செவ்வாய், 15 மே, 2012

வழக்கு எண் 18/9 படத்தின் உண்மைக் கதை


ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது.
ஒரு நாள் வேலு நண்பர்களுடன் சிறு குன்றின் மேலே விளையாடிக் கொண்டிருக்கும்போது, கந்து வட்டிக்காரர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக பைக்கில் அவனுடைய வீடு நோக்கிப் போவதைப் பார்க்கிறான். குறுக்கு வழியில் விழுந்தடித்து ஓடுகிறான். அவனுக்கு முன்பாக வீட்டை அடைந்த வட்டிக்காரர்கள், அவனுடைய அம்மாவைத் தாறுமாறாகக் கேள்வி கேட்கிறார்கள். அம்மா முந்தானையால் வாயைப் பொத்தியபடி அழுகிறார். இதைப் பார்க்கும் வேலு ஆத்திரத்தில் கந்து வட்டிக்காரர்களை அடிக்கப் போகிறான். வாட்ட சாட்டமான அந்த நபர்கள் வேலுவை ஒரு கையால் பிடித்துத் தள்ளுகிறார்கள். வேலு சுவரில் மோதி விழுந்து அடிபடுகிறான்.
உள்ளே இதுவரை பொறுமையாக இருந்த வேலுவின் அப்பா, ஆத்திரத்தில் அருவாளை எடுத்துக்கொண்டு பாய்ந்து வருகிறார். அவரைப் பார்க்கும் கந்து வட்டிக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்து அவரை அடித்துத் துவைத்தெடுக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் தன் கண் முன்னால் அடிபடுவதைப் பொறுக்க முடியாமல் வேலு கதறுகிறான். பெற்றோருக்கும் தன் மகன் படும் வேதனையைத் தாங்க முடியவில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வட்டிக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்புகிறார்கள்.
நடந்த சம்பவங்கள் வேலுவின் பெற்றோருக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன. விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இரவில் சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து சாப்பிடுகிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதோ சந்தேகம் தோன்றவே வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து பார்க்கிறார்கள். மூவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவருகிறது. உடனே மூவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார்கள். வேலுவின் பெற்றோரை எல்லாரும் கடிந்துகொள்கிறார்கள். பணப் பிரச்னை தீரும்வரை வட இந்தியாவில் இருக்கும் முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலுவைச் சேர்த்துவிட உறவினர் ஒருவர் முன் வருகிறார். அடுத்தவர் நிலத்தில் கூலி வேலை செய்ய மாட்டேன் என்று கவுரவமாக இருந்த வேலுவின் பெற்றோர் எந்த வேலையானாலும் செய்யத் தயாராகிறார்கள்.
வேலு வட இந்தியாவுக்குச் செல்கிறான். அங்கு கொத்தடிமைபோல் வேலை செய்ய வேண்டிவருகிறது. மூன்று வேளை சாப்பாடு என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வசதியும் இல்லாமல் சிரமப்படுகிறான். அப்பா, அம்மா போன் பேசும்போது வேலை எளிதாக இருப்பதாகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் பொய் சொல்லி சமாளிக்கிறான். ஊரில் அப்பா அம்மாவும அதுபோல் தங்கள் வேதனையை மகனிடம் சொல்லாமல் சமாளிக்கிறார்கள்.
சில மாதங்கள் கழிகின்றன. வேலுவுக்கு சம்பளத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஊருக்குப் போகும்பொது கேள். சேர்த்துத் தருகிறேன் என்கிறார் முதலாளி. மாதா மாதம் சம்பளத்தைக் கேட்டு வாங்கிவிடு… இல்லையென்றால், கடைசியில் கிடைக்காமல் போய்விடும் என்று நண்பர்கள் சொல்லவே, அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை… மாதா மாதம் பணத்தை அனுப்ப வேண்டியிருக்கிறது என்று சொல்லி சம்பளத்தை வாங்கிக் கொள்கிறான். வீட்டுக்கு அனுப்பிவைக்கவா என்று அம்மாவிடம் கேட்டதற்கு நீயே வைத்துக்கொள் என்று அவர் சொல்லவே, தன் பெட்டிக்குள் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்கிறான்.
சில வருடங்கள் கழிகின்றன. கணிசமான தொகை சேருகிறது. ஆனால், முறுக்கு ஃபேக்டரியில் ஒரு நாள் இருபதாயிரம் ரூபாய் காணாமல் போய்விட்டதாக முதலாளி புகார் செய்கிறார். அனைவருடைய பெட்டிகளையும் சோதித்துப் பார்க்கிறார்கள். வேலு வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி வாங்கியிருந்த சம்பளப் பணம் அவன் பெட்டியில் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவன்தான் பணத்தைத் திருடியிருக்கிறான் என்று கட்டி வைத்து அடிக்கிறார். பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது. எஞ்சிய பணத்துக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய் என்று முதலாளி உத்தரவிடுகிறார். வேலு வேறு வழியில்லாமல் சேமித்த பணமும் போய் புதிதாகப் பணமும் கிடைக்காமல் தவிக்கிறான்.
இதனிடையில், வேலுவின் நண்பன் ஒருவன் அவனுடைய அக்காவின் திருமணத்துக்காக ஊருக்குப் போய்விட்டு வருகிறான். வேலுவின் அப்பாவும் அம்மாவும் மண் சரிந்து இறந்து போன செய்தியைச் சொல்கிறான். வேலு அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைகிறான். முதலாளிக்கு இந்த விஷயம் முன்பே தெரியும் என்பதும் வேலு யாரோ ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. ஆத்திரத்தில் முதலாளியை அடிக்கப் போகிறான். முதலாளியும் அவருடைய ஆட்களும் வேலுவை அடித்து விரட்டிவிடுகிறார்கள். சம்பளப் பணத்தைக் கேட்டபோது அதையும் தராமல் துரத்திவிடுகிறார்கள்.
வேலு அழுதபடியே ரயில்வே ஸ்டேஷனுக்கு போகிறான். ரயிலில் ஏறுவதற்கு முன்பாக, அவனுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவன் வருகிறான். கைவசம் இவ்வளவுதான் இருக்கிறது வைத்துக் கொள் என்று ஆயிரம் ரூபாய் தருகிறான். வேலு அதை வாங்க மறுக்கிறான்.
இல்லை வேலு… வாங்கிக்கோ… உன் நிலைமைக்கு நானும் ஒரு வகையில காரணமாகிட்டேன். அக்கா கல்யாணத்துக்குப் பணம் வேண்டியிருந்ததுன்னு நான் தான் முதலாளி கல்லால கை வெச்சிருந்தேன். அதுல நீ மாட்டிக்கிட்ட. குத்தத்தை ஒத்துக்கலாம்னு நெனெச்சேன். ஆனா, வீட்டு நிலமையை நினைச்சுப் பார்த்துட்டு வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன். என்னை மன்னிச்சிரு வேலு. எப்படியாவது உனக்குச் சேர வேண்டிய பணத்தை கொடுத்துடறேன் என்று அழுதபடியே சொல்கிறான்.
பணம் வேணும்னு கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேனே… ஏன் திருடின என்று சொல்லும் வேலு நண்பன் தரும் பணத்தை வாங்கிக் கொள்கிறான். நண்பன், சென்னையில் அவனுக்குத் தெரிந்த ஒருவருடைய முகவரியும் தொலைபேசி எண்ணும் தந்து அனுப்புகிறான். டிக்கெட் எடுக்காமல் ரயிலில் டாய்லெட்டுக்கு அருகில் உட்கார்ந்து சென்னை வந்து சேருகிறான். வழியில் முகவரி எழுதிய சீட்டைத் தொலைத்துவிடுகிறான். கையில் இருந்த காசும் தீர்ந்துவிடவே பசி மயக்கத்தில் ஃபிளாட்ஃபாரத்தில் மயங்கி விழுந்துவிடுகிறான். லேசாகக் கண் முழித்துப் பார்க்கும்போது அவனைச் சுற்றிலும் காசு விழுந்து கிடப்பது தெரிகிறது. பிச்சைக்காரன் என்று நினைத்து காசு போட்டுச் சென்றிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் வேலுவுக்கு அழுகையும் கோபமும் பொத்துக் கொண்டு வருகிறது. அப்போது பார்த்து ஒருவர் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டுச் செல்கிறார். உடம்பில் எஞ்சியிருக்கும் சக்தியை எல்லாம் திரட்டி, நான் பிச்சைக்காரன் இல்லைடா… என்று ஆக்ரோஷப்பட்டபடியே சிதறிக்கிடக்கும் சில்லரைகளை வீசி எறிகிறான்.
சற்று தூரத்தில் மர நிழலில் நின்று கொண்டிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளி இதைப் பார்க்கிறாள். அவனுக்கு அருகில் வந்து என்ன விஷயம் என்று கேட்கிறாள். வேலு அழுதபடியே தன் கதையைச் சொல்கிறான். அந்தப் பெண், அவனுக்கு பக்கத்து கடையில் இருந்து உணவு வாங்கித் தருகிறார். அவருக்குத் தெரிந்த கை வண்டி உணவக நபரிடம் வேலை கொடுத்து உதவச் சொல்கிறார். சம்பளம் எல்லாம் தரமுடியாது, சாப்பாடு மட்டும்தான் தருவேன் என்று சொல்லி சேர்த்துக்கொள்கிறார்.  வேலு பழைய சோகங்களில் இருந்து மீண்டு வருகிறான்.
சில மாதங்கள் கழிகின்றன. ஒருநாள் ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு தெரிந்த நபர் ஒருவரைப் பார்க்க முதலாளியுடன் செல்கிறான். அங்கு ஒரு அறையில் ஒரு சிறுவன் பக்த பிரகலாதன் கூத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறான். பிரகலாதனாகவும், ஹிரண்ய கசிபாகவும், நரசிம்ம மூர்த்தியாகவும் ஒருவனே மாறி மாறி நடித்துக் காட்டுகிறான். வேலு பிரமித்தபடி அவனை வேடிக்கை பார்க்கிறான். நடித்துக்காட்டச் சொன்னவர், அப்பறம் வா… ஏதாவது சான்ஸ் கிடைத்தால் தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். வேலு அவனிடம் பேச்சுக் கொடுக்கிறான். தன் பெயர் சின்னச் சாமி என்றும் கிராமத்தில் கூத்துக்கு மவுசு குறைந்துவிட்டதால், சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்திருப்பதாகச் சொல்கிறான். அவனுடைய நடிப்பு அருமையாக இருந்தது என்று வேலு பாராட்டுகிறான். இருவரும் நடந்து வருகிறார்கள். சற்று தொலைவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நின்று பார்க்கிறார்கள். கலையுலக வாரிசு ஒருவன் நான்கு வரி வசனத்தை ஒழுங்காகப் பேச வராமல் டேக்குக்கு மேல் டேக்காக வாங்கிக் கொண்டிருக்கிறான். சின்னச்சாமிக்கு சிரிப்பு பீறீட்டுக் கொண்டுவருகிறது. வேலுவும் அடக்க முடியாமல் சிரிக்கிறான். ஒரு கட்டத்தில் சின்னச்சாமியின் சிரிப்பு அழுகையாக மாறுகிறது. வேலு அவனுக்கு ஆறுதல் சொல்கிறான்.
சின்னச்சாமி எங்கு வேலை செய்கிறான் என்று கேட்கிறான். நாலு மாசம் ஏதாவது ஹோட்டல்ல வேலை செய்வேன். சேர்ற காசை எடுத்துட்டு ரெண்டு மாசம் சான்ஸ் தேடி அலைவேன். காசு தீர்ந்ததும் மறுபடியும் ஏதாவது ஹோட்டல்ல வேலைல சேர்ந்துப்பேன் என்கிறான். எங்க முதலாளி தண்ணி கேன் எடுத்து சப்ளை செய்யப் போறாரு. அதுக்கு ஒரு ஆள் வேணும் நீ வர்றியா என்று வேலு கேட்கிறான். சின்னச்சாமியும் சம்மதிக்கிறான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள்.
பக்கத்தில் இருக்கும் பெரிய அபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் ஜோதி என்னும் ஒரு பெண்ணை வேலு பார்க்கிறான். மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது. அந்த அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு தண்ணி கேன் கொடுக்கப் போய் வரும்போது ஜோதியை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவளோ படு விறைப்பாக இவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிறாள். இவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. மெள்ள அவன் வாழ்வில் புது தென்றல் வீச ஆரம்பிக்கிறது.
ஜோதியின் மனதில் இடம் பிடிக்க பல முயற்சிகள் செய்கிறான். துரதிஷ்டவசமாக சம்பவங்கள் அவனுக்கு எதிராகவே நடக்கின்றன. ஒருநாள் ஜோதிக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடுகிறது. தண்ணிக் கேன் போடப் போன இவனிடம் ஆட்டோ பிடித்துவரும்படி வீட்டு எஜமானியம்மா சொல்கிறார். இவனும் ஓடிப் போய் ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றிவிடுகிறான். அந்த ஆட்டோகாரனோ வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஜோதியிடம் தவறாக நடந்துகொள்கிறான். ஜோதி அவனிடமிருந்து தப்பித்து வீடு போய்ச் சேருகிறாள். மறுநாள் அந்த ஆட்டோக்காரன் எதுவும் நடக்காததுபோல் வேலுவின் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். வேலுவுக்கும் நடந்தது எதுவும் தெரியாததால் அவனிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்க்கும் ஜோதிக்கு வேலு மேல் சந்தேகம் வருகிறது.
இன்னொருநாள், வேலு தனக்கு உதவி செய்த பாலியல் தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருப்பதை ஜோதி பார்க்கிறாள். இதுபோன்ற சம்பவங்களால் அவளுக்கு அவனை அறவே பிடிக்காமல் போய்விடுகிறது.
இதன் பிறகு ஒருநாள் ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் மோதிரம் ஒன்று காணாமல் போய்விடுகிறது. ஜோதியை சந்தேகப்பட்டு விசாரிக்கிறார்கள். ஜோதி அழுதபடியே தான் எடுக்கவில்லை என்று சொல்கிறாள். தண்ணி கேன் போட வந்த வேலு தன் காதலி பிறர் முன்னால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்து துடிக்கிறான். அவனால், எதுவும் செய்ய முடியவில்லை. கேனைத் தூக்கிக்கொண்டு மேலே போகிறான். யாரையும் வெளிய போகவிடாத. செக் பண்ணனும் என்று செக்யூரிட்டியிடம் அந்த எஜமானியம்மா சொல்வது கேட்கிறது. அப்போது, ஜோதியின் அம்மா பதற்றத்துடன் தன் முந்தானைக்குள் ஒளித்து வைத்திருந்த மோதிரத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரச் செடித் தொட்டியில் வைப்பதை வேலு பார்த்துவிடுகிறான். ஜோதியின் அம்மா யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகிறார். அதை அவன் எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது மேலிருந்து படிகளில் யாரோ வருகிறார். கையில் மோதிரத்துடன் வேலு நிற்பதைப் பார்த்து அனைவரையும் சத்தம்போட்டுக் கூப்பிடுகிறார். ஜோதியின் அம்மாவும் வேறு வழியில்லாமல் அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி திட்ட ஆரம்பிக்கிறார். அனைவரும் சேர்ந்து வேலுவை அடிக்கிறார்கள். வேலு எதுவும் பேசாமல் பழியை ஏற்றுக்கொள்கிறான். ஜோதி மேலும் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
இப்படியான நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் பணக்கார மாணவன் ஒருவன் அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் அவனுடைய காதலை நிராகரித்துவிடவே, ஆத்திரத்தில் அவள் முகத்தில் ஆசிட் ஊற்ற முடிவு செய்கிறான். மாலையில் வீட்டுக்கு வருபவன் அந்தப் பெண் பள்ளி விட்டு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் வந்ததும் அந்த வீட்டில் வேலை பார்த்துவிட்டு ஜோதி வெளியே செல்கிறாள். வீட்டில் அந்தப் பெண் மட்டும்தான் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திவிட்டு தன் வீட்டுக்குள் போய் ஆசிட் பாட்டிலை எடுத்து வருகிறான் அந்த மாணவன். இதனிடையில் எதையோ மறந்து வைத்துவிட்ட ஜோதி அந்த எடுக்க திரும்புகிறாள். அவள் அந்த வீட்டுக்குள் போனது தெரியாத அந்த மாணவன் காலிங் பெல்லை அழுத்துகிறான். கதவு திறந்ததும் அது தன்னை காதலிக்க மறுத்த பெண்தான் என்று நினைத்து ஆசிட்டை ஊற்றிவிடுகிறான்.
காவல்துறையினர் விசாரிக்கும்போது தன்னை வேலு என்ற பையன் காதலிப்பதாகவும் அவனைப் பிடிக்கவில்லை என்று சொன்னதால் ஒருவேளை அவன் செய்திருக்ககூடும் என்று சொல்கிறாள். காவல்துறை அவனைப் பிடித்து விசாரிக்கிறது. அவன் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான். இதனிடையில் அந்தப் பணக்காரப் பெண் தன் அப்பாவிடம் தயங்கியபடியே தன் சந்தேகத்தைச் சொல்கிறார். ஜோதிக்கு யாராவது விரோதி இருந்து அவங்க இதைச் செய்திருக்கலாம் இல்லையா என்று அவர் கேட்கிறார். பணக்காரப் பெண்ணோ, இல்லை அப்பா… என்னைக் குறிவைத்து ஊற்றப்பட்ட ஆசிட்தான் அது. அவன், இந்த முறை தப்பிச்சுட்ட…அடுத்த தடவை தப்பிக்க முடியாது என்று என் காதுபட மிரட்டுகிறான். அவனாகத்தான் இருக்கும் என்று சொல்கிறாள். ஏற்கெனவே அவருக்கு அந்த மாணவனின் அப்பாவுடன் சின்னச் சின்ன சண்டைகள் நடந்திருக்கின்றன. நேராக காவல்துறையில் சென்று விஷயத்தைச் சொல்லிவிடுகிறார். அவர்கள் ஆசிட் ஊற்றியவனை அழைத்து விசாரிக்கிறார்கள். அவன் உண்மையை ஒப்புக்கொண்டுவிடுகிறான்.
ஆனால், அவனுடைய அப்பா சமூகத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பவர். ஒரு பள்ளியை நடத்திவருபவர். ஆரம்ப காலத்தில் திரை மறைவு வேலைகள் செய்தவர் என்றாலும் அரசியல் செல்வாக்கின் மூலம் பேரும் புகழும் அடைந்திருப்பவர். அவர் இந்த வழக்கை திசை திருப்ப முடிவு செய்கிறார். வேலுவைத் தனியாகச் சந்தித்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார். அவன் அதற்கு மறுத்துவிடவே, கடைசியாக, ஜோதியின் சிகிச்சைக்குப் பணம் தருவதாக ஆசை காட்டுகிறார். உங்களை எப்படி நம்புவது என்று கேட்கிறான். உனக்குத் தெரிந்தவர் யாரையாவது வரச் சொல் அவர்களிடம் பணத்தைத் தருகிறேன் என்று சொல்கிறார்.
சின்னசாமியை அழைத்து வரச்சொல்லி வேலு நடந்ததைச் சொல்கிறான். குற்றத்தை ஒப்புக்கொள்ளாதே என்று முதலில் சொல்லும் சின்னச்சாமி கடைசியில் வேலுவின் வற்புறுத்தலால் அதற்கு சம்மதிக்கிறான். ஜோதியிடம் உன் காதலையும், அவளுக்காக செய்யாத தவறை ஏற்றுக்கொள்வதையும் சொல்கிறேன் என்று சொல்வான். வேலுவோ வேண்டாம்… அப்படிச் செய்தால் தப்பு செய்தது யார் என்பது தெரியவந்துவிடும். அப்பறம் அந்தப் பையனின் அப்பா பணம் தரமாட்டார். என் காதல் இப்போது தெரியவரவேண்டாம். முதலில் அவளுடைய உடல் குணமாகட்டும் என்று சொல்கிறான். சின்னச்சாமியும் அதை அரை மனதாக ஒப்புக்கொள்கிறான்.
பணக்காரப் பெண்ணின் அப்பாவுக்கு வேலுவின் செய்கை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தன் மகள்தான் ஏதோ தவறுதலாகச் சொல்வதாக நினைத்து வழக்கில் இருந்து ஒதுங்கிப் போய்விடுகிறார்.
ஆசிட் ஊற்றியவனின் அப்பா ரொம்பவும் நல்லவர்போல் ஜோதியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுகிறார். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய பத்து லட்சம் ஆகும் என்கிறார். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இந்தப் பெண்ணின் முகம் குணமானால் போதும் என்று சொல்கிறார். சின்னச்சாமியும் அதை வேலுவிடம் வந்து சொல்கிறான். வேலு மன நிம்மதியுடன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். ஏழு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால், வேலு ஜெயிலுக்குப் போனதும் அந்தப் பெரிய மனிதர் ஆள் மாறிவிடுகிறார். சின்னச்சாமி போய் அவரைப் பார்க்க முயற்சி செய்யும்போதெல்லாம் தட்டிக் கழிக்கிறார். மருத்துவர் ஊரில் இல்லை என்று பொய் சொல்லி அனுப்புகிறார். அவர் ஏமாற்றுகிறார் என்பது தெரிந்ததும் வேலுவிடம் போய் விஷயத்தைச் சொல்கிறான்.
வேலுவுக்கு கோபம் வருகிறது. சின்னச்சாமி இந்த விஷயத்தை ஜோதியிடம் போய்ச் சொல்கிறான். அவள் முதலில் நம்ப மறுக்கிறாள். அவனுடைய அம்மாவும் மோதிரத்தைத் திருடியது தான் தான் என்பதையும் அந்தப் பழியை வேலு ஏற்றுக் கொண்டதையும் சொல்லி அழுகிறார். ஜோதிக்கு வேலுவின் உண்மைக் காதல் புரியவருகிறது. ஜெயிலில் இருக்கும் அவனைப் போய்ப் பார்க்கிறாள். மற்ற கைதிகளும் அவர்களைப் பார்க்க வந்தவர்களும் பெரும் சப்தத்தில் பேசிக் கொள்ள வேலுவும் ஜோதியும் மவுனமாக ஒருவருக்கு முன் இன்னொருவர் நின்றபடியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போனபிறகு, வேலு தணிந்த குரலில் என்னை ஏமாத்தினவன நான் சும்மா விடமாட்டேன். பெயில்ல வெளியில வர்ற அன்னிக்கு அவனுக்கு இருக்கு வேட்டு என்று கர்ஜிக்கிறான். ஜோதி அவன் கைவிரல்களை மெள்ளத் தொட்டு சாந்தப்படுத்துகிறாள்.
அடுத்த நாள் அந்த பணக்கார பெரிய மனிதரைப் பார்க்க கூடைப் பை ஒன்றை எடுத்துக் கொண்டு போகிறாள். அந்த மனிதர் பள்ளி விழா ஒன்றில் மும்மரமாக இருக்கிறார். அவரைத் தனியாக அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள். உன் பையன் செஞ்ச தப்புக்கு ஒண்ணும் அறியாத ஒருத்தனை பலி ஆக்கிட்ட இல்லை… ஆசை காட்டி மோசம் பண்ணிட்ட இல்லை… ஏழைங்க தான என்ன செஞ்சிட முடியுங்கற திமிருதான. என்ன செய்யறேன் பார் என்று பையில் இருக்கும் ஆசிட் பாட்டிலை எடுத்து அவர் முகத்தில் வீசுகிறாள். துடி துடித்து அவர் கீழே விழுகிறார். சுற்றியிருப்பவர்கள் ஜோதியைப் பிடித்து காவல்துறையினரிடம் கொடுக்கிறார்கள்.
ஜோதிக்கும் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. வேலு அடைக்கப்பட்டிருக்கும் அதே ஜெயிலிலேயே ஜோதியையும் அடைக்கிறார்கள். ஜெயில் வரவேற்பறையில் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரையும் மிகப் பெரிய கம்பி வலை பிரிக்கிறது. ஆனால், அதற்கு இடையில் இருக்கும் இடைவெளிகளினூடாக காதலர்கள் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.
எங்க அம்மாவுக்கு பாசமான புள்ளையா இருக்க நினைச்சேன். அது முடியாமப் போச்சு. ஒரு முதலாளிக்கு விசுவாசமான தொழிலாளியா நடந்துக்க நினைச்சேன். அதுவும் முடியாமப் போச்சு. உன்னோட காதலனா இனிமே வாழப்போறேன். இதை யாரும் என் கிட்ட இருந்து பறிக்க முடியாது ஜோதி. என்னை எந்தப் பள்ளத்துக்குள்ள தள்ளிவிட்டாலும் கிடைக்கற பிடிமானத்தைப் பிடிச்சி மேல வந்துருவேன் ஜோதி. நீ மட்டும் கடைசி வரை என் கூடவே இருந்தாபோதும் ஜோதி என்று கண்கலங்குகிறான்.
ஜோதி மெள்ள தன் பையில் இருக்கும் தாலியை எடுத்து வேலுவிடம் கொடுக்கிறாள். வேலு கண்கள் மலர கட்டுகிறான். இருவரும் அழுகை வரும் வரை மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். காவலர்கள் நேரம் முடிந்துவிட்டது என்று இருவரையும் அழைத்துச் செல்கிறார்கள். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே இருவரும் தங்கள் செல்லுக்குச் செல்கிறார்கள்.
0
பாபு www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: