வெள்ளி, 21 மார்ச், 2014

தென்மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம்? விழாக்களில் அழகிரி !

முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியுடன், யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது' என, தி.மு.க., மேலிடம் எச்சரிக்கை விடுத்த பின்னும், அழகிரியை தேடி வரும், கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், ராஜபாளையம், முதுகுளத்தூர், தஞ்சாவூர், ஆரணி என, பல இடங்களில், தன் ஆதரவாளர்கள் வீட்டு, காது குத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அழகிரி, அங்கு வரும், தி.மு.க., அதிருப்தியாளர்களிடம், தேர்தலில், சில வேட்பாளர்களுக்கு எதிராக, உள்குத்து வேலைகள் செய்வது தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 'தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியுடன், கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, நேற்று முன் தினம், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
உடல் நலம் விசாரிக்க...: அவரது எச்சரிக்கை அறிவிப்பு, காலையில் வெளியான நிலையில், அன்று இரவில், மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழகிரி சென்றார். அந்த மருத்துவமனையில், தி.மு.க., நிர்வாகி ஒச்சுபாலுவின் மகன் உடல் நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் உடல் நலம் விசாரிக்க சென்ற, அழகிரியுடன், 200 பேர் சென்றுள்ளனர். வழக்கமாக தன்னுடன் வருவோரின் எண்ணிக்கையை விட, மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு தன்னுடன் வந்தவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்ததால், அழகிரி மிகுந்த வியப்படைந்தார். அப்போது, தன் அருகில் இருந்த ஆதரவாளர் ஒருவரிடம், 'கட்சி தலைமையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், என்னை சந்திக்க இத்தனை பேர் வருகின்றனர். கூட்டம் இல்லையெனில், நான் வருத்தப்படுவேன் என, நினைத்து இத்தனை பேர் வந்துள்ளனரா?' என, கேட்டுள்ளார். 'என்னடா... இப்படி எல்லாம் பாசத்தை பொழிஞ்சா, என்னால் சும்மா இருக்க முடியாதே' என்றும் கூறியுள்ளார்.


இந்நிலையில், நேற்று காலையிலும், அழகிரியின் வீட்டிற்கு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு வந்து, அவரை சந்தித்தனர். அப்போதும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, அழகிரி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது, தி.மு.க., வில், 'பைபாஸ்' ரூட்டில், 'சீட்' பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவது என்றும், அவர்களை தோல்வி அடையச் செய்வது என்றும், தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கொம்பு சீவி விட...:மேலும், வரும், 22ம் தேதி, மதுரை அவனியாபுரத்தில், முன்னாள் மாவட்ட செயலர் காவேரிமணியம் நினைவு தின நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அழகிரி பங்கேற்க உள்ளார். அதைத்தொடர்ந்து, 23ம் தேதி ராஜபாளையத்தில், தன் ஆதரவாளர் வீட்டில் நடக்கும், 'காது குத்து' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, தன் ஆதரவாளர்களை சந்தித்து, விருதுநகர், தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேலுக்கு எதிராக, அவர்களை கொம்பு சீவி விட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்பின், தஞ்சாவூர், ஆரணி தொகுதி களுக்கும், அடுத்த மாதம், 6ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள, கட்சி பிரமுகர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் ரித்தீஷ் செய்துள்ளார்.ஆலோசனைகள்: இந்த காது குத்து நிகழ்ச்சிகளின் போது, தங்களுக்கு பிடிக்காத, தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக, உள்குத்து வேலைகளை எப்படி எப்படி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, ஆலோசனைகளை வழங்க உள்ளதாக, அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அழகிரியின் திடீர் ஆவேசத்தால், தென்மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
கனிமொழி ஆதரவாளர்கள் சந்திப்பு: அழகிரியை, நேற்று அவரது வீட்டில், முன்னாள் நிர்வாகிகள் மன்னன், உதயகுமார், சிவக்குமார், முபாரக்மந்திரி, இசக்கிமுத்து, கவுஸ்பாட்ஷா, 2ம் பகுதி மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், கனிமொழி தலைவராக உள்ள கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நகர் அமைப்பாளர், 'பூக்கடை' ராமச்சந்திரன், இணை அமைப்பாளர் பாலசிவக்குமார், தொண்டரணி செந்தில், மாணவரணி முருகன், கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் சந்தித்தனர்.


- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: