், விமானத்தை கடத்தியிருக்க வாய்ப்பில்லை. ஹமீதை எதிர்ப்பார்த்து, நதீராவும், தற்போது, கோலாலம்பூரில் காத்திருக்கிறார். விமானத்தில் சென்ற மற்ற விமான ஊழியர்கள் பின்னணியும் விசாரிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், இரண்டு பேர், திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தனர். 'அவர்கள் ஈரானை சேர்ந்தவர்கள் என்பதால், நிச்சயம் அவர்கள் தான் விமானத்தை கடத்தியிருப்பர்' என, பரவலாக பேசப்பட்டது. கடைசியில் அந்த நபர்கள் பயங்கரவாதிகள் அல்ல, என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


அமெச்சூர் வானொலியினர்!



மலேசியாவில் மாயமான பயணிகள், விமானத்தை தேடும் பணிக்கு உதவுமாறு, 'ஹாம் ரேடியோ' எனப்படும், அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விமானத்தை பல நாடுகளில் தேடியும், எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மலேசிய அரசு, மாயமான விமானத்தின் சிக்னல்களை கண்டுபிடிக்க, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களின் உதவியை நாடியுள்ளது.சிற்றலை வானொலி ஒலிபரப்பு (எஸ்.டபிள்யு.,) அடிப்படையில் செயல்படும் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள், உலகம் முழுவதும் பரவியுள்ளனர். கம்பி வழி தொலை தொடர்பு, செயற்கை கோள் துணை இன்றி செயல்படும் இவர்களால், விமானங்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களையும், அவசர கால அழைப்புகளையும், எளிதில் அறிய முடியும்.மாயமான பயணிகள் விமானம், தெற்காசியாவில் ஏதோ ஒரு பகுதியில் ரகசியமாக தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில், சிக்னல்களோ, அழைப்புகளோ வந்தால், அது குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மொரீஷியஸ், தாய்லாந்து, செஷல்ஸ் நாடுகளில் உள்ள ஒலிபரப்பாளர்களை, மலேசிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர், மலேசிய அவசர கால அமெச்சூர் வானொலி சேவை சங்கத்தை 'MARES/9m4CME' என்ற அலைவரிசையில் தொடர்பு கொள்ளலாம்.இந்த அழைப்பை ஏற்று செயல்பட, இந்திய அரசின் தேசிய அமெச்சூர் ஒலிபரப்பு நிறுவனம் (என்.ஐ.ஏ.ஆர்.,) ஒப்புதல் அளித்து உள்ளது.


விலகாத மர்மங்கள்



*விமானத்தில் பயணித்தவர்களின் மொபைல் போனுக்கு இன்னும், 'ரிங்டோன்' செல்கிறது. ஆனால், யாரும் எடுக்காமல் உள்ளனர்.
*விமானம் மாயமான போது, அந்த தடத்தில், ஜப்பானை நோக்கி பறந்த, விமானத்தின் பைலட் ஒருவர் குறிப்பிடுகையில், 'மாயமான எம்.எச்.,370 விமானத்திலிருந்து சிக்னல் கிடைத்தது. யாரோ பேசினர். அநேகமாக அது பைலட்டாக தான் இருக்கும் என நினைக்கிறேன். அவரது குரலுக்கு பின்னணியில் நிறைய பேர் பேசும் சத்தம் கேட்டது' என, தெரிவித்துள்ளார்.
*விமானம், 23 ஆயிரம் அடியில் பறக்க வேண்டும் என்ற விதியை மீறி, மாயமான விமானம் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது. அதன் பிறகு, 5,000 அடியில் பறந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த விமானம் ரேடார் சிக்னலுக்கு ஆட்படாமல் சென்றுள்ளது.
*விமானம் தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கலாம், எனக் கூறப்படுகிறது.
*மாயமான விமானம் உலகில், 634 இடங்களில் தரையிறங்குவதற்கான வசதிகள் உள்ளன.
*பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தால், அது ஆப்கானிஸ்தானில், மலைபாங்கான, தலிபான்கள் பிடியில் உள்ள பகுதியில் தரைஇறக்கப் பட்டிருக்கலாம், இந்த பகுதியில் ரேடார் சிக்னல் கிடைக்க வாய்ப்பில்லை, என, கூறப்படுகிறது.
*தற்போதைய நிலையில் விமானம் கடத்தப்பட்டிருந்தால், அது தரைஇறக்கப்பட்டு, இன்ஜின் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது விபத்தில் நொறுங்கி இருக்கலாம், என, மலேசிய ஏர்லைன்ஸ் கருதுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: