சனி, 12 மார்ச், 2022

Social media-வில் வன்மக் கருத்துகளை பதிவிட்டால்..” : முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

 கலைஞர் செய்திகள் - விக்னேஷ்  : குற்றங்களின் விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது போலிஸாரின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற- மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் சொல்றதா இருந்தா- இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை- உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.



இந்த ஆட்சி மக்களோட பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வரக்கூடிய – அந்த அடிப்படையிலே, உங்களோட கருத்துகளின் மூலமாக நான் அறிந்து கொண்டு இருக்கிறேன்.

நாங்கள் உருவாக்கிய திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாக அமைந்திருக்கின்றன என்பதை- உங்களோட எண்ணங்கள் மூலமாகத் நான் தெரிந்து கொண்டேன்.

சுருக்கமா சொல்வதாக இருந்தால் - உங்களின் மூலமாக தமிழ்நாட்டின் முழு நிலைமையை நான் அறிந்து கொண்டு இருக்கிறேன். எனவே, அரசின் சார்பில் மட்டுமல்ல- தனிப்பட்ட முறையிலும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் - எல்லாம் என்னால்தான் அப்படி என்று நினைக்கின்ற அளவிற்கு நான் நிச்சயமாக இருக்க மாட்டேன், இருக்கவும் இல்லை.

என்னைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், துறைகளின் செயலாளர்கள் இருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், ஆகிய நீங்களும் இருக்கிறீர்கள், நாம் அனைவரும் சேர்ந்ததுதான் இந்த அரசு.

இத்தனை உயிர்கள் சேர்ந்துதான்- அரசுக்கு நாம் உயிர்கொடுத்து கொண்டு இருக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்துதான் மக்களுக்கு உயிராய் - உணர்வாய் - இருந்து வருகிறோம். மக்கள் - நம்மை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க. மக்கள் - நம்மை நம்பி அதிகாரத்தையும் ஒப்படைச்சிருக்காங்க. மக்கள் - நம்மை நம்பித்தான் கோட்டையை ஒப்படைச்சிருக்காங்க.

கடைக்கோடி மனிதனோட கவலையையும் தீர்க்குற அரசா ஒரு அரசு அமையணும்; அப்படித்தான் இந்த அரசு அமைஞ்சிருக்கு.

அத்தகைய அரசுக்கு உறுதுணையா இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
“இனி Social media-வில் வன்மக் கருத்துகளை பதிவிட்டால்..” : முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

இது நமது அரசு என்ற எண்ணத்தோடு- திறந்த மனத்தோடு- நீங்க உங்க கருத்துகளை இந்த மூன்று நாட்களும் எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.

சில முக்கியமான ஆலோசனைகளை மட்டும்- நான் இங்க நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கேன்.

அரசோட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துறது குறித்தும்-சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்தும்- உங்களோட ஆலோசனைகள் அதிகமாக அமைந்திருந்தது.

* சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும்- அதனைக் கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல்துறை இயக்குநர் அவர்கள் சொன்னார்.

கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனா- சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

* அதேபோல் சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் பேசும் போது, குற்றங்கள் குறைந்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார். அதோடு அதன் விழுக்காட்டையும் எடுத்துச் சொன்னார்.

குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் உங்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது.

* சாதி மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே விரிவாகப் பேசினார்.

சாதி மோதல்களை - சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்சினை.

கிராமங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாக உருவாவதாக எஸ்.பி. அவர்கள் இங்கே பேசும் போது சொன்னார்.

படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல - படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்குற ஒரு சிலராலும் - இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.

இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்யணும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரணும். ஆக்கபூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுறதா நெல்லை எஸ்.பி. சொன்னார். அதேபோல் மற்ற மாவட்ட நிர்வாகமும் செயல்படணும்.

* இதேபோல் மத மோதல்கள் குறித்து - கன்னியாகுமரி மாவட்டக் கண்காணிப்பாளர் பேசினார்.

மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதைப் போல சிறப்புப் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமையணும்னு அவர் சொன்ன ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

ஒரு காலத்துல மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதா மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது.

எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள், இதை தடுத்தாக வேண்டும்.

* சாதி மோதல்களுக்கும் - மதப் பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருக்குறதா எல்லோரும் சொன்னீர்கள். அது உள்ளபடியே முழுமையான உண்மை தான்.

இது நவீன தொழில்நுட்ப யுகம். இந்தத் தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம்.

சாதி - மத வக்ரம் பிடிச்சவங்க அழிவுக்குப் பயன்படுத்தி-சமூகத்துல குழப்பம் ஏற்படுத்தப் பாக்குறாங்க. இவங்கள முளையிலேயே நாம் களையெடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட பதிவுகளை போடுறவங்க மேல உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சோஷியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்ற- திருவள்ளூர் எஸ்.பி.யின் கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

ஒன்றிய அரசில் இருப்பதைப் போல ‘National Media Analytics Center’, ‘Social Media Lab’ - ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.

சோஷியல் மீடியா மூலமா நடக்குற இந்த வன்மங்களுக்கு- எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தனியா ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி- அறிக்கை தாக்கல் செய்யக் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

* வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பேசும் போது, கைதிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர் செய்தால் நேரமும் மிச்சம், செலவும் மிச்சம் என்று சொன்னார். அதனைச் செயல்படுத்தலாம். நல்ல யோசனை.
“இனி Social media-வில் வன்மக் கருத்துகளை பதிவிட்டால்..” : முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

* நாகை ஆட்சியரும், கண்காணிப்பாளரும் சொன்ன சுருக்குமடி வலை பிரச்னை குறித்து-

அரசு அதிகாரிகள் மட்டத்துல முழுமையான ஆய்வு நடத்தி இதுகுறித்து தீர்வு காணப்பட வேண்டும்.

* போக்சோ வழக்குகள் அதிகமாகி வருவது குறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பேசினார். அங்கு மட்டுமல்ல, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோல் செய்திகள் வெளியாகின்றன.

ஏதோ இப்போதுதான் அதிகம் நடக்கிறது என நினைக்க வேண்டாம், இப்போது தான் துணிச்சலாக வந்து புகார்களைத் தருகிறார்கள்.

இதற்கு உரிய நீதி கிடைக்கச் செய்வது உங்கள் தலையாய கடமையாகும். குறிப்பாக, இத்தகைய வழக்குகளில் தாமதங்கள் இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன்.

* தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகள்ல ரவுடிகள் அதிகம் இருக்குறதா தாம்பரம் ஆணையரும், காஞ்சிபுரம் எஸ்.பி.யும் சொன்னார்கள்.

அத்தகைய இடங்கள்ல சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மிகமிக முக்கியம்.

அதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து டாக்குமென்ட் செய்ய வேண்டும்.

அமைதியான மாவட்டங்களில்தான்- அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள்.

கல்குவாரிகளால் ரவுடிகள் வளர்கிறார்கள்னு தாம்பரம் ஆணையர் குறிப்பிட்டு சொன்னார். கல்குவாரி தொழிலால் ரவுடிகள் வளர மாட்டாங்க. தொழில் போட்டி காரணமாக அப்படி உருவாகலாம். அவங்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது.

அதேபோல் ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை - என்று பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது.

குடிசைப் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்குறதா அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பேசுகின்றபோது இங்கே சொன்னார். இதுபோன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது.

ரவுடிகளைக் கட்டுப்படுத்த- ’வெளிச்சம்’, ‘உதயம்’, ‘விடியல்’ ஆகிய திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தாம்பரம் ஆணையர் சொன்னார். அதனை மற்றவர்களும் பின்பற்றலாம்.

* சிறார் திருமணங்களைத் தடுக்கணும்னு தஞ்சாவூர் எஸ்.பி. சொன்னார்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் அது நடக்கிறதுன்னு நினைக்கிறேன். அதனையும் முழுமையாக தடுக்க சமூகநலத்துறையும், மாவட்ட ஆட்சியர்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

State-wide sexual offenders registry - உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை காலப் போக்கில் எந்த பணிகளுக்கும் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னது சரியானதுதான்.

தவறு செய்த யாரும் தண்டனையில் இருந்து தப்பி விடக் கூடாது.

* கடலூர் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், அது இனி ஏற்படாமல் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சொன்னார்.

இனி அத்தகைய வெள்ளச் சூழல் ஏற்படாத வகையில் திட்டங்களை தீட்டியாக வேண்டும்.

சாலை விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதேபோல், பட்டாசு மற்றும் தீ விபத்துக்களை தடுப்பதிலும், அதனுடைய பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

* போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துறது குறித்து- நாமக்கல் எஸ்.பி. உள்பட பலரும் பேசினார்கள்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

NSS மற்றும் NCC மாணவர்களுடன் இணைந்து, போதைப் பொருளுக்கு எதிரான செயல்பாடுகளைக் காவல் துறை மேற்கொள்ளலாம்.

* காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் இயக்குநர் அவர்கள் பேசும்போது- உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து பல்வேறு தகவல்களைக் கூறினார்.

கடலோர மாவட்டங்களைக் கண்காணிப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நம் மாநிலத்துக்குள் ஊடுருவி விடாமல் தடுப்பதும் மிகமிக முக்கியமானதாகும்.

அதேபோல் மத அடிப்படைவாதம் குறித்தும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒட்டுமொத்தமாக எல்லாரும் அமைதியை நிலைநாட்டுவதற்காக பேசி இருக்கிறீர்கள். அச்சமில்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் பேசி இருக்குறீங்க.

*குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத் தரும் துறையா இல்லாமல்- குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்குற துறையா- காவல் துறை மாற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், விரும்புகிறேன். உங்களோட எண்ணம் அதற்கேற்ற வகையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அதேபோல்- அரசுத் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து- அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் விரிவாக விளக்கினார்கள்.

ஒரே மாதிரியான கருத்தைச் சொல்லாமல் - ஒவ்வொருவரும் ஒரு துறையைப் பற்றிச் சொன்னது மிகச் சிறப்பாக இருந்தது.

* சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை

* மக்களைத் தேடி மருத்துவம்

* நமக்கு நாமே

* சமத்துவபுரம்

* அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

* அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம்

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

* பாதாளச் சாக்கடைத் திட்டங்கள்

* நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்

* கலைஞர் வீட்டுவசதித் திட்டம்

- ஆகிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆட்சியர்கள் அனைவரும் விவரங்கள் அளித்தீர்கள்.

உங்களோட நிர்வாக எல்லைக்குள் இத்திட்டங்களை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

* உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்து- கோவை மாவட்ட ஆட்சியர் பேசினார்.

பல்வேறு முன்னெடுப்புகள், கோவை மாநகராட்சியில் நடந்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவாணி தண்ணீர் குறித்து அரசு விரைவில் முடிவுகள் எடுக்கும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.

‘முனிசிபல் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலர்கள்’ நியமனம் குறித்தும் ஆலோசித்து முடிவெடுப்போம்.

* திருச்சி மாவட்ட ஆட்சியர் பேசும்போது ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தைப் பற்றி பேசினார்.

வருவாய், ஊரக வளர்ச்சி, காவல்துறை ஆகிய மூன்று துறை தொடர்பான மனுக்கள்தான் 80 விழுக்காடு வருவதாகச் சொன்னார்.

இந்த மூன்று துறையும்- மாவட்டங்களில் முறையாகச் செயல்பட்டால்- மனுக்கள் வருவது நிச்சயம் குறையும். இதனை- இந்த மூன்று துறையைச் சேர்ந்தவங்களும் உன்னிப்பாக கவனிக்கணும்.

* மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர்-

அவர்களுக்கான தனியான வேலை வாய்ப்புகளை உருவாக்கணும்னு சொன்னார்.

புதிதாக அவர்களுக்காக தனியான வேலைவாய்ப்புகள் உருவாக்குறதவிட- இருக்குற வேலைவாய்ப்புகளில் எதில் எல்லாம் அவர்களைப் பங்கெடுக்கச் செய்ய முடியுமோ- அதில் எல்லாம் அவர்களை பங்கெடுக்கக் கூடிய சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.

நில அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உள்பட பலரும் பேசினார்கள்.

நீர் நிலைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது குறித்து இங்கு பெரிய விவாதமே நடந்தது.

நீர் இருந்தாலும் - இல்லை என்றாலும் அது நீர் நிலைதான். எனவே, அது ஆக்கிரமிப்பு என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது.

நீர்நிலைகளை பராமரிக்காத காரணத்தால் - வெள்ளக் காலங்களில் நாம் அடையும் பாதிப்புகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பதை நாம் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்.

    மாநிலத்தின் வனப் பரப்பினை 33 சதவிகிதத்திற்கு உயர்த்துவது குறித்து பல்வேறு நல்ல ஆலோசனைகளைச் சொன்னீர்கள். அதை எல்லாம் நடைமுறைப்படுத்த இந்த அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யும்.

    வனத் தீயினைக் கட்டுப்படுத்த வனத் துறையின் வீரர்களுக்கு உரிய தீத் தடுப்புக் கருவிகள் வழங்கப்படுவதோடு, துரதிருஷ்டவசமாக அதில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    வன விலங்குகள் சிகிச்சைக்காக கால்நடைப் பராமரிப்புத் துறையில் தனி அலகு ஏற்படுத்தி பயிற்சிகள் அளிக்கப்படும்.

* கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்தவங்களுக்கு இழப்பீடு என்பது உடனடியாக வழங்கப்படணும். இதில் எந்த காரணத்தைக் கொண்டும் காலதாமதம் வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

* வருவாய் துறையும் தகவல் தொழில் நுட்பத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதை உள்ளபடியே நான் வரவேற்கிறேன்.

மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும்.

* குழந்தைத் திருமணங்கள் இருப்பதாக விழுப்புரம் ஆட்சியர் இங்கு தகவல் தந்தார். குழந்தை திருமணத்தை அனுமதிக்கக் கூடாது. அது தொடர்பாக அந்தக் குழந்தைகளே தகவல் தந்தார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். ரத்தசோகை, சத்துக்குறைவான குழந்தைகளை கண்டறிய வாட்ஸ்அப் குழு தொடங்கி இருப்பதாக அவர் சொன்னது உள்ளபடி அது வரவேற்கத்தக்கது.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட பண்ணைக் குட்டைகள், பசுமைக் குன்றுகள் திட்டத்தை மற்ற மாவட்டங்களும் பின்பற்றலாம்.

வளர்ப்பவர்களே ஆடு, கோழிகளை இடைத்தரகர்கள் இன்றி விற்க உழவர் சந்தைகள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

* இந்திராகாந்தி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளை சரிசெய்து தர வேண்டும் என்ற தர்மபுரி ஆட்சியரின் கோரிக்கையை- நிதித்துறையின் பரிசீலனைக்கு நிச்சயமாக அதுவும் நிறைவேற்றப்படும்.

* புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு உடனடியாக இடம் பார்த்துக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* சிறு, குறு நிறுவனங்களை புதிதாக உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.

சிறு, குறு நிறுவனங்களை அதிகமாக உருவாக்குறதுல அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும், அதுதான் சாமானியர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் துறை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய அரசின் சார்பில் தரப்பட்ட தொகை குறைவாக இருக்கிறது என்று நீர்வளத்துறை செயலாளர் சொன்னார். நிச்சயமாக அதுவும் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படக்கூடிய நிதியை வழங்குவோம்.

* அரசுத் துறைகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட வேண்டும்.

அனைத்து மின்னணு சேவை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் சீர்திருத்தப்பட வேண்டும். பல இடங்களில் மிக மோசமானதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அனைவரும் அதனை போய்ப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதிகளில் மாணவர்கள் தங்கும் எண்ணிக்கையை அவ்வப்போது உறுதிசெய்வதோடு, சென்னை போன்ற மாநகரங்களில் தேவைக்கேற்ப கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.

* ’நமக்கு நாமே’, ‘சமத்துவபுரம்’, ‘தொகுதி மேம்பாட்டு நிதி’ - ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அவசியம்னு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர் பேசும் போது குறிப்பிட்டுச் சொன்னார்.

பட்டா மாறுதல் போன்ற வருவாய்த் துறை இனங்களில் சுணக்கம் ஏற்படாத வண்ணம் விரைவில் நடவடிக்கை எடுக்கத் தேவையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும்.

தேங்கியுள்ள பணிகளை விரைந்து முடிக்கணும்னு சொன்னார்.

அந்த மூன்று திட்டங்களை மட்டுமல்ல-

அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்கணும்.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

* மக்களைத் தேடி மருத்துவம்

* வேளாண்மை நிதிநிலை அறிக்கை

* இல்லம் தேடி கல்வி

* நான் முதல்வன்

- இது போன்ற திட்டங்களில் அதிக கவனத்தை நீங்கள் செலுத்தவேண்டும்.

கல்வியும் - சுகாதாரமும் இந்த அரசின் இரு கண்கள்!

சாலை வசதி, மின்சாரம், உணவுப் பொருள் வழங்கல் ஆகியவை அடுத்த இலக்கு!

இவற்றில் எந்த தடங்கலும் இருக்கக் கூடாது. இதற்காகவே நாம் இருக்கிறோம்.

கோடிக்கணக்கான மக்களோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது இது. கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் இவை.

இவை அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு உங்களின் இரண்டு கைகளுக்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் எந்த மாதிரி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை-

நாள்தோறும் நீங்கள் கண்காணித்தால் போதும்- அந்தத் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கி விடும். அனைவரும் dashboard உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அதை நான் பார்க்கிறேன். நீங்களும் உங்களது dashboard-இல் உங்களது பணிகளை செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த பணிகளும் இருக்கட்டும். செய்ய வேண்டிய பணியும் இருக்கட்டும்.

எந்த உயரத்தை அடைவதாக இருந்தாலும் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். ஒவ்வொரு நாளும் அனைத்துத் திட்டங்களையும் உயரத்துக்கு நகர்த்துவோம். அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உயர்த்துவோம்.

எனக்கு நீங்க ஒத்துழைப்புத் தாங்கனு நான் கேட்கல; உங்களோட கனவுகளை நிறைவேத்த என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அரசியல் என்ற சொல்லில் அரசு இருக்கிறது. அரசியலும் - அரசு இயலும் இணைந்து நமக்கான வளமான தமிழ்நாட்டை அமைப்போம். இது உங்களால் மட்டும்தான் முடியும். முன்பு இருந்ததை விட கடந்த மூன்று நாட்களில் நான் அதிகமான உற்சாகத்தோடு இருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவர் பேச்சும் எனக்கு டானிக்கை, சக்தியை கொடுத்திருக்கிறது, ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது, ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.

ஒருவரை ஒருவர் நாம் புரிந்துகொள்ள இந்த மூன்று நாள் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது.

இதனை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த தலைமைச் செயலாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டிமன்றங்களின் நடுவராக இருந்தவர் என்பதால் அனைவருக்கும் பேச அனுமதியும் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் வைத்தார் தலைமைச் செயலாளர் அவர்கள். அதேபோல் காவல்துறை இயக்குநர்க்கும் நன்றி.

பங்கேற்ற துறையின் செயலாளர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தக் கூட்டத்தில் திட்டமிடுதல்கள் குறித்து அதிகம் பேசினோம். அடுத்த நடக்கக் கூடிய கூட்டத்தில் சாதனைகளைப் பற்றி அதிகம் பேசுவோம்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை: