RS Prabu : கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கங்களின் வெற்றியும், விவசாயிகளின் சுயநிதி நீர் மேலாண்மைத் திட்டங்களின் எதிர்காலமும்.
கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கம் என்பது விவசாயிகள் ஒன்றிணைந்து ஆற்றுக்கு அருகில் கிணறு வெட்டி, மின் இணைப்பு பெற்று, இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்துக்கு சொந்த செலவில் குழாய் அமைத்து தண்ணீரை எடுத்துச்சென்று பயன்படுத்துவதாகும். இதை Lift Irrigation என்று கோப்புகளிலும், "ஸ்கீம் தண்ணீர்" என்று பேச்சு வழக்கிலும் அழைக்கிறார்கள்.
இதன் நிர்மாணம், பராமரிப்பு, ஆட்கள் சம்பளம், மின்சார கட்டணம், எதிர்பாராத செலவினங்கள் என அனைத்தும் விவசாயிகள் வைத்திருக்கும் சங்கத்தாலேயே நிர்வகிக்கபடும். அரசாங்கம் ஒப்புதல் தருவதோடு சரி; எந்தவித நிதி உதவியும் கிடையாது.
காவிரியாற்றில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டம் இது. ஒரு ஸ்கீம் என்பது 300 முதல் 500 ஏக்கர் பரப்பளவுக்குத் தண்ணீர் எடுத்துச்சென்று பாசன வசதி செய்கிறது.
1995-99 காலகட்டத்தில் ஒரு ஏக்கருக்கு தண்ணீர் கொண்டுவர ஒரு இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்தனர். இன்று 12-15 இலட்சம் வசூலிக்கின்றனர்.
ஆற்றுக்கு அருகில் பெரிய கிணறு வெட்டி 150 குதிரைத்திறன் கொண்ட மின் எக்கிகளை நிறுவி, தனி மின்மாற்றி அமைத்து நீரை எடுத்து பெரிய குழாய்களில் அனுப்புகின்றனர். ஒரு மின் எக்கி எட்டு மணி நேரம் வீதம் மூன்று எக்கிகள் மின்சாரம் இருக்கும்போதெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும். Spare motor, குழாய்கள், பராமரிப்புத் தளவாடங்கள், 24 மணி நேரமும் கண்காணிக்க ஆட்கள் என தொழிற்சாலை கணக்காக நடத்தப்படுகின்றன.
ஏக்கருக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டிவிட்டால் அந்தந்த பகுதியின் முக்கிய ஊர்களில் பிரதான தண்ணீர் தொட்டி அமைப்பதுவரை சங்கம் செய்து கொடுக்கும். அங்கிருந்து அவரவர் தோட்டங்களுக்கு விவசாயிகள் சொந்த செலவில் குழாய் பதித்து எடுத்துச் செல்கின்றனர்.
மின்சார கட்டணம், லஸ்கர் எனப்படும் பாசன நீர் மேற்பார்வையாளர்களின் ஊதியம், எலக்ட்ரீசியன், அலுவலக நிர்வாக செலவுகள் என எல்லாவற்றையும் கணக்கிட்டு தெரிவிக்கப்படும் மாதாந்திர கட்டணத்தை சங்க அலுவலகத்தில் விவசாயிகள் செலுத்திவிடுகின்றனர்.
அவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள், கோடை காலத்தில் வரும் கொஞ்சூண்டு நீரையும் எடுப்பதில் ஒரு சங்கத்துக்கும் இன்னொரு சங்கத்துக்கும் வரும் பிரச்சினை என எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அரசு நிர்வாகம் வந்து நேரடியாக பிரச்சினைகளில் தலையிடாத வண்ணம் low profile-ஆக பார்த்துக் கொள்கிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி வந்தால் நிவாரணம், வெள்ளம் வந்தால் நிவாரணம், சாகுபடி செய்ய விதை முதல் ஒவ்வொரு இடுபொருளுக்கும் மானியம், விளைபொருளைக் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம், விளைந்ததை மூடி வைக்க தார்பாய் வரைக்கும் அரசாங்கம் ஏதாவது ஒரு திட்டம் மூலம் ஆண்டுதோறும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நெற்களஞ்சியம் என்று பெருமை பீற்றினாலும் விதை நெல் முழுவதும் தாராபுரம், உடுமலையில் இருந்துதான் செல்கிறது. அவற்றைக் கண்காணிப்பது வேளாண்மைத்துறையின் முக்கியமான பணிகளுள் ஒன்று.
அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சிக்காரர்களுடையது. நெல், மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரங்களை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா வரைக்கும் வாடகைக்கு விடுவதில் monopoly-யை ஆத்தூர் சுற்றுவட்டார தொழல்முனைவோர்களே வைத்திருக்கின்றனர்.
நெல் உற்பத்தி செய்ய டெல்டா மாவட்டங்கள் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.
Lift irrigation மூலம் தண்ணீர் வந்த பிறகு ஓணான் முட்டையிடாத பூமியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு போகம் நெல் விளைவிக்கின்றனர். மீதி ஆறு மாதம் தீவிர விவசாயம் செய்கின்றனர்.
2000-களில் - நாமக்கல் அருகில் - எங்கள் ஊர்களின் சுற்றுவட்டாரங்களில் ஸ்கீம் தண்ணீர் வந்த பிறகு ஒரு விவசாய புரட்சியே ஏற்பட்டது என்று சொல்லலாம். சும்மா பெருமைக்காக சொல்லவில்லை.
கடலை அல்லது சோளத்தை ஒரு போகம் எடுத்தபிறகு மரவள்ளி நடவு செய்துவிட்டு லாரிக்குச் சென்றுவிடுவார்கள்.
ஆற்றுத்தண்ணீர் வந்த பிறகு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது, ஆழ்துளைக்கிணறுகள் வந்தன. முழுநேர விவசாயம் செய்ய ஆரம்பித்தவர்கள் பத்து வருடங்களில் ஊருக்குள் இருந்த ஓட்டு வீடுகளை விட்டுவிட்டு தோட்டத்திலேயே வீடு கட்டி குடியேறினர்.
எப்போதுமே வறண்ட பூமியில் இருந்து வருபவர்களுக்குத்தான் சிக்கனம், சமயோசிதம், விரைந்து முடிவெடுக்கும் திறன், அதிக ரிஸ்க் எடுக்கும் குணம், புதியனவற்றுக்கு மாறும் வேட்கையெல்லாம் நிறைய இருக்கும்.
உறுதியான தண்ணீர் வரத்து இருப்பதால் நிலத்தை அடமானம் வைத்து, விவசாயத்தோடு நவீனமயமாக்கப்பட்ட கோழிப்பண்ணைகளையும் அமைத்தனர்.
இந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் நிறைய வந்தன. படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாரிசுகளைப் படிக்க வைத்து ஊரைவிட்டு வெளியேற்றினார்கள்.
விவசாயம் இலாபகரமாக இல்லை என்று ஒருபுறம் சொல்கிறார்கள். இன்று ஏக்கருக்கு 15 இலட்சம் பணம் கட்டி தண்ணீர் எடுத்துவர இன்னொருபுறம் விவசாயிகள் வரிசையில் நிற்கிறார்கள். மூன்று இலட்சம் கட்டி மின் இணைப்பு வாங்க அலைமோதுகிறார்கள்.
ஒரு ஏக்கரில் ஆற்றுத்தண்ணீர் பாய்ந்தால் அருகில் உள்ள கிணறுகள் மூலம் ஏழெட்டு ஏக்கருக்கு மறைமுகமாக தண்ணீர் கிடைக்கிறது. உற்பத்தி உயர்கிறது, உயர்ந்துள்ளது.
வசதியுள்ள விவசாயிகள் கொண்டுவரும் நீரால் அருகிலுள்ள பல வசதியற்ற விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்.
பவானி ஆற்றில் உள்ள நீரேற்றுப் பாசன குழுக்கள் இருபது, முப்பது ஏக்கர் பாசனம் செய்யும் micro level அமைப்புகள். காவிரியாற்றின் ஓரத்தில் உள்ளவை 300 முதல் 500 ஏக்கர் பாசனம் செய்யும் self financed, industrial grade lift irrigation projects.
இதில் அரசாங்கத்தின் பங்கு மின் இணைப்பு, சாலைகளை உடைத்து குழாய் பதிப்பதற்கான ஒப்புதல் தருவது மட்டுமே.
ஆற்றுக்கு அருகில் அவர்களே நிலம் வாங்கி கிணறு வெட்டிக்கொள்கிறார்கள். சாலை ஓரத்தில் குழாய் பதித்துச்சென்று, நீர் வழங்கும் தொட்டிகள் ஒவ்வொன்றையும் தனியார் நிலத்துக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்றனர்.
இன்றைய காலகட்டத்துக்கான படிப்பினை என்னவென்றால் மக்களே ஒன்றிணைந்து, சொந்த பணத்தைப் போட்டு, அவர்களுடைய தேவைக்காக அவர்களாகவே நடத்தினால் கூட்டுறவு சங்கங்கள் வெற்றிகரமானவையே.
அரசு உதவி பெற ஆரம்பித்தால் அதிகாரிகள் தலையீடு வரும்; பின்னாலேயே அரசியல் தலையீடும் வந்து சேரும். பின்னர் அவற்றின் இயங்குதிறன் தொய்வடைந்துவிடும் என்பதே.
சொந்த தேவைக்கு என்றால் எந்த அளவுக்கு விவசாயிகள் ரிஸ்க் எடுப்பார்கள் என்று பார்ப்போம்.
படத்தில் ஆட்கள் துளையிட்டு குழாய் அமைப்பதை ஒருமுறை நன்றாக பார்த்துவிடுங்கள்.
2017-இல் வரலாறு காணாத வறட்சி வந்தபோது ஆற்றில் வந்த கொஞ்சூண்டு கழவுநீரையும் எடுக்க கடும் போட்டி. பல வருடங்களாக மணல் அள்ளியதால் ஆறு பத்தடிக்கு கீழே போய்விட்டது. 1995-99 காலகட்டத்தில் ஆற்றுக்குள் போடப்பட்ட நீரேற்று சங்கங்களின் நீர் உறிஞ்சு குழாய்க்கு தண்ணீர் எட்டவில்லை.
கரையைத் தோண்டி குழாய் பதிக்க வனத்துறை ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக ஒரு நூதன ட்ரில்லிங் பாணியைக் கொண்டு வந்தனர். அதன்படி கிணற்றை ஆழமாகத் தோண்டி சைடு-போர் போடுவது போல துளையிட்டனர்.
நான்கு அடி நீளமுள்ள குழாய்களைத் தருவித்து அதை ஹைட்ராலிக் ஜாக்கி வைத்து உள்ளே தள்ள வேண்டியது. பின்னர் மூன்றடி விட்டமுள்ள அந்த குழாய்க்குள் ஒரு சிறிய தள்ளுவண்டியில் உட்கார்ந்து கையாலேயே உந்தித் தள்ளி சென்று துளையிட்டு வெடி வைக்க வேண்டியது; திரும்பவும் மண்ணையும் கற்களையும் அள்ளி சிறிய தள்ளுவண்டி சட்டியில் போட்டு கயிற்றால் இழுத்து வெளியே எடுத்து கிரேன் மூலம் மேலே கொண்டு வர வேண்டியது.
பின்னர் வெளியில் இன்னொரு நான்கு அடி நீளமுள்ள குழாயை வெல்டிங் செய்து ஜாக்கி மூலம் உள்ளே அழுத்துவது. இப்படியே நானூறு அடி தூரத்துக்கு குழாய்களைச் சொருகி ஆற்றுக்குள் இறங்கும்படி அமைத்தனர். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவு செய்தனர்.
இவ்வளவும் எதற்காக? just தண்ணீரை எடுத்துச்சென்று விவசாயம் செய்ய. இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். தண்ணீரின் அருமை அது இல்லாத ஊர்க்காரர்களுக்குத்தான் தெரியும்.
இப்போதும் பல வாய்க்கால்களில் கான்கிரீட் போடுவதை கடைமடைக்காரர்களும், மேட்டாங்காட்டு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் ஆதரிக்கின்றனர்.
பாசன வாய்க்கால்களில் கான்கிரீட் போடக்கூடாது, அளப்பதற்கு மதகு வைக்கக்கூடாது என்று சொல்பவர்களிடம் எந்த நியாயமான காரணங்களும் இருப்பதில்லை. நாங்கள் மாற மாட்டோம், இவ்வளவு காலமாக இருந்தது இனிமேலும் அப்படியே இருக்க வேண்டும், என்கிற ஒரு விதமான மேட்டிமைத்தனம்தான் தெரிகிறது. அவர்களுடைய தண்ணீரை யாரும் மறுக்கவில்லை. பாரம்பரிய பாசன உரிமை என்ற பெயரில் நவீனத்துக்கு மாறாமால் அழிச்சாட்டியம் பண்ணுவதை பலவிதமாக உருட்டி நியாயப்படுத்துவதைப் பார்க்க முடியும்.
படத்தில் உள்ள நீர் பிரிக்கும் தொட்டியைக் கவனமாகப் பாருங்கள். ஒரு ஏக்கருக்கு பணம் கட்டியவருக்கு ஒரு காடி, இரண்டு ஏக்கருக்கு இரண்டு காடி, மூன்று ஏக்கருக்கு கட்டியவருக்கு மூன்று காடி என்று இருப்பதைக் காணலாம்.
மேலே வரும் தண்ணீர் சமமாக சென்று அந்தந்த காடிக்குள் இறங்கிவிடுகிறது. 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் இந்த தொட்டிகளை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம், இரசமட்டத்தை வைத்து அளந்தும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற வெளிப்படைத்தன்மையை வைத்திருக்கிறார்கள்.
அதிக உயரத்தில் HDPE குழாய்களுடன் காணப்படும் தொட்டி கடந்த பத்தாண்டு காலத்துக்குள் வந்த நவீன கட்டுமானம்.
உண்மையான குடிமராமத்து என்பது அந்தந்த பகுதி பாசன வாய்க்கால், வழிமுறைகளை விவசாயிகளே இணைந்து அவர்களது சொந்த செலவில் பராமரிப்பதாகும்.
இனிமேல் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் அதெல்லாம் சாத்தியமா, விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வி வருகிறது.
எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதிலாக, பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக இன்று நம் முன்னால் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கங்களே அதற்கு சாட்சி.
கட்டுரையும், புகைப்படமும்:
ஆர். எஸ். பிரபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக