ஞாயித்துக் கிழமையும் அதுவுமா எங்கூரு சலீம் பாய் கடையில பொட்டாட்டுக் (குறும்பாடு) கறியக் கூட எடுத்து திங்காம சினேகா அக்கா கல்யாணத்தை பத்தி சிவனே மவனேன்னு எழுதுதனே ஏம்லே? உழைச்சு பிழைக்கிற மக்கமாறு அன்னாடம் கஞ்சி குடிச்சு வாழுததுக்கு கூட வக்கு இல்லாத நாட்டுல இந்த சினிமாக்காரனோட கலியாணம், கருமாதியை நியூசு, வியூசு, மேட்டரு, ஹெட்டிங்கு, சென்சேஷன்னு செங்கோட்டை சாப்பாட்டுகடை மாஸ்டரு அடிக்கிற புரோட்டா மாறி பிச்சு உதறதானுகளே, என்னைக்காவது ரோசனை பண்ணியிருக்கியாலே?
பிச்சுப் போட்ட புரோட்டாவ தின்னா அடுத்த நாளு ஆய் போவியா, இல்ல அமுதத்த கக்குவியா? சினேகா அக்கா கல்யாண மேட்டரு மாதிரி உசிலம்பட்டியில பேச்சியம்மாளுக்கும், மதுரை வீரனுக்கும் கண்ணாலம்னு ஒரு சேதிய, அவுத்து வுட்டா உச்சி மோந்து படிப்பியா இல்ல, வேற வேலவெட்டி இல்லயான்னு ஒதுக்கிவிட்டு போவியா?
தம்பி பிரசன்னாவுக்கும், அக்கா சினேகாவுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்ட பிறகு வயிறெறிஞ்ச பயலுவள வுடுங்க, மத்த பயலுவளும் நமக்கு சினேகா மாதிரி ஒரு மனைவி அமையலேன்னு ஃபீல் பண்ணுறதயும் வுடுங்க, மொத்தமாப் பாத்தா அல்லாரும் அந்த தம்பதிமாரை மனசாரா வாழ்த்திருப்பீக! நானு இந்தக் கல்யாணத்தை இப்புடி கலாய்க்கிறதப் பாத்து அவுகளெக்கெல்லாம் பெரிசா கோபம் வருமுன்னு எனக்கு தெரியுமுடே! மவுசுல ஸ்க்ரோல் பண்ணியே கண்ணீரு வுடுற இந்த ஃபீல் பார்ட்டிங்களுக்கு, இது ஒரு சினிமா பீர் பார்ட்டின்னு உரைக்கிற மேறி எழுதணாத்தாம்லே என்னோட வெப்ராளம் (ஆற்றாமை) அடங்கும்.
ஏலேய் போக்கத்த பயலுகளா, நீங்க நினைக்கிற மாதிரி இந்தக் கல்யாணம் ஒரு எளஞ்ஜோடிங்க கல்யாணம் காட்சின்னு ஆரம்பிக்கிற புதுசான வாழ்க்கை இல்லேலே, இது பக்கா பிசினஸ். இல்லேன்னா ஒரு புது சினிமான்னும் சொல்லலாம். ஒரு சினிமாக்குண்டான பட்ஜெட், பிசினெஸ், காஸ்ட்யூம், பி.ஆர்.வோ, ஸ்பான்சரு, திரைக்கதை, டிவிஸ்ட்டுன்னு அத்தனை ஐட்டங்களும் இதுல உண்டுன்னு சொன்னா நம்புவியாலே?
இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக. இது பொய்யுன்னு புலம்புற மல்லு வேட்டி மைனருங்க அல்லாப் பத்தரிகையையும் புரட்டி பாருங்கடே, “லம்பான அமவுண்டுக்கு திருமண ஒளிபரப்பை வித்துட்டாங்கன்னு” கொட்டை எழுத்துல நியூஸ் போட்டுருக்கான்.
இதுக்கு காஸ்ட்லி கல்வி முதலாளி பச்சமத்துவோட புதிய தலைமுறையும், கிழட்டு நரி முர்டோச்சோட விஜய் டி.வியும் போட்டி போட்டானுகளாம். கடைசியில முர்டோச் மூணு கோடிக்கு ஏலத்துல ஜெயிச்சுருக்கான். இந்தப் பயபுள்ளதான் ஏற்கனவே பிரபலமாருங்க கல்யாணத்தை விஜயில “நம்ம வீட்டு கல்யாணம்” னு காட்டி காசு சுருட்டுறதுல சீப்பான எக்ஸ்பர்ட்டு!
ஏலேய் உடம்ப வித்து பிழைக்குற பொம்பளைங்களை விபச்சாரின்னு யோக்கியனாட்டாம் பேசுத பயபுள்ளங்ககிட்ட ஒண்ணு கேக்கேன். அது விபச்சாரம்னா இப்புடி கல்யாணத்தை காசுக்காக டெலிகாஸ்ட்டு பண்ணுன்னு விக்கிறதுக்குப் பேரு என்னடே? அது பாடி விபச்சாரம்ணா, இது டெலிகாஸ்ட்டு விபச்சாரம்ணு சொல்லலாம்லா? மதுரை ஆதீனமாக முடியோட முடிசூட்டியிருக்கிற நித்தியானந்தா, ரஞ்சிதாவோட சல்லாபம் போட்டபோது அடுத்தவங்க படுக்கையறையை எட்டிப் பாக்கது தர்மமான்னு நம்ப பிசினஸ் பாய் மனுஷ்ய புத்திரன்ல இருந்து, த.மு.எ.க.ச தமிழ்ச் செல்வன் வரைக்கும் நெம்ப ஃபீல் பண்ணிணாக. ஏலேய் அதே மாதிரி தனிப்பட்ட கல்யாணத்தை ஊரு பூறா பாக்கதுக்கு ரேட் போட்டு விக்கானே, இது மட்டும் தர்மமாலே? ரஞ்சி எபிசோடுல சன் டி.விக்காரன் செலவில்லாம சுருட்டுனான், இங்க அக்கா எபிசோடுல கொஞ்சம் முதலீடு போட்டு சுருட்டுறான், அம்புட்டுதாம்டே வித்தியாசம்!
இன்னைக்கு கல்யாணத்த வித்து பணம் பண்ணுறவன் நாளைக்கு காது குத்து, மொட்டை, பூணூல் கல்யாணம், புது வீடு, பொறந்த நாளுன்னு அல்லாத்தையும் விப்பானுகல்லா?
நாட்டுல ஆயிரத்தெட்டு அநீதிங்க நடக்கையில, இப்புடி சினிமாக்காரனோட கல்யாணம், கருமாதியக் காண்பிச்சு உன் டேஸ்ட்ட வேஸ்ட்டு பண்ணி, நேரத்தையும் ஸ்வாகா செஞ்சு, குப்பைங்களை பொழுது போக்குண்ணு மூளையில திணிக்கிறானே, எந்த பயலுக்காவது சொரணை இருக்கா?
சரி அத்தோட வுடாம நாளைக்கே தேனிலவையும் டெலிகாஸ்ட்டு பண்ணுடான்னு விக்க மாட்டானுகளா என்ன? அமெரிக்காவுல இப்புடி புதுமணத் தம்பதிமாரு இணையத்துல முதலிரவை காட்டி காசு பாக்கையில நாளன்னைக்கு நம்ம தமிழ் சினிமா பயலுக செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்? ஏற்கனவே ஸ்டார் வேல்யூ வெளம்பரத்துக்காக தம்பி சிம்பு, நயனுக்கு முத்தா கொடுத்து அதை ஃபீரியா யூ டியூபுல ஓடவிட்ட கதை ஞாபகமிருக்குல்லா? அது மேறி படத்துல நடிக்கிறதை படுக்கையில செஞ்சு காமிச்சு அதுக்கு தேனிலவு லைவ்வுன்னு போட்டா உன்ன மாறி போக்கத்த பயலுவ ஜொள்ளு வடிய பாக்க மாட்டீகளா என்ன? உட்டா நாளைக்கே அக்கா சினேகா வூட்டு கோழி முட்டயை போடுறதையம் ரியாலிட்டி ஷோன்னு போட்டு அதுக்கு நாலஞ்சு ஸ்பான்சர பிடிச்சு நாலரைக்கோடி தமிழருமாருங்கள பாக்க வச்சு பேசவும் வைப்பான்.
வழக்கு எண், சினேகா திருமணம் இரண்டையும் ஏலத்துல எடுத்தவன் விஜய் டி.விங்குறதாலா படத்தோட சினிமா நிருபர்களுக்கான ஷோவ ஐஞ்சு நாள் முன்னாடி வச்சுட்டானாம். படம் பாக்க வந்த நிருபருங்கிட்ட கல்யாண அழைப்பிதழ் கொடுத்து உறுதி செஞ்சுகிட்டான்.வெள்ளிக்கிழமை சினிமா நிருபருங்கள உள்ளிட்டு ஊரு உலகம் முழுக்க சினேகா அக்கா திருமணத்தை மட்டும் பேசணும்கிறதுதான் விஜய் டிவியோட பிளான். இதுல அண்ணன் பாலாஜி சக்திவேலுக்கு வருத்தம் இருந்தாலும் விஜய் டி.விய பகைச்சுக்க முடியாதுல்லா. என்ன இருந்தாலும் அவன்தான படியளக்குற எசமான்!
அடுத்து அக்கா கல்யாண டெலிகாஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி லைட்டிங், கலரு எல்லாம் ஒரு ஆர்ட் டைரக்டரை வைச்சு போட்டிருக்கான். இது போக நகைங்க, ஆடைகளுக்கு ஸ்பான்சரு சரவணா ஸ்டோராம். ஏலேய் இது கல்யாணம் இல்ல, அது பேருல நடக்குற ஷூட்டிங்குன்னு இப்பவாச்சும் ஒத்துக்கிவியாலே?
பெறவு சினேகா, பிரசன்னாவோட பி.ஆர்.ஓவாக இருக்குறவரை வைச்சு தினசரி ஒரு நியூஸ் வரமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கான் விஜய் டி.வி. அந்த நியூசு எல்லாம் தினத்தந்தியிலிருந்து, ஜூ.வி, ஆ.வி, குமுதம் அப்புறம் நம்மோட இணையத் தந்தியான தட்ஸ்தமிழ் வரைக்கும் பத்தி பத்தியா போட்டு மந்தை மந்தையா மேய வுட்டுறுக்காணுவ. நியூஸ் வரவர மக்கமாருகிட்ட மவுத் டாக் வளர வளர நாளைக்கு விஜய் டி.வி கண்ணாலத்தை காட்டும் போது டி.ஆர்.பி ரேட்டிங்கு எகிறுமுல்லா?
“சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்” கல்யாணம் நடக்குதுன்னு அந்த மண்டபத்த கூட ஒரு நியூசாக போட்டுருக்கானுக. மத்தபடி புன்னகை இளவரசியோட கல்யாணம் புரட்சித் தலைவி கட்சியோட பொதுக்குழு நடக்குற மண்டபத்துல நடந்துச்சுன்னு ஒரு பயலும் போடல. ஏன்னா ரெண்டுமே நாடகம்தாங்குற சங்கதி மக்களுக்கு தெரிஞ்சிருமுல்லா?
அது கூட பரவாயில்ல, சினேகா அக்கா திருமண அழைப்பிதழ எடுத்துக்கிணு குடும்பத்தோட புரட்சித் தலைவியையும், கலைஞரையும் பாத்ததா ஒரு நியூஸ் போட்டுக்காணுக. ஏம்லே இன்விட்டேஷன் கொடுக்குறதுக்கு குடும்பத்தோட போகாமா வீட்டு நாயைக் இட்டுக்கினா போவாக? இதெல்லாம் ஒரு நியூசுன்னு நீ படிப்பேன்கிற நம்பிக்கையில போடுதாம்லே. கல்யாணத்தன்னைக்கு புரட்சி வரலை, தமிழினத் தலைவர் மட்டும் நம்பர் 2 குடும்பத்தோட வந்து ஆசிர்வதிக்கிறாரு. நம்பர் 1க்கும், 2க்கும் நாந்தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சண்டை நடந்துச்சான்னு தெரியல. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வருடத்தில பெருசுக்குத்தான் சினேகா கல்யாணம் மாறி எவ்ளோ கமிட்மெண்ட்ஸ்.
பெறவு நலங்கு, மொகந்தி நிகழ்ச்சிங்க, நடிகமாருக்கு தனி ‘பார்ட்டி’ன்னு கூட நியூஸுங்க பன்னிக்குட்டி மாதிரி அணிவகுக்குதுங்க. பார்ட்டியில எத்தனை லிட்டர் காக்டெயிலு ஓடுச்சுன்னு நிருபக்கமாரு நீயூஸ் போடல. அவனே இப்படி சினிமாக்காரவுக பார்ட்டிக்கு போய்த்தான் தாகத்தை தணிச்சுக்கிடுதான். அப்பாலிகா சினேகா அக்கா, பிரசன்னாவோட தனிக்குடித்தனம் போவாகளா, இல்லை கூட்டுக் குடும்பமா, கலியாணத்துக்குப் பிறகு நடிப்பாகளா, சமையல் பண்ணுவாகளான்னு ஒண்ணு விடல. இவ்ளோ நியூஸ் போட்டவனுக கல்யாணத்துக்கு முன்ன புன்னகைச்ச மாதிரி கல்யாணத்துக்கு பின்னயும் அக்கா சிரிப்பாகளான்னு போடவே இல்லை? என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமுல்லா?
கல்யாணத்தன்னைக்கு ரெண்டு பேரும் ஏழு இலட்சம் ரூபாய் பணத்துல பெங்களூரு டிசைனர் உடைங்கள போட்டத அறிவாளி பத்திரிகை தினமணிக்காரன் நியூசா போட்டுறுக்கான். அதுல உள்ள முக்கியமான நியூஸ் எதுன்னா தம்பி பிரசன்னா அக்காவுக்கு ரெண்டு வாட்டி தாலி கட்டுனாராம். இந்த ரெண்டு வாட்டிக்கும் அக்கா ரெண்டு பட்டுப்புடவைங்களை காஞ்சிபுரத்துல சொல்லி 25 இலட்சத்துல செய்ஞ்சாங்களாம்.
சரி, எதுக்குடே ரெண்டு தபா தாலி கட்டணும்? தம்பி வந்து தெலுங்கு பாப்பார சாதியாம். அக்கா நாயுடு சாதியாம். அதுனால மொதவாட்டி நாயுடு ஸ்டைல தாலி கட்டுன தம்பி, அரைமணி நேர கேப்புல பாப்பார முறைப்படி ரெண்டாவது தாலி கட்டுனாராம். காதல் கல்யாணம், கலப்புத் திருமணம்னு சொல்லிட்டு தாலியக் கட்டுறுதுல கூட சாதிய வுடமாட்டானுகளாம். ரெண்டு சாதியுமே ‘மேல்சாதி’ங்குறதுன்னால ரெண்டு சாதிக்காறவுனகளும் ஒருத்தருக்கொருத்தரு வுட்டுக்க கொடுக்க மாட்டான்.
சரிலே நாளைக்கு அக்கா சினேகாவுக்கு ஒரு குழந்தை பொறந்து, வளந்து ஆளாயி, ஐயங்காரு – ரெட்டி காம்பினேஷன்ல ஒரு வாரிசை கல்யாணம் பண்றதா வச்சுக்குவோம். கூட்டிப்பாத்தா இங்கன நாலு சாதி வருது. அந்தப்படிக்கு நாளைக்கு சினேகா அக்கா குழந்தை நாலுவாட்டி தாலி கட்டுமா?
இதுல சினேகா அக்கா, “ஆட்டோகிராப்” படத்துல வெள்ளையும் சொள்ளையுமாக “ஒவ்வொரு பூக்களுமே”ன்னு பாட்டுப்பாடி இளைஞர்களுக்கு அட்வைசு சொல்ற பார்ட்டி. இயக்குநர் சேரன் சொல்லிக்கொடுத்ததை அக்கா நடிச்சாகன்னு கூட விவரமில்லாத நாட்டுல இந்த இமேஜை உண்மைன்னு நம்பி பல பள்ளிக்கூடத்துக்காரனுக அக்காவ கூப்பிட்டு பள்ளி விழாக்களை நடத்துறானுக. இந்தக் கொடுமையை என்னண்ணு சொல்ல?
இந்த ஆண்டு பிப்ரவரி மாசம், ” சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,”ன்னு ஒரு நியூச பாத்தேன். அதுல அக்கா ஆசிரியை உமா மகேஸ்வரி கொலையப் பத்தியெல்லாம் நெம்ப ஃபீல் பண்ணி பேசியிருக்காக. இப்புடி ஊரு உலகத்துக்கு அட்வசு பண்ணுற அக்கா தான் கல்யாணத்துல ஊரு உலகம் மெச்சுற மாதிரி நடந்திருக்கணும்லா? தம்பி பிரசன்னாவும் லயோலா காலேஜூல படிச்சு கொஞ்சம் நஞ்சம் ‘முற்போக்கு’ விசயமெல்லாம் பேசுற ஆளுதான். ஆனா ரெண்டு பயபுள்ளைகளும் இப்புடி சாதிய வுட்டுக்கொடுக்கமாட்டாகன்னா அப்பறும் எதுக்குடே ஊரு உலகத்துக்கு நியாயத்தை கத்துக் கொடுக்கீக?
சரி, இப்புடி ரெண்டு தபா தாலி கட்டுனா சட்டப்படி எதுடே செல்லும்? நம்ப தோஸ்த்து லாயருகிட்ட கேட்டா சட்டமே இப்படி ஒரு சிச்சிவேஷனை சந்திச்சதில்லைங்குறாரு. அதாவது இந்து திருமண சட்டப்படி அக்னியை சுத்தி வந்தா கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனா மேறியாம். அப்படின்னா இங்கன தம்பியும், அக்காவும் ரெண்டு தபா அக்னியை சுத்தி வந்து ரெண்டு தபா தாலி கட்டியிருக்காக. முத தபாதான் சட்டப்படி செல்லும்ணா நாயுடுக்காரன் கல்யாணம்தான் லீகலுக்குள்ள வரும். இது தெரிஞ்சா பார்ப்பானுங்க துள்ளிக் குதிப்பானுங்க. அடுத்து ஒரு பெண்ணுக்கு ரெண்டாவது தபா தாலி கட்டுறதா இருந்தா முத கல்யாணத்தை விவாகரத்து செஞ்சிருக்கணும். அப்போ முதல்ல தாலியக் கட்டி விவாகரத்து செய்ஞ்சிட்டு ரெண்டாவது தபா கட்டுனாத்தான் தெலுங்கு பாப்பார முறை திருமணம் செல்லும். அப்போ நாயுடுக்காரன் திருமணம் அதோகதி.
ஆக ரெண்டு வாட்டிதாலி கட்டுனதால விசயம் முடியல. நாயுடுக்காரனுவகளும், பாப்பானுகளும் நல்லா யோசிச்சு ஃபைசல் பண்ணி ஒரு முடிவுக்கு வாங்கடே. உங்க சாதித் திமிரை ஆய்வு பண்ணுணா கல்யாணத்தன்னைக்கே விவாகரத்த பேச வேண்டியிருக்குதுல்லா? சினேகா அக்கா கல்யாணம் காச்சியுமா இருக்கிறச்சே காளமேகம் இப்புடி அபஸகுனமாக விவாகரத்து பேசுறானேன்னு எம்மேல பாயாதீக? நானா ரெண்டு தபா தாலி கட்டச் சொன்னேன்?
மக்கா, உழைக்குற மக்கள் பல பேரு சாதியக் கடாசிட்டு கல்யாணம் பண்ணியிருக்காக. அங்க இல்லாம் இப்புடி இரட்டைத்தாலிங்குற கேவலம்லாம் இல்லடே. ஆனா ரெண்டு சினிமா வி.ஐ.பிங்க அதுவும் ஊரு உலகத்துக்கு தன்னோட கல்யாணத்த வித்து பாக்கச் சொன்னவன், இப்புடி ரெண்டு தாலி கட்டுற கேவலத்தை, சாதித் திமிரை வுடமுடியாதுன்னு பெருமையா பேசுறானே அதுதாம்லே மகா கேவலம். அந்தக் கேவலத்தை டி.வியில வேற காட்டுறான்னா பாக்குறவன் கேனயன்னுதானடே நெனைப்பு! இதுல நாளைக்கே சாதி மாறிக் கல்யாணம் பண்ணுறவனெல்லாம் இதே மாதிரி ரெட்டைத்தாலி கட்டணும்னு ஒரு புது சடங்கை இந்தக் கசுமாலங்க ஆரம்பிச்சு வச்சுருக்கானுவ. ஒரு தாலியவே விடணும்னு நம்ம தோழருங்க போராடிக்கிட்டிருக்கிற நாட்டுல இனி காதல் திருமணம்னா ரெண்டு தாலின்னா, அதைக் கட்டுறவ லோடு அடிக்கிற மாடா, இல்ல மனுஷியா?
தம்பி பிரசன்னாவும், சினேகா அக்காவும் அவ்வளவா மார்கெட் இல்லாத நடிகருங்கன்னாலும் ஐஞ்சாறு படத்துல நடிச்சுக் கிடைக்கிற காச ஒரே வாட்டி லம்பா மூணு கோடிக்கு வுத்து சுருட்டிட்டிங்கல்லா. இதுல கல்யாணத்துக்க்காக அக்கா பண்ருட்டியில இருக்கிற திருமண மண்டபத்தை வுத்துட்டாகளான்னு நொம்ப ஃபீல் பண்ணி பத்திரிகைகாரனுவ எழுறான். ஏலேய் போக்கத்த மூதிகளா, நடிகைங்க மார்கெட் இல்லேன்னாலும் வளைகுடா நாடுகளுக்கு போய் கலை நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கிறது உங்களுக்குத் தெரியும்தானடே, பெறவு என்ன ஃபீலிங்கு?
இனி, என்ன? விஜய் டீ.விக்காரன் நம்ம வீட்டு கல்யாணம்கிற தொடருல சினேகா அக்கா கல்யாணத்தை போட்டு, அவுக எப்புடி சந்திச்சாக, யாரு புரபோசல் பண்ணுணாக, வீட்டு எதிர்ப்பை எப்படி சமாளிச்சாக, ரெட்டைத் தாலி எப்புடி கண்டுபிடிச்சாகன்னு நாலஞ்சு வாரம் ஓட்டுவான்.
மக்களே, தமிழ்நாட்டுல இந்த ரெண்டு, மூணு மாசத்துல ஐஞ்சாறு கவுரவக் கொலைங்க நடந்திருக்கு. அந்தக் கொலையில இருக்குற சாதி வெறிக்கும், இந்த இரட்டைத் தாலியில இருக்கிற சாதி வெறிக்கும் என்னடே வித்தியாசம்? அதயும் ஒரு டி.விக்காரன் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டப் போறாம்னா, நாமல்லாம் சுரணையுள்ள பயபுள்ளைகளா, பீயத் தின்னுற பன்னிகளா?
______________________________________________________
- காளமேகம் அண்ணாச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக