வியாழன், 17 மே, 2012

வெட்டுங்கடா… நான் சொல்றேன்..பா.ம.க.வின் கொள்கை முழக்கம்


Viruvirupu
டாக்டர் ராமதாஸ் நிறுவனராக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைப் பிரகடனம் செய்த காரணத்துக்காக, அக்கட்சியின் முன்னணி தலைவர் காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்கட்சியின் கொள்கைப் பிரகடனம், சாதி உணர்வு, மற்றும் வன்முறையை தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது என்று போலீஸ் ரிக்கார்ட்களில் பதிவாகியுள்ளது.
மது அருந்தக்கூடாது, புகைப் பிடிக்கும் காட்சிகள் திரைப்பட போஸ்டர்களில் இடம்பெறக்கூடாது என்று மக்களை நல்வழிப்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் நட்சத்திரப் பிரமுகர் காடுவெட்டி குரு, “வன்னிய இன பெண்களை கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா… வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்றேன்…” என்று தமது இன மக்களை நல்வழிப்படுத்தியதே இந்த வழக்குக்கு காரணம்.

டாக்டர் ராமதால், தமது கட்சியினருக்கு சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றும் நடைமுறையாக, மாமல்லபுரத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று விழா நடத்துவது வழக்கம். இப்போது ஏற்பட்டிருப்பது வெறும் சோர்வு அல்ல, கட்சியே பாய் விரித்து படுத்து விட்டது என்பதால், குளுக்கோஸைவிட சற்றே ஸ்ட்ராங்காக எதையாவது ஏற்ற வேண்டிய கட்டாயம் டாக்டருக்க ஏற்பட்டுள்ளது.
கட்சியினருக்கு உற்சாகம் ஏற்றுவதற்கு, கத்தி ஏற்றுவதில் வல்லவரான காடுவெட்டி குருவால்தான் முடியும் என்று முடிவு செய்த டாக்டர் ஐயா, கா.வெ.குருவை சிறப்பு பேச்சாளராக ஏற்பாடு செய்திருந்தார்.
கடந்த சித்ரா பெளர்ணமி தினத்தன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான வன்னியர் சமூக மக்கள் வந்திருந்தனர். பா.ம.க. நிறுவனர், பெரிய ஐயா டாக்டர் ராமதாஸ், 44 வயதில் இளைஞராகவுள்ள இளைஞரணித் தலைவர் சின்ன ஐயா அன்புமணி ஆகியோர் பேசினார்கள். இருந்தாலும் கூட்டம் ஆவலுடன் காத்திருந்தது, காடுவெட்டி குரு செய்யப்போகும் கொள்கை முழக்கத்தை கேட்பதற்குதான்.
இயல்பிலேயே வீர விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான காடுவெட்டி குருவை, ஜெயங்கொண்டம் தொகுதியைச் சேர்ந்த மக்கள் தமது பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டு, சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அவர்.
அதற்குரிய கௌரவத்துடன் பேசத் துவங்கிய அவர், ஆரம்பத்திலேயே பத்திரிகைகளை வாய்க்கு வந்தபடி கிழிகிழியென கிழிக்கத் துவங்கினார். தினமலர் பத்திரிகை அவரது அர்ச்சனையில் அதிகம் சிக்கிக் கொண்டது. அடுத்து பிராமண சமூகத்தை தமது பாணியில் போட்டுப் புரட்டியெடுத்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது.
அடுத்து கலப்புத் திருமணத்தை கையில் எடுத்தார். கடுமையாக சாடினார். அவரது நிலைமை அப்படி. வன்னியர்கள் அனைவரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டால், ஜாதியை நம்பி அரசியல் செய்யும் பா.ம.க.வை இழுத்து மூடிவேண்டும்.
இழுத்து மூடினால், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்காவது அவர்களது பழைய டாக்டர் தொழில் உள்ளது. அண்ணன் குருவின் பழைய தொழில், வெளியே சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. இதை நினைத்து உணர்ச்சி வசப்பட்ட கா.வெ.குரு, பா.ம.க.-வினருக்கு செய்த போதனைதான், “வன்னிய இன பெண்களை கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா… வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்றேன்…”
என்ன அநியாயம்? இந்தப் பேச்சுக்காக அவர்மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காடுவெட்டி குருவின் பேச்சு அடங்கிய ஆடியோ ரிக்கார்டிங்கை போட்டு கேட்டு, பரிசீலனை செய்த பின்னரே வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறுகிறது மாமல்லபுரம் போலீஸ். இதில் பரிசீலனை செய்ய என்ன இருக்கிறது? அண்ணன் வழமையாக பேசுவதே அப்படித்தான். அது போலீஸ் அறியாததா?
“வெட்டுங்கடா” என்று அண்ணன் சொல்லியதில் என்ன தவறு இருப்பதாக போலீஸ் கருதுகிறது என்பது புரியவில்லை.
ஒரு மருத்துவர் மேடையேறினால், அவரது பேச்சில் மருத்துவ டேர்மினாலஜி வரும். ஒரு வக்கில் மேடையேறினால், கோர்ட்டில் உபயோகிக்கும் வார்த்தைகள் அவரை அறியாமலேயே பேச்சில் கலந்து வரும் வரும். அண்ணன் காடுவெட்டி குரு அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தை, அவரது பேச்சில் வந்துவிட்டது. அது குற்றமா?
அருவா உற்பத்தி செய்பவர்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்க.. அண்ணன் நிறுத்திடுவார்!

கருத்துகள் இல்லை: