Vigneshkumar - Oneindia Tamil : சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து அமெரிக்கா நாராயணன் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு வலுவான கம்பேக்கை கொடுக்க முடியும் என 5 மாநில தேர்தலைச் சந்தித்த காங். கட்சிக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த பேச்சுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ள நிலையில், பலரும் தலைமை குறித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதில் காங். கட்சி வலுவாக இருந்ததாகக் கருதப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பஞ்சாபில் அக்கட்சியால் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. முதல்வர் சரண்ஜித் சிங். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரும் தோல்வியைத் தழுவினர். கோவாவில் வெறும் 11 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
உபி-இல் பிரியங்கா காந்தி நேரடியாகக் களமிறங்கி 2 ஆண்டுகளாக வேலை செய்த போதிலும், 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் காங். தோல்வியையே சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங். தலைமை குறித்த பேச்சு மீண்டும் எழத் தொடங்கி உள்ளது. குறிப்பாகச் சிலர் வெளிப்படையாகவே தலைமை குறித்துப் பேசத் தொடங்கிவிட்டனர்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு காங். செய்தித்தொடர்பாளர் அமெரிக்கா நாராயணன் கூறுகையில், "இந்த தோல்விக்கு ஐந்து மாநிலங்களின் தலைமை, ராகுல், பிரியங்கா அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ராகுல் காந்தி மிகவும் நல்லவர். ஆனால். வல்லவர் இல்லை. அவரை வேண்டாம் என்று மக்கள் நினைப்பதால், நேரு குடும்பத்தினர் காங். கட்சியில் விலகி இருக்க வேண்டும். நான் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவன். நானே சொல்கிறேன், நேரு குடும்பத்தினர் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ராகுல் காந்தியின் தலைமைப் பண்பு, நிர்வாகத் திறன் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் நபர்கள் பட்டியலில் இருந்து அமெரிக்க நாராயணன் நீக்கப்படுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். காங். கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாகப் பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாகக் கருத்துகளைத் தெரிவித்து வருவதால் அவர், நீக்கப்பட்டுள்ளதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விளக்கம் கேட்காமல், 30 வருடமாகக் கட்சிக்குச் சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ் கொள்கைக்கு எதிராகப் பேசியது என்ன காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி விளக்க வேண்டும். கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் காங்கிரசை காப்பாற்றுவோம் என்றே!" என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக