வெள்ளி, 18 மே, 2012

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1

பா.ஜ.கவின் மதுரை சங்கமம், நித்தியால் பஞ்சரான கதை!

தமிழர்களின் ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும் மதுரை தனது வரலாற்றில் முக்கியமான அத்தியாயத்தை சமீபத்தில் உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி தெரிந்ததுதான். மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். மடங்களில் சிவனே என்று படுத்துறங்கும் காமா சோமாவாக இருக்கும் தம்பிரான்களில் ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.

அத்தகைய தம்பிரான்களும், மற்றைய ஆதீனங்களும் அப்படி காமா சோமா பார்ட்டிகள் இல்லை என்றாலும், அவர்களது அந்தப்புறத்தில் ரஞ்சிதா போன்ற திரையுலகத் தாரகைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஊடக வெளிச்சமும் இல்லை. சொத்துக்கள் இருந்தும் வவ்வால்கள் மட்டும் வந்து போகும் பாழடைந்த சிவன் கோவிலைப் போன்று ஆதீனங்களின் அன்றாட தர்பார்களில் சுறுசுறுப்பும்,விறுவிறுப்பும் துளிக்கூட இல்லை. ஆகவே மன்மதலீலை புகழ் மற்றும் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா ஆதீனம் ஆனார் என்பதால் ஊடகங்கள் துவங்கி பாமரர் வரை படித்து, ரசித்து, பொழுதைப் போக்குகின்றனர்.
என்றாலும் தமிழகத்தில் செயல்படும் இந்துமதவெறி அமைப்புகளுக்கு இது ஒரு மரண அடிச் செய்தி. இது முதல் அடி இல்லையென்றாலும் முக்கியமான அடி. மெல்லவும், முழுங்கவும், தள்ளவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை புரிந்து கொண்டால் வருடக்கணக்கில் ரூம் போட்டு சிரிக்கலாம்.
புதுப்படங்கள் குறித்த மவுத் டாக்கா, அந்தப் படங்களில் வரும் உடை, வளையல்கள் ரிலீசாவதா எல்லாம் மதுரையில்தான் முதலில் போணியாகும். லெட்டர் பேடு கட்சிகள் முதல் தே.மு.தி.க காமடி பீஸ்கள் வரை மதுரையில் மாநாடு நடத்தினால்தான் அரசியல் உலகில் கவனிக்கப்படுவார்கள். அப்படித்தான் அரசியல் அனாதை பட்டத்திற்கு போட்டி போடும் தமிழக பாரதிய ஜனதா, மதுரையில் “தாமரை சங்கமம்” என்ற பெயரில் மாநாடு நடத்தியிருக்கிறது. ஆயினும் ஊடகங்களில் தாமரைக்கு கிடைக்கவே வாய்ப்பில்லாத கவரேஜை, அதே மதுரையில் ஆதினமானதன் மூலம் நித்தியானந்தா ஒரே அடியில் அள்ளிச் சென்றுவிட்டார்.
தி.மு.க, அ.தி.மு.கவின் தயவில் ஓரிரு தொகுதிகளை ருசி பார்த்த பாரதிய ஜனதாவை அந்தக் கட்சிகள் தேவையின்மை கருதி சீண்டுவதே இல்லை. எனினும் தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தனித்து ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா தயாராகி வருவதை மெய்ப்பிக்கும் மாநாடு என்று அவர்களாகிய அவாள்கள் சிரிக்காமலேயே ஜம்பமடிக்கிறார்கள். இது விஜயகாந்த், ராம்தாஸ் என்று எல்லா கோமாளிகளும் புலம்பும் இத்துப் போன டயலாக்தான். யாரும் கவனிக்கமாட்டார்களா என ஏங்கும் பிச்சைக்காரன், மனக்கோட்டையில் ஊரின் அரசனாக தன்னைத்தானே முடிசூட்டிக் கொள்வது போலத்தான் பாரதிய ஜனதாவின் மதுரை மாநாடும். இந்திய அளவிலேயே இந்துத்வம் சூடு பிடிக்க முடியாத நிலை. தமிழகத்திலோ அது இன்னும் பரிதாபமாக இருக்கும் நிலையில் அந்த பரிதாபத்தை அய்யோ பாவமாக மாற்றி விட்டது மதுரை ஆதின பட்டமேற்பு விழா.
மதுரை ஆதீனமானார் நித்தி

நித்தி ஆதீனமானதை ஜீரணிக்கவோ, வாந்தி எடுக்கவோ முடியவில்லை!

மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கேட்ட போது, “புதிய ஆதீனம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் இதை வைத்து இந்து மதத்தை விமரிசிப்பது சரியில்லை” என்றார் பா.ஜவின் தமிழகத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன். இந்த வாக்கு மூலத்தில் டன் கணக்கில் உறைந்திருக்கும் துயரத்தை உங்களால் உணர முடிகிறதா?
ஆரம்பத்திலிருந்தே நித்தியானந்தா ஆதீனமானதை ‘எதிர்ப்பதாகக்’ கூறும் காமடி பாசிஸ்ட்டுகளான இந்து மக்கள் கட்சியினரின் வாக்கு மூலத்தை கவனித்தால் அதே துயரத்தை கொஞ்சம் கவித்துவமாக ருசிக்க முடியும். மேலும் ரஞ்சிதா அத்தியாயத்தின் போதே இவர்கள் நித்தியானந்தாவை எதிர்த்து செய்த குட்டி கலாட்டாக்கள் அனைத்தும் மலிவான ஊடக விளம்பரங்களை நாடித்தான். கர்நாடகாவின் ஸ்ரீராம் சேனா காசு வாங்கிக் கொண்டு செய்யும் கலாட்டக்கள் போலவும் இவர்களது குத்தாட்டங்களைக் கருத முடியும். அதன்படி மறைமுகமாக இது நித்தியானந்தாவின் செட்டப்பாகக் கூட இருக்கலாம்.
அர்ஜூன் சம்பத் கும்பலுக்கு உண்மையிலேயே ஆதீனம் குறித்து அக்கறை உள்ளதாக வைத்துக் கொண்டாலும் அதன் அடிப்படையில் உள்ளது ‘இந்து தர்மம்’ குறித்த பெருமிதம் அல்ல. வடிவேலு காமடியையே விஞ்சும் வண்ணம் மாறிவரும் பார்ப்பனியத்துக்கு ஏதாவது நட்டுவைத்து முட்டுக் கொடுக்க முடியாதா என்ற அவல நிலைதான் அந்த அக்கறை. அதனால்தான் இந்த கும்பல் பழைய ஆதீனத்தை எதிர்க்காமல், புதிய ஆதீனத்தை மட்டும் எதிர்க்கிறது. ஜெயேந்திரனை விடுத்து நித்தியானந்தாவை மட்டும் குறி வைக்கிறது. அந்த எதிர்ப்பும் மடத்திற்குள் சென்று திருஞானசம்பந்தரை வழிபடுவோமென்றுதான் காந்திய வழியில்தான் காட்டப்படுகிறது. இன்னும் தேவராம் பாடியும், மதுரை ஆதீனத்தை வாழ்த்தியும்தான் அவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள்.
காரணம் என்ன? இதில் தெளிவான நிலையெடுத்து போராட வேண்டி வந்தால் அது கரையான் புற்றுக்குள் கைவிடுவதைப் போல. பூதத்தைக் கிளப்பாமல் கிணறு வெட்ட முடியுமா என்ன? இந்து மதத்தின் மேன்மைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில், அதன் கீழ்மைகளை முடிந்த அளவுக்கு மறைக்க முயல்வதுதான் இந்து மக்கள் கட்சியின் வியூகம். அதனால்தான் எதிர்ப்பைக் காட்டுவதிலும், வார்த்தைகளை உச்சரிப்பதிலும் மிகுந்த கவனம் காட்டுகிறார்கள். சாரமாகச் சொல்வதென்றால் இந்த பிரச்சினையை தீவிரமாக கிளப்புவதன் மூலம் பார்ப்பனிய இந்து மதம் எள்ளி நகையாடப்படும் என்பதை அவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள். இதில்தான் சங்க பரிவாரங்களுக்கும், அவர்களிடமிருந்து விலகியதாகக் கூறிக் கொள்ளும் அர்ஜூன் சம்பத் கும்பலுக்கும் வரம்புக்குட்பட்ட போட்டி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பெரிது என்பதால் சற்று அடக்கி வாசிக்கிறார்கள். இந்து மக்கள் கட்சி சிறு கும்பல் என்பதால் விசில் சத்தம் கொஞ்சம் அதிகம்.
நித்தியானந்தா
நித்தி ஆதீனமாவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

ஆதினங்கள் – மடங்கள் – சாமியார்களின் இரத்த வரலாறு!

திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்னக்குடி உள்ளிட்ட பெரும் ஆதீனங்களும், சில்லறை மடங்களும் ஒன்று கூடி தங்களது அதிருப்தியை அல்லது எதிர்ப்பு மாதிரி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு மடத்தை ஆதீனமா, சில்லறையா என்று எதைக் கொண்டு அளவிடுவது? சில்லறையை அதாவது சொத்தை வைத்துத்தான். மேற்கண்ட ஆதீனங்களும், சங்கர மடமும் டாடா, பிர்லா, அம்பானி போன்று சில ஆயிரம் கோடி சொத்துக் கொண்டவைகள். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், கிராமங்கள், கடைகள், கல்லூரிகள், கோவில்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்தட்ட தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிறார்கள்.
“நித்தியானந்தாவை ஆதீனமாக அறிவித்திருப்பதை பத்து நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும்” என்று இந்த ஆன்மீக முதலாளிகள் தீர்மானித்த போது ஆரம்பத்தில் குன்னக்குடி பொன்னம்பலம் சம்மதிக்கவில்லை. “ஒவ்வொரு ஆதீனமும் தனது வாரிசையே ஆதினமாக நியமிக்க வேண்டும். வாரிசுகள் இல்லாத பட்சத்தில் திருவாவடுதுறை, தரும்புரம் என இருபெரும் ஆதீனங்களும் சேர்ந்து வாரிசுகளை தேர்ந்தெடுப்பார்கள்” என்ற வாக்கியத்தை அவர் ஏற்கவில்லை. அதை நீக்கிவிட்டே தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டார்கள்.
தங்களது சாம்ராஜ்ஜியத்தின் வாரிசுதார்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தம்மை விட்டுப் போகக்கூடாது என்றால் அதன் சூட்சுமம் ஆதீனங்களின் சொத்துடைமையில் பொதிந்திருக்கிறது. அம்பானி சொத்தை அவரது குண்டு பையனுக்கு கொடுப்பாரா இல்லை தெருவில் போகும் குப்பனுக்கு கொடுப்பாரா? முதலாளிகளுக்கு மட்டுமல்ல ஆதீனங்களுக்கும் இந்த வாரிசு முறை பொருந்தும்.
வருணாசிரமத்தை இதயமாகக் கொண்டு வாழும் பார்பனிய இந்து மதத்தில் ஆரம்பத்தில் வேள்வி வழிபாடே பிரதானம். உருவ வழிபாடும், கோவில்களும் சமண மதத்திற்குரியவை. அதே போன்று மதப்பிரச்சாரத்திற்கும், கல்விக்கும் பயன்பட்ட மடங்கள், பள்ளிகள் போன்றவையும் புத்த, சமண மதத்திற்குரியவை. பார்ப்பனியம் நிலை பெற்ற பிறகு இவற்றை திருடிக் கொண்டார்கள். தமிழகத்தில் பிற்கால சோழர்கள் காலத்தில் பார்ப்பனியாமயமாக்கத்தின் பகுதியாக மன்னர்களின் ஆதரவுடன் இத்தகைய ஆதீனங்கள் எழுந்தன. புராண புரட்டுக்கதைகளால் இவர்களது வரலாற்றுக் காலம் ஊதி உப்பவைக்கப்பட்டாலும் அவற்றுக்கென்று நேரடி ஆதாரம் ஏதுமில்லை.
பண்டைய இந்தியாவில் கோவில்களே அரசியல், பொருளாதார, கருவூல நிறுவனமாக இருந்தன. கஜினி முகமது மட்டுமல்ல, எல்லா இந்து மன்னர்களுமே எதிரி நாட்டுக் கோவில்களை கொள்ளையடித்திருக்கின்றனர். பொக்கிஷங்களை கைப்பற்றுவது என்பதைத் தாண்டிய மத விரோதம், கடவுள் விரோதம் ஏதுமில்லை. கோவில்களின் துணை நிறுவனமாக ஆதீனங்கள் தோன்றியதும், ஏராளமான மக்களும், கிராமங்களும், இலவச சமூக உழைப்பும் தானமாக கொடுக்கப்பட்டன. இவற்றை அனுபவிக்கின்ற உரிமை பார்ப்பன – ‘மேல்’ சாதியினருக்கு மன்னர்களால் அளிக்கப்பட்டன. அப்படித்தான் ஆதீனங்களின் உறவினர்களும், சாதிக்காரர்களும், மறைமுக வாரிசுகளும், பினாமிகளும் இத்தகைய மக்கள் சொத்துக்களை காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.
மதத்தின் பெயரால் இருப்பதாலேயே அவர்களின் சுரண்டும் உரிமை இயற்கை உரிமை போல மக்களால் சகித்துக் கொள்ளப்படுகின்றது. 1930களில் தமிழகத்தில் உள்ள கோவில்களை நீதிக்கட்சி அரசுடமை ஆக்கிய போதுதான் அந்தந்த வட்டார ஆதிக்க சாதி அறங்காவலர்கள் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும் தெரிய வந்தது. அப்போதும் சரி, 47க்கு பின்னரும் சரி, ஆதீனங்களின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படாமல் நீடித்திருக்குமாறு விடப்பட்டன.
சொத்துடமையின் மையத்தில் சுழலுவதால் ஆதீனங்களின் இருப்பும், பிறப்பும், நிறைய மர்மங்களையும், வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன. முகலாய மன்னர்கள்தான் தமது இரத்த உறவுகளைக் கொன்றுவிட்டு பட்டம் சூட்டிக் கொண்டார்கள் என்று இந்து வெறியர்கள் பீற்றிக் கொள்வது வழக்கம். இது எல்லா மன்னர்களுக்கும் பொருந்தும் என்பதை வரலாறு காட்டியிருக்கின்றது.
மன்னர்களை விடுங்கள், துறவறம் பேசும் சாமியார்கள், மடாதிபதிகளின் வன்முறைகளைப் பாருங்கள். புட்டபர்த்தியில் நடக்காத கொலையா, சாயி பாபா – ரஜ்னீஷிடம் இல்லாத பாலியல் வக்கிரமா, பாபா ராம் தேவ் செய்யாத வருமான வரி ஏய்ப்பா, ஆர்.எஸ்.எஸ்-இன் ராமஜன்ம பூமி முக்தி மோர்ச்சா தலைவர்கள் நடத்தாத ஹவாலா மோசடியா, இல்லை ‘தாயுள்ள’த்தோடு இருக்கும் அமிர்தானந்தா மாயி மடத்தில்தான் கொலை நடக்கவில்லையா?
ஏன், ஆதீனங்களின் வரலாற்ற்றைக் கூட பாருங்கள். 2002 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதினத்தை இளைய ஆதீனம் கொலை செய்து விட்டு கைப்பற்ற முயன்ற கதை சனாதான தர்மத்தின் சமீபத்திய யோக்கியதையைக்  காட்டுகிறது.
சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதாகக் கூறும் இவர்களது சிந்தை டில்லி சுல்தான்களை விடவும் வன்முறையானது என்பதற்கு இதுவே போதுமானது. தற்போதைய மதுரை ஆதீனம் கூட இடையில் ஓரிருவர்களை பட்டம் கட்டி பின்னர் பங்கு பிரிப்பதில் சண்டை வந்ததால் மடத்தை விட்டே விரட்டியிருக்கிறார். அடுத்த வாரிசு தான்தானென்று நம்பி ஏமாந்த தம்பிரான்கள் பலரது சண்டையும், அவர்களில் சிலர் தனி மடங்கள் கண்டதும் எப்போதும் நடக்கின்ற வரலாறு.
எனவே வாரிசுச் சண்டைகள், பட்டமேற்பதில் போட்டி எல்லாம் வாழையடி வாழையாக மடங்களில் நடக்கின்ற ஒன்றுதான். இதில் நித்தியானந்தா மட்டும் அயோக்கியன் என்றால் யோக்கியன் யார் என்ற கேள்விக்கு விடை உண்டா?
- தொடரும்

கருத்துகள் இல்லை: