புதன், 16 மே, 2012

சம்புகர்களின் கொலை!

கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்பதுதான் உங்களுக்கு எனது இறுதி அறிவுரை. செல்வத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ இல்லை நம்முடைய போராட்டம், அது சுதந்திரத்துக்கான போராட்டம். அது மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்”
– பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
‘சதாராவில் இருக்கும் தனது பள்ளியில் தான் தண்ணீர் குடிக்க முடியாது’ என்பதைப் பீம் தனது 10 வது வயதில் 1901-ஆம் ஆண்டு உணர்ந்தார். இந்தியாவின் பெரும்பாலான தலித்துகளைப் போலவே அவருக்கும் ‘வெளிநாட்டில் ரயில் வண்டியிலிருந்து வெளியில் தள்ளப்படுவதன் மூலம்’ இனப்பாகுபாட்டின் கசப்புச் சுவை தெரிய வேண்டியிருக்கவில்லை. இருந்தாலும், கல்விக்கான தாகம் அம்பேத்கரை தொடர்ந்து செலுத்தியது. கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் முனைவர் பட்டம் பெற்று 1918-இல் நாடு திரும்பிய பிறகு மீண்டும் அவரது தீண்டாமை நினைவூட்டப்பட்டது. பரோடா மகாராஜாவின் ஆதரவு, சிறந்த கல்வி, பணம், நல்ல உடைகள் எதுவும் ‘தாகத்தை மதிப்போடு தணித்துக் கொள்ளவோ, நல்ல குடியிருப்பைத் தேடவோ’ அவருக்கு உதவி செய்யவில்லை. ஒரு சில சாதிகள் அடிப்படையிலேயே தாழ்ந்தவை என்று நம்பிய அமைப்பின் நஞ்சை முறிக்க அவர் இட ஒதுக்கீடு என்ற மாற்று மருந்தைப் பரிந்துரைத்தார். கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்ற சீர்திருத்த சோசலிச முழக்கத்தை அவர் தலித்துகளுக்கு வழங்கினார்.
இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது மனித ஆளுமையை மீட்டுக் கொள்வதற்கான போராட்டம். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இன்னமும் இயல்பாக மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகளுக்கான போராட்டம்.
கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று, அனில் குமார் மீனா என்ற பழங்குடி இன மாணவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்  (எய்ம்ஸ்- AIIMS)  உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தி மீடியத்தில் படித்த அவர், இராஜஸ்தானின் பரானைச் சேர்ந்த விவசாயியின் மகன். 12-ஆம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து, எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது விடுதி அறையில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்த பால் முகுந்த் பாரதியின் அடிச்சுவட்டை அனில் குமார் மீனாவும் பின்பற்றியிருக்கிறார்.
அனில் குமார் மீனாவின் தற்கொலைக்குப் பிறகு எய்ம்ஸ் இயக்குனரின் வீட்டுக்கு வெளியில் மார்ச் 4, 2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, லக்னோ சத்ரபதி ஷாகுஜி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் நீரஜ் குமார் தனது உயிரை மாய்த்துக் கொள்வதில் தோல்வி அடைந்த செய்தி வருகின்றது. உயர் கல்வி நிறுவனங்களைப்  பன்முகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இன்சைட் அறக்கட்டளையின் ஆய்வின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தலித்/பழங்குடி மாணவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.
இந்திய பள்ளிகளில் நிகழும் வாழ்வும் சாவும்
  • மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 -  இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
  • அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
  • ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
  • செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
  • பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 -  முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. சுமன், ஜனவரி 2, 2009  – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
  • அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
  • டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009  – முதலாம் ஆண்டு பி.டெக்,  சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
  • எஸ். அமராவதி, நவ 4, 2009  – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர்,  சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
  • பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
  • புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010  – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 -  இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
  • ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 -  இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு,  விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
  • மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
  • லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
  • அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி
(தகவல்: இன்சைட் அறக்கட்டளை)
ஆனால், பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.
பாகுபாடு பாராட்டும் இந்தக் கல்வி அமைப்பில் தாக்குப் பிடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உடன் பிறந்தவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை செய்து ஒருவரின் கனவையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற உதவ வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பகுதி குழந்தைகள் வீட்டு வேலை செய்பவர்களாக, குழந்தைத் தொழிலாளர்களாக அல்லது பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.
ஒரு தலித் பெண்ணுக்கான சூழ்நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது. மகாராஷ்டிராவின் காயர்லஞ்சியில் 17 வயது பிரியங்கா போட்மாங்கே படித்து மதிப்பான வாழ்க்கையைத் தேடினார் என்ற உண்மை ஆதிக்க நிலவுடைமைச் சாதிகளின் கோபத்தைத் தூண்டியது. அவரும் அவரது தாய் சுரேகாவும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரது சகோதரர்கள் வெட்டி வீசப்பட்டார்கள்.
இது போன்ற கடக்க முடியாத சாத்தியங்களை எதிர்த்து நின்று உயர் கல்வி நிறுவனங்களைப் போய்ச் சேரும் தலித்துகளை – புள்ளிவிபரங்களின் படி நூற்றில் 2 தலித்துகள் இதைச் சாதிக்கின்றனர் – ஆசிரியர்களின் மற்றும் சக மாணவர்களின் குத்தலும், கிண்டலும் வரவேற்கின்றன. கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படாவிட்டால் உணர்வு ரீதியாக அவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.
***
டந்த பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கருப்பின மாணவர்கள் குறைவாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது பற்றி பிரிட்டிஷ் ஊடகங்களில் ஒரு விவாதம் நடந்தது. வேறு விசயங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், பிரதமர் டேவிட் காமரூன் இந்த விவாதத்தில் தலையிட்டு, அவர் படித்த ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் கருப்பின மற்றும் சிறுபான்மைக் குழுக்களிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருப்பது “கேவலமானது” என்று சொன்னார்.
“2010 இல் பிரிட்டனின் இரண்டு பழமையான பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களில் நூற்றில் ஒரு பங்கை விடக் குறைவானர்கள்தான் கருப்பு இனத்தினர். ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்ட 2617 பேரில் 20 பேர் கருப்பு இன மாணவர்கள். இது 2009-இன் 29 பேரிலிருந்து குறைந்திருந்தது” என்று டெலிகிராப் கூறியது.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லேமி, தகவல் பெறும் உரிமையின் மூலம் தரவுகளை சேகரித்து இந்த “ஆக்ஸ்பிரிட்ஜ் வெறுமையை” பற்றி குறைபட்டுக் கொண்டு, தி கார்டியனில் ஒரு கட்டுரை எழுதினார்.
பிரிட்டனில் நடக்கும் இந்த விவாதம், இந்தியாவில் நிலவும் பேரமைதிக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. தலித் மாணவர்களுக்கு எதிராக அக மதிப்பீட்டில் (குறிப்பாக செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளில்) பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவர்கள் தங்கும் விடுதிகள், உணவு அறைகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பிரித்து வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து 2006-இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சுகதேவ் தோரட்டின் தலைமையிலான மூன்று பேர் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றி விசாரணை நடத்தியது. 77 பக்க தோரட் அறிக்கை நிர்வாகத்தைப் பல முனைகளிலும் குற்றஞ்சாட்டி, பரிந்துரைகளை முன் வைத்தது. ஆனால் அந்த அறிக்கை முன் முடிவுகளுடன் தயாரிக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் ஒன்று இதோ.
ஏப்ரல் 2006-இல், உமா காந்த் என்ற தலித் எய்ம்ஸ் மாணவர், தான் தங்கியிருந்த அறை எண் 45-இன் கதவில் “இந்தப் பகுதியிலிருந்து தொலைந்து போ” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார். அப்படி எழுதிய ரவுடிகள் ஒரு தடவை உமாகாந்த் அறைக்குள் இருக்கும்போது வெளியிலிருந்து கதவைப் பூட்டி விட்டனர். இது பற்றி உமாகாந்த் ஒரு முறையான புகார் பதிவு செய்தார். என்ன நடந்தது?. மாணவர்களுக்கு “அவர்களது கடமைகள், கட்டுப்பாட்டை பின்பற்றுதல், ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடன் பழகுதல் போன்றவை நினைவூட்டப்பட்டு அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தபட்டனர்”. குற்றவாளிகள் தலித் மாணவருடன் கைகுலுக்க வைக்கப்பட்டனர்.
அவர்களோ அதற்குப் பிறகு உமாகாந்தைப் பிடித்து உதைத்து, ஒதுக்கப்பட்ட இன்னொரு பகுதிக்கு அவரை அறை மாற்றிக்கொள்ள வைத்தனர். அந்தப் பகுதிதான் எல்லா ‘ஷெட்யூல்களும்’ இருக்க வேண்டிய இடம். தெரிந்தே நடந்த எய்ம்ஸ் நிர்வாகத்தின் அலட்சியங்கள் இப்படி இருக்கும் போது அனில் மீனா, பால் முகுந்ந் பாரதி இவர்களின் மரணம் கொலைகளாகக் கருதப்பட வேண்டாமா?
இத்தகைய கொலைகள் எய்ம்சில் மட்டும் நடக்கவில்லை. ஆகஸ்ட் 26, 2007 இல், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 21 வயதான அஜய் ஸ்ரீ சந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பொதுப்பிரிவில் ஐ.ஐ.எஸ்.சி.க்கு தேர்வு பெற்றாலும், ஒதுக்கப்பட்ட பிரிவில்தான் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு நரகம் ஆரம்பித்தது. ஏதோ ஒரு வகைத் தண்டனையாக ஒரே சோதனையை மூன்றாவது முறை திரும்பச் செய்து கொண்டிருந்த போது ஆய்வகத்தில் இருந்த சூழலை அவர் தனது நாட்குறிப்பில் விவரிக்கிறார்.
“நேரம் 11.45 முற்பகல். நான் தவறான ஆய்வகத்தில் இருக்கிறேன். அல்லது இந்த ஆய்வகம் எனக்கு உரியது இல்லை. அந்தக் கண்கள், அவை என்னைப் பயமுறுத்துகின்றன. அவ்வளவு உயர்வு/தாழ்வு மனப்பான்மையுடன் என்னைப் பார்க்கின்றன”.
தலித்-மாணவர்கள்-கொலை
ஐஐஎஸ்சி இளநிலை மாணவர் அஜய் ஸ்ரீ சந்திராவின் நாட்குறிப்பிலிருந்து ஒரு பக்கம். அவர் ஆகஸ்ட் 26, 2007 அன்று தற்கொலை செய்து கொண்டார்
அனில் மீனா ‘மன அழுத்தத்தால்’ இறந்தார் என்று எய்ம்ஸ் சொல்ல, அஜய் சந்திரா படிப்புச் சுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்தார் என்று ஐ.ஐ.எஸ்.சி முடிவு செய்தது.
கடந்த சில ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில பலவீனமான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கில திறமைகளுக்கும் விரைவு பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் உயர்தர அறிவியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிலையங்களில் தாக்குப் பிடிக்க உதவிகள் வழங்கப்படுகின்றன. கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூக மாற்றத்துக்கான ஆய்வு மற்றும் கல்விக்கான மையம், தலித்/பழங்குடி மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கான ‘சுய முன்னேற்ற’ நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் நடத்த முன்வருகின்றது. அதன் மூலம் ஐ.ஐ.எம்.களிலும் ஐ.ஐ.டி.களிலும் அவர்கள் பொருந்திப் போக உதவி செய்கிறது. ஐ.ஐ.டி தில்லியில் சென்ற ஆண்டு அத்தகைய பயிற்சி வகுப்பை அந்நிறுவனம் நடத்தியது.
ஆனால் இந்தக் கல்வி நிலையங்களின் பெரும்பகுதியினரான ஆதிக்க சாதி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏகலைவர்களின் பெருவிரல்களை வெட்டி எறிய வலியுறுத்தும் துரோணாச்சாரியர்களையும், அர்ஜூனன்களையும் மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவையில்லை, பாகுபாடு காட்டுபவர்களுக்குத்தான் உதவி தேவை.
எய்ம்ஸ், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி-களில் கொல்லப்பட்ட தலித்/பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கையில், பாதி அளவு ஹார்வர்டு அல்லது ஆக்ஸ்போர்டில் கறுப்பின மாணவர்கள் கொல்லப்பட்டால் என்னவிதமான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
குப்தா அல்லது ஷர்மா என்ற உயர்சாதிப் பெயர்களுடைய இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது அது இனவெறி என்று பேசப்படுகின்றது. அது நாடுகளுக்கிடையேயான பிரச்சனையாகக் கூட ஆகிறது. தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் இந்திய வளாகங்களில் மரணத்துக்குத் துரத்தப்படும் போது ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. தலித்துகளுக்கு எதிரான இத்தகைய முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?  இட ஒதுக்கீடுகளின் அடிப்படையையே எதிர்க்கும் காழ்ப்புணர்வு நிறைந்த வாதங்களை உறுதிப்படுத்துவதற்குக் கூட இந்த இறப்புகள் பயன்படுத்தப்படுவது எவ்வளவு கேவலமானது?
2003-இன் ஹிட் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதாநாயகன் முரளி பிரசாத் ஷர்மா என்ற பிராமண சாதிப் பெயரை பெருமையுடன் சுமக்கிறான். பணம் பறித்தல், மிரட்டுதல், ஆள் கடத்தல் போன்ற தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ரவுடியான முரளி மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். எம்பிபிஎஸ் தேர்விலும் ஏமாற்றி தேர்ச்சி பெற முயற்சிக்கிறான். உணர்ச்சியற்ற அமைப்புக்கு எதிலான கலகக் குரலாக அவன் நேசிக்கப்படவும், போற்றப்படவும் செய்தான். முன்னாபாயின் நகைச்சுவையும் செய்தியும் இவ்வளவு பிரபலமானது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அவற்றைச் செய்தது ஒரு ஷர்மா.
அனில் மீனாவும், பால் முகுந்த் பாரதியும் முரளி பிரசாத் ஷர்மாவைப் போல் இல்லாமல் கடினமாக உழைத்து எய்ம்சுக்குப் போய்ச் சேர்ந்தனர், ஏமாற்றிச் சேரவில்லை. அவர்களின் மரணத்தில் பல லட்சம் தலித், பழங்குடி மக்களின் நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன. அஜய் சந்திரா, கடுமையான தீர்ப்பு சொல்லும் கண்கள் அவரை பயமுறுத்தியதை பற்றிப் பேசுகிறார். அஜ்ய்கள், அனில்கள், பால் முகுந்த்களின் கண்களை அவற்றுக்கு உரிய மரியாதையுடன் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. அதுவரை இந்த மரணங்கள் நம்மை விட்டுவிடப் போவதில்லை.
_________________________________________________________
நன்றி: ஆனந்த், அவுட்லுக்

கருத்துகள் இல்லை: