சேலம் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருள், தனக்கு சேலம்
தொகுதியை பாஜக தராவிட்டால் அங்கு சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்று
மிரட்டல் விடுத்துள்ளார்.
சேலம் தொகுதி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிக இடையே கடும் மோதல் நிலவுகிறது.
முதலில் இந்தத் தொகுதியை தேமுதிக கேட்கவே இல்லை என்று கூறுகிறார்கள்.
அதேசமயம், இத்தொகுதியில், தனது மச்சான் சுதீஷை நிறுத்தவும் விஜயகாந்த்
விருப்பம் கொண்டிருந்தார். இதையடுத்து பாஜக, சேலத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கியது. இதனால் பாமக அதிர்ச்சி
அடைந்தது. காரணம், அங்கு ஏற்கனவே அது அருளை வேட்பாளராக அறிவித்திருந்தது.
அருளே வேட்பாளராக நீடிப்பார், சேலத்தை விட்டுத் தர மாட்டோம் என்று பாமக
திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் தேமுதிக நிலை மோசமானது. இப்போது இதை
கெளரவப் பிரச்சினையாக பார்க்கிறது தேமுதிக. கண்டிப்பாக தங்களுக்கு சேலம்
தேவை என்று தேமுதிக தரப்பு கூறி விட்டது. இதனால் சிக்கல் மேலும்
பெரிதாகியுள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அருள்
தற்போது அதிரடியாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சேலம் உட்பட 10
தொகுதிக்கான வேட்பாளர்களை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே ராமதாஸ்
அறிவித்து விட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே நான் தொகுதி
முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் சேலம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்காவிட்டால்,
கூட்டணியில் இருந்து பாமக வெளியே வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள்
வலியுறுத்தி வருகின்றனர். அப்படி கூட்டணியை விட்டு வெளியில் வந்து தனித்து
போட்டியிட்டால் கட்சி சார்பில் போட்டியிடுவேன்.
இல்லையென்றால் நான் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து சுயேச்சையாக சேலம்
தொகுதியில் போட்டியிடவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அருள்.
இதனால் தேமுதிகவுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டாலும் கூட பாமகவால் அல்லது
அருள் ஆதரவாளர்களால் தேமுதிக வேட்பாளரின் வெற்றிக்குப் பெரும் பங்கம்
ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக