புதன், 9 மார்ச், 2022

உ.பி.யில் பாஜகவுக்கு கடும் பின்னடைவா? 2017 தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளை பறிகொடுக்கும்

உத்தர பிரதேச தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது பாஜக தோல்வியை நோக்கி செல்கிறது என்று சில கணிப்புக்கள் கூறுகிறது அகிலேஷ் யாதவ ஆட்சியை பிடிக்கிறார் என்று அந்த ரகசிய கணிப்புகள் கூறுகிறது

 Mathivanan Maran  -   Oneindia Tamil  :; லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதுதான் பொதுவாக எக்ஸிட் போல் தெரிவிக்கும் முடிவுகள். ஆனால் 2017 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக சுமார் 100 தொகுதிகள் வரை பறிகொடுத்துதான் ஆட்சியை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு மொத்தம் 202 இடங்கள் தேவை. 

2017 சட்டசபை தேர்தலில் 384 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 312 இடங்களில் வென்றது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி இமாலய வெற்றியை சூட்டிக் கொண்டது பாஜக.
மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அதாவது பெரும்பான்மைக்கு தேவையானதை விட 100 தொகுதிகளைக் கூடுதலாக பெற்று அரியாசனத்தில் பாஜக அமர்ந்தது. 

முதல்வராக தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள், வன்முறைகள், போராட்டங்கள் என எதிர்கொண்டது உ.பி. பாஜக அரசு. உ.பி.யில் ஜாதிய அரசியலை சமன் செய்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது என்பது பாஜகவின் மேலிட விருப்பமாக இருந்தது. ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., யோகி ஆதித்யநாத்தை அப்படி ஒன்றும் எளிதாக விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் அரியாசனத்தில் இருந்து யோகி ஆதித்யநாத்தை அகற்ற முடியவில்லை.



இப்படி கடும் அதிருப்திகளை எதிர்கொண்டதாலேயே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் என்னதான் உ.பி.யில் பாஜக ஆட்சியை தக்க வைத்தாலும் 2017 தேர்தலில் வென்ற தொகுதிகளில் 100 இடங்களை இம்முறை இழக்கும் என்று ஆரூடம் தெரிவித்தன. தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளும் கூட இதனையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகவுக்கு 288-326 இடங்கள் கிடைக்கும் என கணித்திருக்கின்றன. ஆனால் இதர 9 நிறுவனங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு இம்முறை அவ்வளவு இடங்கள் கிடைக்காது.. சுமார் 100 தொகுதிகளை பாஜக இழக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. அதிலும் இந்தியா டிவி கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் நிறுவனமானது பாஜகவுக்கு 182-220 இடங்கள் என ஜஸ்ட் பெரும்பான்மைதான் கிடைக்கும் என்கிறது.

உ.பி.யில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை தெரிவித்த கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்: ஏபிசி நியூஸ்- சிவோட்டர் 228-244; இடிஜி ரிசர்ச் 230-245; இந்தியா நியூஸ் 222-260; இந்தியா டிவி 240-250; நியூஸ்24 294; நியூஸ் எக்ஸ் 211-225; ரிபப்ளிக் பி மார்க் 240; டைம்ஸ் நவ் 225; டிவி9 மராத்தி 211-225; ஜி நியூஸ் 223-248. ஆக என்னதான் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து உ.பி.யில் ஆட்சியை தக்க வைத்தாலும் அது தனது பலத்தை பறிகொடுக்கிறது என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது. ஆகையால் பாஜக பெரும் மகிழ்வோடு கொண்டாடக் கூடிய வெற்றி அல்ல.. 2024 லோக்சபா தேர்தலுக்கான எச்சரிக்கை மணியாகவே இதனை பாஜக பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை: