Logi - e Oneindia Tamil : முழு நாட்டையே கலங்க வைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த ஹத்ராஸில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். ஆனாலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி 2020 செப்டம்பர் 29-ம் அப்பெண் உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் இறுதி வாக்குமூலத்தில் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த சந்தீப், லவகுஷ், ராம்குமார், ரவி ஆகியோர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து உத்திரப்பிரதேச போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிந்து, அந்தப் பெண் வாக்குமூலத்தில் கூறிய நால்வரையும் கைது செய்தது. அந்த பெண் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல் துறையினர், அந்த பெண்ணின் குடும்பத்தின் அனுமதி இன்றி, அவசர அவசரமாக பெண்ணின் உடலை நள்ளிரவில் தகனம் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உத்தரப்பிரதேச ஏடிஜிபி பிரசாந்த் குமார், "தடையவியல் முடிவில் பாலியல் வன்கொடுமைக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார். ஹத்ராஸ் எம்.எல்.ஏ ராஜ்விர் சிங், கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு ஆண்களுக்கு ஆதரவாக, 'எங்கள் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை' என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாறியது. வழக்கை விசாரித்த சிபிஐ 2000 பக்க அறிக்கையை சமர்பித்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 (கொலை), பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 376 ஏ (தொடர்ச்சியான பாலியல் வன்முறைக்கு ஆளானதால் மரணத்தை ஏற்படுத்தியதற்கான தண்டனை) மற்றும் பிரிவு 376 டி (கும்பல் வன்கொடுமை) மற்றும் பிரிவு 3 (2) (பிரிவு) v) எஸ்சி / எஸ்டி ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் களம் இறங்கியது. பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி நேரில் சென்று அந்த குடும்பத்துக்கு ஆதரவு தெரித்தனர். பெண்ணின் நீதிக்காக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தைக் கையில் எடுத்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என போராடியது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தியது.
ஹத்ராஸ் வழக்கில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால், இந்த தேர்தலில் பாஜக அங்கு வெற்றி பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், பாஜக வேட்பாளர் 57 வயதான அஞ்சுலா சிங் மஹுவார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி வேட்பாளர்களை விட 1,52,718 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் பாஜகவின் ஹரி சங்கர் மஹோர் 70,661 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். ஆனால் இந்த தேர்தலில் ஹத்ராஸ் தொகுதியில் பாஜக ஒன்றரை லட்சம் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வீசும் பாஜக அலையில் ஹத்ராஸ் விழக்கு காணாமல் போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக