நூற்றாண்டு கண்ட அண்ணாவின் நினைவாக உருவான மாபெரும் நூலகத்தையே மூட முயற்சிக்கிறார்கள்.
மனிதன் கூடி வாழத் தொடங்கியபோது குழுக்களாகவும், குலங்களாகவும் பிளவுபட்டான். அப்போது குலங்களுக்கு இடையே பகை. அந்தக் காட்டுமிராண்டி களிடத்தில்தான் "பார்க்காதே, பேசாதே, வாள் எடு தலை வெட்டு' என்றெல்லாம் கட்டளை பிறப்பித்தார்கள். அந்த முன்னோர்கள் போட்ட கட்டளையை இன்றைக்கு அரசியலிலும் செயல்படுத்துகிறார்கள். அப்படிச் செயல்படுத்தும் நாயகி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான். மமதை என்றால் மம்தா என்று அகராதியில் ஒரு சொல் இடம் பெற்றுவிட்டது.
மாற்று முகாமினரை கடும் பகைவர்களாக கருது என்ற கற்காலக் கலாச்சாரம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டது தான். உற்றாராக இருந்தாலும் உடன்பிறப்பாக இருந்தா லும் அவர் அந்தக் கழகத்துக்காரர் என்றால் உறவுகூடாது என்ற எழுதப்படாத கட்டளை இங்கேதான் செயல்படுத்தப்படுகிறது. அதனால் திரு மணங்கள் கூட நின்று போயிருக்கின்றன. பொது நிகழ்ச்சிகளில் கூட நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுகிறார்கள். அதனை மம்தா பானர்ஜி சுவீகரித்துக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்டு களைத் திருமணம் செய்யாதே- கம்யூனிஸ்டுக் குப் பெண் கொடுக்காதே -எடுக்காதே என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
இந்திய ஜனநாயகம் வெட்கித் தலை குனி கின்ற காரியத்தையும் மம்தா தலைநகரிலேயே அரங்கேற்றினார். மத்திய ரயில்வே அமைச்ச ராக அமர்ந்திருந்தவர் அவருடைய கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி. பேரறிவாளர்.
அவர் நாடாளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்தார். நீண்ட காலத் திற்குப் பின்னர் சிறிதளவு ரெயில்வே கட்ட ணம் உயர்த்தப்பட்டது. அதனை மம்தா பானர்ஜியுடன் கலந்தே நிர்ணயித்ததாக திரி வேதி கூறினார். ஆனாலும் அவர் உடன் பதவி விலக வேண்டும் என்று அம்மணி கட்டளை யிட்டார். பைசாக் கணக்கில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை எவருமே எதிர்க்கவில்லை. இந்த அளவு கூட உயர்த்தவில்லையென்றால் புதிதாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்று ரெயில்வே தொழிற்சங்கங்கள் வாதிட்டன.
ரெயில்வே பட்ஜெட் மீது விவாதம் நடந்து அதற்குப் பதில் அளித்த பின்ன ராவது திரிவேதியை ராஜினாமாச் செய்யச் சொல்லியிருக்கலாம். ஓடுகின்ற ரயிலிலிருந்து உடனே குதி என்று அம்மணி உத்தரவு போட்டுவிட்டார். அவரும் குதித்து விட்டார்.
டெல்லிக்கு அதிர்ச்சிதான். ஆனால் நமக்கு திரிவேதி ராஜினாமா வியப்பைக் கூட தரவில்லை. ஏனென்றால் இதனை விட "படா படா' நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து விட்டோம்.
அப்போது வாஜ்பாய் நாட்டின் பிரதமர். கூட்டணி ஆட்சியில் மத்திய தரைவழிப் போக்கு வரத்து அமைச்சராக சேடப்பட்டி முத்தையா இருந்தார். அவர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம். ரெயில் சிதம்பரத்தில் நின்றது.
உறக்கத்தில் இருந்த அவரை ஒருவர் எழுப்பினார். ""அம்மா உடனடி யாக டெல்லி போகச் சொன்னார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்'' என்றார்.
ரெயிலை விட்டு இறங்கி நேராக அவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். டெல்லி பறந்தார். பதவியை ராஜினாமா செய்தார்.
சேடப்பட்டியார் மீது சொத்துக் குவிப்புப் புகார். அத்வானி மீது பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக புகார். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவனித்ததாக பூட்டாசிங் மீது புகார். இவர்களை வாஜ்பாய் பதவி விலகச் சொல்லவில்லை. ஆனால் கழகத் தலைமை சேடப்பட்டியாரை பதவி விலகச் சொன்னது.
பத்து நாட்களுக்குப் பின்னர் அத்வானியும், பூட்டாசிங்கும் சேடப்பட்டியாரைப் போல பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அவர்கள் பதவி விலகத் தயாராக இல்லை.
பத்திரிகை சுதந்திரம் -கருத்துச் சுதந்திரமெல்லாம் தமிழகத்தில் படாதபாடு படுவதுபோல மேற்கு வங்கத்திலும் அவதிப்படுகிறது. ஈ-மெயில் என்பது தனிநபர் தகவல் தொடர்பு சாதனம். அதில் நண்பர்களும் அன்பர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கொல்கத்தா அருகே ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அம்பிகேஷ் மகாபத்ரா என்பவர் பேராசிரியராக பணி செய்கிறார். மம்தா பானர்ஜியைப் பற்றி கார்ட்டூன் வரைந்தார். அதனை ஏடுகளுக்கு அவர் அனுப்பவில்லை. அண்டை வீட்டுக்காரரான சுபரா சென்குப்தா என்பவருக்கு ஈ-மெயிலில் அனுப்பினார். அதுதான் அவர் செய்த மாபெரும் குற்றம்.
பேராசிரியர் மகாபத்ராவையும் அவரது இல்லத்தையும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். அணி அணியாக வந்தவர்கள் இங்கே நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கவில்லையா? அதனைக் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லையா? அதே போலத்தான் அங்கே காவல்துறையினரின் கரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் மகாபத்ராவின் இல்லம் சூறையாடப்பட்டது. சொத்துகளுக்கு பெரும் சேதம்.
அடுத்தநாள் பேராசிரியர் மகாபத்ரா கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் சித்ரவதை. தன்னை மார்க்சிஸ்ட் அனுதாபி என்று அவர் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார். தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல என்று அவர் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்.
இப்போது அந்தப் பேராசிரியர் மகாபத்ரா மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. பெண்களை கிண்டல் செய்ததாகவும் புகார். கணினியைப் பயன்படுத்தி பெண்கள் மீது வெறுப்பை விதைத்தார் என்றும் புகார். இத்தனை கற்பனைப் புகார்களையும் இணைத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். உலகம் கைகொட்டிச் சிரிக்கிறது.
ஆனால் இங்கேயும் நீதிதேவனுக்கு மயக்கம் வரவில்லை. அங்கேயும் நீதிதேவனுக்கு உறக்கம் வரவில்லை. மகாபத்ராவை நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்தது. நீதிமன்றங்கள்தான் இன்றைக்கு பத்திரிகை கருத்து சுதந்திரங்களை பாதுகாக்கின்றன.
மம்தா பானர்ஜி அரியணை ஏறியதற்கு மாவோயிஸ்டுகள், நிலப்பிரபுக்கள் ஒரு காரணம். இன்னொரு பக்கம் மகாபத்ரா போன்ற அறிவுஜீவிகளும் ஒரு காரணம். மம்தா ஏதோ வானத்திலிருந்து மாற்றம் கொண்டுவரப் போகிறார் என்று இவர்கள் நம்பினார்கள். மம்தாவின் நாணயத்தை மாவோயிஸ்டுகள் புரிந்துவிட்டனர். தேர்தலுக்கு முன்னர் கொல்கத்தா வீதிகளில் மம்தாவிற்கு ஆதரவாக பேரணிகள் நடத்திய பேராசிரியர்கள், அறிஞர் பெருமக்களெல்லாம் துக்கம் கொண்டாடுகிறார்கள்.
மேற்கு வங்கத்தின் பிரபல எழுத்தாளர் மகா சுவேதாதேவி, "அய்யோ இப்படி ஒரு மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லையே' என்று ஆதங்கப்படுகிறார். ஒரு கார்ட்டூனுக்காக ஒரு பேராசிரியரைக் கைது செய்து காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்துவதா என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வேதனைப் பட்டிருக்கிறார்.
இப்படி மம்தா தொடுக்கும் தாக்குதல் ஒன்றல்ல இரண்டல்ல. இதுவரை நூலகங்கள் வாங்கிய ஏடுகளின் பட்டியலைப் பாதியாகக் குறைத்துவிட்டார். மருத்துவமனைகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானது. ""அய்யோ காம்ரேடுகள் சதி'' என்கிறார். எந்தப் பிரச்சினை மீதாவது எங்காவது எதிர்ப்பு கிளம்பினால் போதும். ""மார்க்சிஸ்டுகளின் சதி- சூழ்ச்சி '' என்கிறார். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இடதுசாரிகள் மீது பழி போடுவதுதான் என்று அவர் இலக்கணம் வகுத்திருக்கிறார்.
அண்ணாவின் பெயரால் அமரர் எம்.ஜி.ஆர். இயக்கம் கண்டார். ஆனால் இன்றைக்கு நூற்றாண்டு கண்ட அண்ணாவின் நினைவாக உருவான மாபெரும் நூலகத்தையே மூட முயற்சிக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில், பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்த காரல் மார்க்ஸ் போன்ற மேதைகளின் வரலாறு நீக்கப்பட்டு விட்டது. எனவே இப்போது மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு எதிரான அலைவீசத் தொடங்கியிருக்கிறது.
மின்னஞ்சலில் பேராசிரியர் மகாபத்ரா ஒரே ஒரு கேலிச் சித்திரத்தைத்தான் அனுப்பினார். அதற்குத் தண்டனையா என்று அனைத்துத் தரப்பினரும் ஆர்ப்பரித்து வீதிகளுக்கு வந்திருக்கிறார்கள். இப் போது ஊரெங்கும் வீதியெங்கும் வீட்டுச் சுவர்களில் கேலிச் சித்திரங்கள் காட்சி அளிக்கின்றன. அவை அனைத்துமே மம்தாவை நையாண்டி செய்கின்றன. சித்திரம் தீட்டுபவர்கள் தங்கள் முகவரிகளையும் தெரிவித்திருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்காக காராக்கிரகம் செல்லத் தயார். கைதுசெய்து பார் என்று அவர்கள் சவால் விடுகிறார்கள்.
கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் மம்தாவைக் கண்டித்து ஊர்வலம் நடத்து கிறார்கள்.
இன்னொரு பக்கம் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது தெரியாது மம்தா மத்திய அரசிற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். மேற்குவங்க காங்கிரஸ் கட்சிக்கும் தலைவலிதான். மகாபத்ரா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களும் களம் கண்டனர்.
ஆனால் மம்தா பானர்ஜி எதனைப் பற்றியும் கவலைப்படவில்லை. இங்கே அ.தி.மு.க. ஆட்சி பீடம் ஏறியதற்கு யார், யாரெல்லாம் கரம் கொடுத்தார்கள்? அதன் வெற்றியைத் தீர்மானித்ததே தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிதான். இன்றைக்கு அந்த இயக்கம் எத்தனை எத்தனை சோதனைகளை சந்திக்கிறது.
தேர்தலில் அ.தி.மு.க.வின் பெரும் பிரச்சார பீரங்கியாக விளங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இன்றைக்கு அந்தக் கட்சியின் நிலை என்ன? முதல்வரைச் சந்திக்க தவம் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வெற்றிக்கு அணிலைப் போல் உதவிய விஜய் ரசிகர்மன்றத்திற்கு என்ன மரியாதை? தேர்தலுக்கு முன்னர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் எத்தனை முறை அ.தி.மு.க. தலைமையைச் சந்தித்தார்? ஆனால் தேர்தல் தீர்ப்பிற்குப் பின்னர் அவரால் சந்திக்கவே முடியவில்லை. அவர் தலைமையில் இயங்கிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்றைக்கு உடைக்கப்பட்டு விட்டது. போட்டி சங்கம் ஜனித்திருக்கிறது. இதே காரியங்கள்தான் மேற்கு வங்கத்திலும் அரங்கேறுகின்றன. ஆமாம்; அங்கேயும் இப்படித்தான்
thanks nakkeeran + sudhakaran,chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக